You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி செய்தி
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை கைது செய்ய, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், அதற்கான உத்தரவுடன் வந்தனர். ஆனால், அவரது வீட்டிற்கு வெளியே அவரது பாதுகாப்புக் குழு மற்றும் ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட ஆறு மணிநேர முட்டுக்கட்டை காரணமாக, அவர்களால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை
யூனின் பாதுகாப்புக் குழுவுடனான மோதல் சூழ்நிலை நீண்ட நேரம் நீடித்தது. மேலும் அவர்கள் மனித சுவரை உருவாக்கியதாகவும், காவல்துறையின் பாதையைத் தடுக்க வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய அரசியலில் இதுவரை நடக்காத ஒன்று இந்த மாதம் நடந்துள்ளது. அதிபர் யூன் சுக் யோலின் ராணுவச் சட்ட பிரகடனம் அவருக்கு எதிரான ஒரு பதவி நீக்க வாக்கெடுப்புக்கு காரணமாகியது. அதைத் தொடர்ந்து, குற்றவியல் விசாரணை தொடங்கியது. அவர் விசாரணைக்கு ஆஜராக மறுத்துவிட்டார். இந்த வார தொடக்கத்தில், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வலதுசாரித் தலைவரான யூன் சுக் யோலுக்கு இன்னும் வலுவான ஆதரவு இருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு வெளியே கூடினர்.
யூனை பலர் மரியாதை இழந்த தலைவராக கருதுகின்றனர். நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அவர் பதவி நீக்கம் செய்யபட்டார். அவரின் அதிகாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் தற்போது அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுக்காக அவர் காத்திருக்கிறார். அவரை பதவியில் இருந்து நீக்கும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டது இந்த நீதிமன்றம்.
அப்படியானால், அவரைக் கைது செய்வது ஏன் காவல்துறைக்கு மிகவும் கடினமாக இருந்தது?
அதிபரைக் காக்கும் குழு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு, பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக யூன் தனது அதிபர் அதிகாரங்களை இழந்திருந்தாலும், பாதுகாப்பு வசதிகளை பெறும் உரிமை அவருக்கு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதில், அவரது பாதுகாப்பு குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர்.
அதிபர் பாதுகாப்பு சேவை (PSS) யூனுக்கு விசுவாசமாகவோ அல்லது "தங்களின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு அமைப்பின் தவறான புரிதலின்படியோ செயல்பட்டிருக்கலாம்," என்கிறார் சோலின் ஹன்குக் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான மேசன் ரிச்சே.
யூன் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அதிபர் பாதுகாப்பு சேவை, இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக்கின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.
"இதில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கலாம். ஒன்று யூனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் இருந்து விலக வேண்டும் என்று இடைக்கால அதிபர் அவர்களுக்கு அறிவுறுத்தியிக்க மாட்டார் அல்லது அவரின் உத்தரவின்படி செயல்பட அவர்கள் மறுக்கிறார்கள்" என்கிறார் இணை பேராசிரியர் மேசன் ரிச்சே.
அதிபர் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தங்களது அலுவலகத்தை விட யூனுக்கு "நிபந்தனையற்ற விசுவாசத்தை" வெளிப்படுத்துவதாக சில வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும் அதிபர் பாதுகாப்பு சேவையின் தலைவர் பார்க் ஜாங்-ஜூன் கடந்த செப்டம்பரில் யூனால் நியமிக்கப்பட்டார் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞரும் கொரியா விவகாரங்களில் நிபுணருமான கிறிஸ்டோபர் ஜூமின் லீ கூறுகையில், "இந்த நிகழ்விற்குத் தயாராகும் வகையில், யூன் தனது தீவிரமான விசுவாசிகளுடன் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும் அதிபர் பாதுகாப்பு சேவையின் தற்போதைய தலைவர் பார்க்கு முன்பு, இந்த குழுவின் தலைவராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் ஆவார். அவர் ராணுவச் சட்டத்தை விதிக்க யூனுக்கு ஆலோசனை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அதிகரிக்கும் அபாயம்
யூனுக்கு பாதுகாப்பு வழங்குவதை அதிபர் பாதுகாப்பு சேவை தற்காலிகமாக நிறுத்துமாறு இடைக்கால அதிபர் சோய் உத்தரவிட வேண்டும் என்பதே இதற்கு "எளிமையான" தீர்வாக இருக்கும் என்று லீ கூறுகிறார்.
"அவர் அவ்வாறு செய்ய மறுத்தால், நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
யூனுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற ஹான் டக்-சூவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்ய வாக்களித்ததை அடுத்து, நிதி அமைச்சர் சோய் சாங்-மோக், நாட்டின் அதிபரானார்.
இந்த அரசியல் குழப்பங்கள் தென் கொரிய அரசியலில் உள்ள ஆழமான பிளவை எடுத்துக்காட்டுகிறது. சிலர் யூனையும், ராணுவச் சட்டத்தை விதிக்கும் அவரது முடிவையும் ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மேலும் அங்கு நிலவும் கருத்து வேறுபாடுகள் இந்த பிரச்னைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
டிசம்பர் 3ம் தேதி அன்று யூன் அறிவித்த ராணுவச் சட்டம் தவறானது என்றும் அதற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பெரும்பான்மையான தென் கொரிய மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்கிறார் நியூ அமெரிக்கன் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றும் மூத்த ஆய்வாளரான டியூயோன் கிம். ஆனால், அவரது பொறுப்புக்கூறல் எப்படி இருக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு அந்நாட்டு மக்களால் வரமுடியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
அந்த நிச்சயமற்ற தன்மை, யூனின் அதிபர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடந்ததைப் போன்ற பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. அவரது ஆதரவாளர்கள் பல நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். இதன் விளைவாக வாக்குவாதம் மற்றும் காவல்துறையினருடன் மோதல்கள் கூட ஏற்பட்டன.
யூனின் அதிபர் இல்லத்தில் உள்ள நிலைமையைக் கையாள காவல்துறை, கூடுதல் அதிகாரிகளுடன் திரும்பலாம் மற்றும் பலத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் அது "மிகவும் ஆபத்தானது" என்று இணை பேராசிரியர் மேசன் கூறினார்.
அதிபர் பாதுகாப்பு சேவை (PSS) அதிக ஆயுதங்களைக் கொண்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் வன்முறைக்கு வழிவகுக்கும் எந்தவொரு சூழ்நிலையையும் தவிர்க்கும் நோக்கத்தில் இருப்பார்கள்.
"அதிபர் பாதுகாப்பு சேவை அதிகாரிகளை கைது செய்யக் கோரும் கூடுதல் உத்தரவுகளை காவல்துறை காட்டும்போது, அதிபர் பாதுகாப்பு சேவை அதிகாரிகளை அந்த பிடியாணையை மீறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினால் என்ன நடக்கும்?" என லீ கேள்வி எழுப்புகிறார்.
தங்களை தடுத்ததற்காக அதிபர் பாதுகாப்பு சேவையின் இயக்குநர் மற்றும் அவரது துணை அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை இப்போது கூறியுள்ளது. எனவே இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் பிடியாணை வரக்கூடும்.
யூனின் ராணுவச் சட்ட அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகள் அவரை விசாரிக்கும் ஊழல் புலனாய்வு அலுவலகத்திற்கு (CIO) சவாலாக உள்ளது.
இந்த அமைப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது. இது முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹே மீதான பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஊழல் மோசடிக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் கொரிய அதிபர்கள் இதற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், பதவி விலகுவதற்கு முன்பு கைது நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் நபர் யூன் ஆவார்.
தற்போதைய உத்தரவு காலாவதியாகும் முன்பு யூனைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு ஜனவரி 6ம் தேதி வரை அவகாசம் உள்ளது.
வார இறுதியில் யூனை மீண்டும் கைது செய்ய அவர்கள் முயற்சி செய்யலாம், இருப்பினும் ஆதரவாளர்களின் கூட்டம் பெருகினால் வார இறுதியில் அதற்கும் பெரிய சவாலாக இருக்கலாம். அவர்கள் புதிய பிடியாணைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அவரை மீண்டும் கைது செய்ய முயற்சி செய்யலாம்.
தென் கொரியா இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் சிக்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த நிச்சயமற்ற நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் தகவல்- இவ் கோ
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)