You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் முடிவால் உலகம் முழுவதும் சுமார் 1.4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்
- எழுதியவர், ஸ்டுவர்ட் லாவ்
- பதவி, பிபிசி நியூஸ்
லேன்செட் மருத்துவ இதழில் திங்கட்கிழமை வெளியான ஆய்வின்படி வெளிநாடுகளுக்கு செய்யப்படும் மனிதாபிமான உதவிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் டொனால்ட் டிரம்பின் முடிவு உலகம் முழுவதும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 40 லட்சம் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் என ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையான யுஎஸ்ஏஐடி(USAID) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 விழுக்காட்டுக்கு மேலான திட்டங்களை அதிபர் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மார்ச் மாதம் தெரிவித்தார்.
"இதன் விளைவாக ஏற்படும் அதிர்ச்சி, பல சிறு மற்றும் மத்திய வருவாய் நாடுகளுக்கு ஒரு சர்வதேச அளவிலான தொற்று நோய் அல்லது பெரிய போருக்கு இணையானதாக இருக்கும்," என இந்த லேன்செட் அறிக்கையின் இணை ஆசிரியரான டேவிட் ரசெல்லா தெரிவித்தார்.
"நிதி வெட்டுக்கள் பாதிக்கப்படக் கூடிய மக்களிடையே இரண்டு பத்தாண்டுகளாக ஏற்பட்டு வந்த மருத்துவ முன்னேற்றத்தை திடீரென நிறுத்தி, ஏன் பின்னோக்கி செலுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன," என்று மேலும் சொல்கிறார் பார்சிலோனா உலகளாவிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ரசெல்லா.
ஐக்கிய நாடுகள் சபை தலைமையில் இந்த வாரம் நடைபெறும் உதவி மாநாட்டிற்காக ஸ்பெயின் நாட்டின் செவில்லே நகரில் உலகத் தலைவர்கள் பலர் கூடியிருக்கும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இது பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாநாடாகும்.
133 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் குழு, 2001 முதல் 2021 வரை யுஎஸ்ஏஐடி(USAID) நிதியுதவி மூலம் வளரும் நாடுகளில் 9.1 கோடி இறப்புகள் தடுக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததை அடிப்படையாகக் கொண்டு, நிதி உதவி 83% குறைக்கப்பட்டால் அது இறப்பு விகிதங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை மாதிரிகள் மூலம் கணித்தனர்.
இந்த நிதி வெட்டுகள் 2030 ஆம் ஆண்டுக்குள் 1.4 கோடிக்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுக்கலாம் என்று இந்த கணிப்புகள் காட்டுகின்றன. இந்த எண்ணிகையில் 5 வயதுக்குக் கீழ் உள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர், அதாவது ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் குழந்தை இறப்புகள்.
கோடீஸ்வரர் ஈலோன் மஸ்கின் செலவு குறைப்பு முயற்சியின் மூலம், ஃபெடரல் ஊழியர்களை குறைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டது. தாராளவாத திட்டங்களை யுஎஸ்ஏஐடி(USAID) ஆதரிப்பதாகவும் அது குற்றம் சாட்டியது.
உலகில் மிகப்பெரிய அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நாடான அமெரிக்கா, 60-க்கும் மேற்பட்ட நாடுகளில், பெரும்பாலும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.
ரூபியோவின் கூற்றுப்படி, இன்னும் சுமார் 1,000 திட்டங்கள் மீதமுள்ளன, அவை நாடாளுமன்ற ஆலோசனையுடன் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கீழ் "மிகவும் திறம்பட" நிர்வகிக்கப்படும்.
இருந்தாலும், ஐநா பணியாளர்களின் கூற்றுப்படி களத்தில் நிலைமை முன்னேறவில்லை.
அமெரிக்க நிதிவெட்டு காரணமாக, கென்ய அகதிகள் முகாம்களில் உணவு பங்கீடு இதுவரை இல்லாத அளவு குறைக்கப்பட்டு பல நூறாயிரம் மக்கள் பட்டினியால் வாடுவதாக ஒரு ஐநா அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
கென்யாவின் வடமேற்கில் உள்ள ககுமாவில், தோல் சுருங்கி உரிந்துகொண்டிருக்கும், ஊட்டச்சத்துணவு இன்மையின் அறிகுறியுடன் நகரவே முடியாத நிலையில் இருந்த ஒரு குழந்தையை பிபிசி பார்த்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு