You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட்லர் வரலாறு: பல முறை களவாடப்பட்ட திருட்டு ஓவிய பரிசும் சுவாரஸ்ய பின்னணியும்
- எழுதியவர், டேலியா வென்ச்சுரா
- பதவி, பிபிசி உலக சேவை
1432 ஆம் ஆண்டில், மகத்தான கலைப் பாய்ச்சலின் அற்புதமான சான்றுகளை விட்டுச் சென்ற ஒரு படைப்பு வெளியிடப்பட்டது. அது அந்த கலாசார இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நடந்தது.
ஃப்ளெமிஷ் சகோதரர்களான ஹூபர்ட், ஜான் வான் ஐக் ஆகியோரால் ஃபிளென்டர்ஸ் கென்ட்டில் (இன்றைய பெல்ஜியம்) உள்ள தேவாலயத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் அது. இது தோராயமாக 4.4 x 3.5 மீட்டர் அளவு கொண்ட ஒரு பெரிய படைப்பு.
12 ஆயில் பேனல்களுடன் இருந்த இந்த ஓவியம் "தி அடோரேஷன் ஆஃப் தி மிஸ்டிக் லாம்ப் அல்டர்பீஸ்" என்றும் அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் இருந்த யாரும் அதிகம் அறியாத பல அத்தியாங்களின் நிஜத்தை முழுமையாக சித்தரிக்கும் படங்களை முதல் முறையாக பொதுமக்களுக்குக் காட்டியது இந்த ஓவியம்.
இந்த ஓவியம் பொதுமக்கள் பார்வைக்காக் அந்த காலத்தில் வைக்கப்பட்ட உடனே பலரையும் தனது அழகால் வசீகரித்தது. "கிறிஸ்தவத்தின் மிக அழகான படைப்பு" என்று இந்த ஓவியத்தை அறிவித்தனர். இதை வரைந்த ஜான் வான் ஐக், ஓவியர்களின் இளவரசராக அறிவிக்கப்பட்டார். அவருடன் இணைந்து வரைந்த ஜானின் சகோதரர் இந்த ஓவியத்தை வரைந்து முடிக்கும் முன்பாகவே இறந்து போனார்.
இந்த ஓவியத்தில் இடம்பெற்று இருந்த ஓவ்வொரு உருவத்திற்கும் ஒரு தனித்துவம் இருந்தது. அதன் தோல், முடி என அனைத்தையும் பிரித்துக்காட்டும் வகையில் வண்ணம் பூசப்பட்டு இருந்தன.
இந்த ஓவியத்தின் ஓவ்வொரு இழையும், நரம்பும் புதுமையை பிரதிபலித்தன.
மனிதகுலத்திற்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தின் அடையாளமாக, கடவுளின் ஆட்டுக்குட்டிக்கு ஒரு பலிபீடம் வழங்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட தோட்டத்தில் இருந்த 42 தாவரங்களை அச்சு அசலாக இந்த ஓவியத்தில் வரைந்து இருந்தனர்.
இந்த ஓவியத்தின் நேர்த்தியையும், நிஜத்திற்கு இணையான துல்லியத்தையும் கொண்டு வர வான் ஐக் ரசவாத செயல்முறையை பயன்படுத்தி இருந்தார் என்பது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓவியத்தின் ஒளிக் கீற்று
ரசவாத செயல்முறையை பயன்படுத்தி ஓவியத்தில் இருந்த கற்களுக்கு நிஜ வடிவம் கொடுத்து இருந்தார். அதிலிருந்த நீலவண்ண, பச்சை வண்ண கற்களுக்கு தீட்டப்பட்டு இருந்த வண்ணம், நிஜத்திற்கு சவால் விடும் வகையில் பளபளப்பாக இருந்தது.
ரசவாத செயல்முறையை பயன்படுத்தி சாதாரண கல்லைக் கூட தங்கம் போல மாற்றுவதில் வான் ஐக் திறமையானவராக இருந்தார் என்று அப்போது பலர் அவரை புகழந்து கூறுவர்.
அந்த ஓவியத்தின் கற்களை மினுமினுக்க செய்ய அந்த ஓவியத்தின் மீது படும் ஒளியின் அமைப்பும் பிரத்யேகமாக செய்யப்பட்டு இருந்தது.
இந்த ஓவியத்தின் மற்றொரு சிறப்பான அம்சம், ஆதாமின் உருவம்.
ஆதாமின் நிஜ உருவமாக இந்த ஓவியம் கருதப்பட்டது. அதற்கு காரணம் இதன் அளவு கிடையாது. ஆதாமின் கண்களில் இருந்த ஒளி. அச்சு அசலாக ஒரு மனிதனைப் போல தோற்றத்தில் இருந்த ஆதாமை ஓவியமாக காட்சிப்படுத்தி இருந்தார் வான் ஐக்.
ஆதாமின் கைகளில் ஓடும் ரத்தஓட்டம், நரம்புகள், வெப்பத்தால் கருத்த முகம்,கை என அந்த ஓவியத்தில் அத்தனை நுணுக்கங்கள் இருக்கும்.
யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பிய வான் ஐக்கின் நேர்த்திதான், அந்த படங்களின் நிர்வாணம். அந்தரங்க இடத்தில் இருந்த முடியை ஒரு இலையைக் கொண்டு மூடி மறைப்பது போன்று வரையப்பட்ட அந்த ஓவியம், பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
நிர்வாணப் படங்களில், அந்தரங்க இடங்களில் உள்ள முடியுடன் வரையப்பட்ட முதல் ஓவியம் இது தான்.
உயர்த்தப்பட்ட கால் கட்டை விரலின் வழியாக கற்காலத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு ஆதாம் நுழைவதை உணர்த்தி இருந்தார் வான் ஐக்.
இது போன்ற பல நேர்த்திகளின் மூலமாக நிஜத்திற்கு இணையான ஓவியங்கள் மூலம் கலைத்துறையில் மறுமலர்ச்சியை புகுத்தினார் வான் ஐக். இந்த ஓவியம் அதன் காலகட்டத்தில் மேற்கத்திய கலைத்துறையின் மைல்கல்லாக கருதப்பட்டது.
போரின் கெடுதல்
இந்த ஓவியம் நிறுவப்பட்டு 100 ஆண்டுகளுக்குள், கென்ட் தேவாலயம் ஏற்கனவே ஒரு சுற்றுலாத்தலமாக இருந்தது. அதிக கட்டணம் செலுத்தி இந்த ஓவியத்தை பார்வையாளர்கள் பார்த்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த மறுமலர்ச்சி ஓவியரான ஆல்பிரெக்ட் டியூரர் உட்பட பல கலைஞர்கள் இதைப் பாராட்டினர். 1521 இல் இதைப் பார்த்த ஆல்பிரெட் "ஆழமான புரிதல் உள்ள விலைமதிப்பற்ற ஓவியம் " என்று இதை அறிவித்தார்.
விரைவிலேயே உலகின் மிகவும் விரும்பப்படும் படைப்புகளில் ஒன்றாக இது மாறியது. அதனால், வரலாற்றில் அதிகமாக திருடப்பட்ட கலைப் படைப்பு என்ற துரதிர்ஷ்டவசமான பெயரையும் இந்த ஓவியம் பெற்றது .
1566 ஆம் ஆண்டில், புரோட்டஸ்டன்ட் போராளிகள் இந்த தேவாலயத்தின் கதவுகளை உடைத்து ஓவியத்தை எரிக்கும் நோக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். இந்த ஓவியத்தை உருவ வழிபாடு மற்றும் மிகுதியான கத்தோலிக்க நம்பிக்கை என்று அவர்கள் கருதினர்.
ஆனால் அந்த போராளிகள் தாமதமாக வந்ததால், அந்த ஓவியம் அங்கிருந்து அகற்றப்பட்டு தேவாலயத்தின் கோபுரத்தில் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டது.
அதன் பிறகு போரினால் பலமுறை பாதிப்புக்குள்ளானது இந்த ஓவியம்.
வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கலைத் திருட்டுகள் அனைத்துமே தனிநபர்களால் நடத்தப்படவில்லை. மாறாக அரசுக்காக அதன் ராணுவங்கள் முன்னின்று இந்த திருட்டை நடைமுறைப்படுத்தின. ஆனால் இவை பணத்திற்காக நடக்கவில்லை, தோற்றுப்போன நாடுகளின் கலை அடையாளத்தை அழிக்க நடத்தப்பட்டன.
1794ஆம் ஆண்டில், நெப்போலியனின் துருப்புக்கள் இந்த ஓவியத்தின் மையப் பகுதியை கைப்பற்றின. 1815ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தும் வரை இந்த ஓவியம் அவரிடம் இருந்தது.
அதன் பிறகு பதினெட்டாம் லூயிஸ் மன்னர், திருடப்பட்ட துண்டுகளை தேவாலயத்திற்கு திருப்பிக் கொடுத்தார்.
1816 ஆம் ஆண்டில், தெளிவற்ற சில காரணங்களுக்காக பலிபீடத்தில் இருந்த ஆறு பேனல்கள் விற்கப்பட்டன. இவை பலரின் கைகளுக்கு மாறி இறுதியாக 1821இல் பிரஷ்யா மன்னரை சென்றடந்தது. அவற்றை பெர்லினில் உள்ள கைசர்-பிரெட்ரிக் அருங்காட்சியகத்தில் வைத்தார் அவர். அங்கு அவை ஒவ்வொன்றும் செங்குத்தாக பிரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
பின்னர், வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தின்படி 1919ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் தேவாலயத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அடுத்து இரண்டாம் உலகப் போர் வந்தபோது, அடால்ஃப் ஹிட்லரும் அவரது நாஜி கட்சித் தலைவருமான ஹெர்மன் கோரிங் ஆகிய இருவரும் இந்தக் கலைப்படைப்பை தீவிரமாக விரும்பினர்.
கிறிஸ்துவின் சின்னமாக பார்க்கப்பட்ட இந்த ஓவியம், அதீத சக்திகளை தங்களுக்கு அளிக்கும் என்று நம்பினர். மேலும் இந்த ஓவியத்தினுள் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் வரைபடம் மாய புதையலை அடைய உதவும் என்றும் அவர்கள் கருதினர்.
இதனால், 1942 இல் பாதுகாப்பாக வைக்க வாடிகனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது வழியில் அதை நாஜிக்கள் திருடினர். ஆனால் ஆயிரக்கணக்கான கொள்ளையடிக்கப்பட்ட படைப்புகளுடன் கவனக்குறைவாக ஆஸ்திரியாவில் உள்ள ஒரு உப்பளத்தில் ஒளித்து வைக்கப்பட்டதால் மீட்க முடியாத பாதிக்குள்ளானது இந்த ஓவியம்.
ஹிட்லர் படைகளிடம் இருந்த இந்த ஓவியத்தை மீட்க யாராவது வந்தால், பாதுக்காப்பாக வைக்கப்பட்டு இருந்த குகையை வெடிகுண்டு வைத்து தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த ஓவியத்தை மீட்டதால், முழு அழிவில் இருந்து இந்த ஓவியம் தப்பித்தது.
பின்னர் அந்த ஓவியம் கலைப்பொருட்களை பாதுக்காக்கும் படையால் பத்திரப்படுத்தப்பட்டது.
மிகப்பெரிய திருட்டு
ஏப்ரல் 10, 1934 அன்று, கருப்பு உடையில் இருந்த இரண்டு ஆண்கள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொருளை ஏற்றிக் கொண்டு ஒரு காரில் ஏறிச் சென்றதை சில வழிபோக்கர்கள் கண்டனர்.
மறுநாள் காலை, "ஜஸ்ட் ஜட்ஜ்ஸ் மற்றும் ஜான் தி பாப்டிஸ்ட்" ஆகியோரின் ஓவிய பேனல்கள் காணவில்லை என்பதை தேவாலயத்தில் இருந்தவர்கள் கண்டறிந்தனர்.
அடுத்து நடந்த சம்பவங்கள், ஒரு திரில்லர் படத்திற்கு இணையாக இருந்தது.
காணாமல் போன ஓவியத்தின் பேனல் இருந்த இடத்தில் பிரஞ்சு மொழியில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது. அதில், "வெர்சாய்ஸ் உடன்படிக்கையால் ஜெர்மனியிலிருந்து எடுக்கப்பட்டது" என எழுதப்பட்டு இருந்தது.
இதைத்தவிர காவல்துறைக்கு பயனுள்ள தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
19 நாட்களுக்குப் பிறகு, தேவாலயத்தின் பிஷப்பிற்கு ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது. அதில் ஓவியத்தை திரும்பப் பெற ஒரு மில்லியன் பெல்ஜிய ஃபிராங் பணத்தை தர வேண்டும் என்று எழுதி இருந்தது. இதன் இன்றைய மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும் அந்த கடிதத்தின் மூலம், இந்த விஷயத்திற்கும் ஜெர்மனிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.
அதிகாரிகள் பணத்தை செலுத்த மறுத்துவிட்டனர். ஆனால் கடிதத்தை எழுதியவருடன் பிஷப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பிஷப் கையில் கிடைத்த மூன்றாவது கடிதத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருப்பதற்கான ரசீது கிடைத்தது.
அந்த ரசீதுடன் ரயில் நிலையம் சென்று பார்த்த போது, 'ஜான் பாப்டிஸ்ட்' படம் வரையப்பட்ட ஓவியத்தின் ஒரு பேனல் கிடைத்தது.
அந்த கடிதத்துடன் கிழிந்த செய்தித்தாளின் ஒரு பகுதியும் இருந்தது. அதில் இருந்த குறிப்பு மூலம் சில விஷயங்கள் தெரிய வந்தது. மற்றுமொரு பேனலை பெற வேண்டும் என்றால் ஒப்புக் கொண்ட தொகையுடன் கிழந்த அந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
அந்த செய்தித் தாளின் மற்றொரு பாதியைக் கொண்டு வரும் நபரிடம் பணத்தை கொடுத்தால், திருடப்பட்ட ஓவியத்தின் இன்னொரு பகுதியை கொடுக்க திருடர்கள் ஒப்புக் கொண்டு இருந்தனர்.
ஆனால் திருடியவர்கள் கேட்ட தொகையில் பாதியை மட்டுமே கவரில் போட்டு கொடுத்ததால், திருடியவர்கள் ஆத்திரமடைந்தனர்.
இறுதியில் என்ன ஆனது?
கடைசியாக அக்டோபர் 1ஆம் தேதி ஒரு கடிதம் வந்தது. சில வாரங்கள் கழித்து மரணப்படுக்கையில் இருந்த 57 வயதான இடைத் தரகர், தனது வழக்கறிஞரிடம் ஒரு தகவலைச் சொன்னார்.
"திருடப்பட்ட ஓவியத்தின் மற்றொரு பேனல் இருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும்," என்று இடைத்தரகர் அர்சென் கோடெர்டியர் தன்னுடைய வழக்கறிஞரிடம் கூறிய பிறகு இறந்து போனார்.
கடைசியாக அவர் உச்சரித்த வார்த்தைகள்: "மேசை, சாவி, அலமாரி, 'பரஸ்பரம்' எனக் குறிக்கப்பட்ட ஒரு கோப்பு."
பேரம் பேசப்பட்ட கடிதங்களின் நகலுக்கு இடையே அனுப்பாமல் இருந்த ஒரு கடிதத்தை பார்த்தார் வழக்கறிஞர். அதில் அந்த ஓவியம் இருக்கும் இடம் குறித்து ஒரு துப்பு அளிக்கப்பட்டு இருந்தது. "நானோ, வேறு யாரோ பாதுக்காப்பாக எடுத்துச் செல்ல முடியாத இடத்தில் இருக்கிறது."
கோடெர்டியர் தான் அதை திருடினார் என கருதி, ஓவியத்தை கண்டுபிடிக்க தவறான இடத்தில் தேடிக் கொண்டு இருந்த காவல்துறையிடம் நடந்ததை விளக்கிக் கூறினார் அந்த வழக்கறிஞர்.
விலகாத மர்மம்
பல தசாப்தங்களாக காணாமல் போன ஓவியத்தை தேடி பல குழுக்கள் பல இடங்களில் முயற்சி செய்து தோற்று போயின.
திருட்டு நடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, நாஜி பிரச்சார மந்திரி ஜோசப் கோயபல்ஸ், கலைப் பொருட்கள் குறித்து துப்பறியும் ஹென்ரிச் கோன் என்பவரிடம் அந்த ஓவியத்தை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அந்த ஓவியத்தை ஹிட்லருக்கு கொடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஓவியத்தை தேடி அலைந்த ஹென்ரிச் கோன், அதை கென்ட் தேவாலயத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், தான் அங்கு செல்வதற்கு முன்பு யார் கையிலும் சிக்காதபடி அது மாற்றப்பட்டதாக கூறி கோன் தனது விசாரணையை நிறைவு செய்தார்.
கோடெர்டியர் கூறியதைப் போல யாரும் எடுத்துச் செல்ல முடியாத இடத்தில் அந்த ஓவியம் இருக்கிறது எனக் கருதி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செயின்ட் பாவோ தேவாலயம் 6 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு அங்குலம் கூட விடாமல், தரையில் இருந்து 10 மீட்டர் ஆழம் வரை எக்ஸ்ரே உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
பின்பு, காணாமல் போன ஓவியத்தை போல 1945ஆம் ஆண்டு ஒரு நகல் வரையப்பட்டது. சிலர் அந்த நகல் தான் அசலானது என்ற கூற்றை முன்வைத்தனர்.
ஆனால் அறிவியல் சோதனைகள் மூலமாக அந்த ஓவியம் நகல் என்று உறுதி செய்யப்பட்டது.
வான் ஐக் சகோதரர்கள் வரைந்த தலைசிறந்த கலைபடைப்புகளுள் ஒன்றான இந்த ஓவியத்தின் காணாமல் போன ஒரு பகுதி இன்றும் கலைத்துறையில் விலகாத ஒரு மர்மமாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்