சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், பீட்டர் ஹோஸ்கின்ஸ்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது.
சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
60% வாகனங்களில் இந்த வசதி
தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின்படி, டிக்கி தவிர ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறமும் கைப்பிடியை அணுகுவதற்கு வசதியாக 6 செ.மீ x 2 செ.மீ x 2.5 செ.மீ-க்கு குறையாத அளவில் ஒரு உள்நுழைந்த இடம் இருக்க வேண்டும்.
காரின் உள்ளே, கதவை எப்படித் திறப்பது என்பதைக் காட்ட குறைந்தபட்சம் 1 செ.மீ x 0.7 செ.மீ அளவுள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, சீனச் சந்தையில் நுழைவதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்கள், அவற்றின் வடிவமைப்புகளை மேம்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறும்.
மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் கார்களை உள்ளடக்கிய சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'சீனா டெய்லி' நாளிதழ் மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60% வாகனங்களில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சீனச் சந்தையில் விற்கப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் தொழில்துறையில் அந்த நாட்டின் பெரும் இருப்பு காரணமாக, இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டெஸ்லாவில் பிரச்னையா?
டெஸ்லாவின் கதவு கைப்பிடிகள் ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் சொந்த விதிகளை பரிசீலித்து வருகின்றனர்.
நவம்பரில் டெஸ்லாவின் மின்சாரத்தில் இயங்கும் கதவு கைப்பிடிகள் திடீரென வேலை செய்யாமல், காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியது.
நிறுவனத்தின் முதன்மை மாடலான டெஸ்லாவின் 2021 மாடல் Y கார்களில் உள்ள கைப்பிடிகள் குறித்து ஒன்பது புகார்கள் வந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.
இதில் நான்கு சம்பவங்களில், கார் உரிமையாளர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க கார் ஜன்னலை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












