வாரிசு – துணிவு ரிலீஸ்: ஒரே திரையரங்கில் இரண்டு படங்களின் காட்சிகளா?

அஜீத் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன.

ஜில்லா - வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜீத் - விஜய் நடித்த திரைப்படங்கள் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் வெளியாகும் திரையரங்குகள் தற்போது விழாக்கோலம் பூண்டுவருகின்றன.

ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் ஒரே படத்தை வெளியிடும் போக்குவந்த பிறகு கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும்போது மற்றொரு நடிகரின் திரைப்படம் வெளியாவது தவிர்க்கப்பட்டுவந்தது. இருந்தபோதும் இந்த ஆண்டு விஜய் - அஜீத் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,100 திரையரங்குகள் செயல்படும் நிலையில், ஒவ்வொரு திரைப்படமும் எத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றன என்ற தகவல்களில் தெளிவு இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரையரங்குகள் இரு படங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட சரிபாதியாக பிரித்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இரு திரைப்படங்களும் சுமார் 480 திரையரங்குகளில் வெளியாகக்கூடும்.

விஜய், அஜீத், ரஜினி, கமல் படங்களுக்கு பெரும்பாலும் அதிகாலைக் காட்சி இருக்கும். ஆனால், தற்போது ஒரே நேரத்தில் இரு படங்களும் வெளியாவதால், அதிகாலைக் காட்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதா அல்லது ஒரு படத்தை முன்கூட்டியே வெளியிடுவதா என்ற குழப்பம் நீடித்தது. பிறகு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தை வெளியிடுவது என்றும் 4 மணிக்கு வாரிசு படத்தை வெளியிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு மணிக்குத் திரையிடப்படம் துணிவு திரைப்படம் முடிந்த பிறகு, நான்கு மணிக்கு அந்தத் திரையரங்களில் வாரிசு படம்தான் வெளியிடப்படும். மீண்டும் துணிவு திரைப்படம் 8 மணிக்கே திரையிடப்படும்.

தனி திரையரங்குகளைப் பொறுத்தவரை, துணிவு திரைப்படம் வெளியிடத் திட்டமிட்டிருந்தால், அந்தத் திரையரங்கு அதிகாலை நான்கு மணி காட்சி மட்டும் வாரிசு திரைப்படத்தை வெளியிட வேண்டும். அதேபோல, வாரிசு திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தால், அதிகாலை ஒரு மணிக்கு துணிவு திரைப்படத்தை வெளியிட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இப்படி அதிகாலைக் காட்சிகளை வெளியிடும் திரையரங்குகளில் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போலீஸ் காவல் போடப்படும்.

இந்த இரு திரைப்படங்கள் தவிர, பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன் நடித்த வீர சிம்மா ரெட்டி, சிரஞ்சீவி, ரவிதேஜா, சுருதிஹாசன் நடித்த வால்டர் வீரய்யா ஆகிய தெலுங்குப் படங்களும் வெளியாகின்றன. இந்த இரு படங்களின் ட்ரெய்லர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படங்களுக்கும் அதிகாலைக் காட்சிகள் சென்னையில் திரையிடப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: