You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாசிசம், கடவுள் மறுப்பு, ஊழல், பிளவுவாதம், ஆட்சியில் பங்கு' - விஜய் பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்?
‘அரசியல் ஒரு பாம்பு, ஆனால்…’
தவெக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார்.
"அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர்.
மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார்.
“அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். சீரியஸாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி. அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார்.
‘அரசியல் மாற வேண்டும்’
பேச்சைத் துவங்கி இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைபேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய். தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார்.
“அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய்.
“இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.
‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’
கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார்.
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.
“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய்.
‘பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட முதல் கட்சி’
அதேபோல், காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர்.
“வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார்.
'நமக்கு ஏன் அரசியல்?’
மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார்.
ஆரம்பத்தில் தானும் எல்லோரையும்போல, 'நமக்கு எதற்கு அரசியல்?’ என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அபப்டி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார்.
கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்?
தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய்.
சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.
“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார்.
“இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார்.
“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.
‘டீசென்ட்டான அரசியல்’
எந்த அரசியல் தனைவரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழும் என்று பேசிய விஜய், தான் அப்படிப் பேசாதது பயத்தால் அல்ல, தான் ‘டீசென்ட்டான அரசியல் செய்ய வந்திருப்பதாகக் கூறினார்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பற்றி என்ன பேசினார்?
மேலும், தனது அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்றப் போவது பெண்கள், என்றார் விஜய்.
சினிமா நடிகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதாகக் கூறிய அவர், "சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது," என்றார். சினிமா தான் தமிழகத்தில் சமூக-அரசியல் புரட்சிக்கு உதவியது, என்றார். “திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமா தான்,” என்றார் விஜய்.
“என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தான் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார்.
அதேபோல், தான் சினிமாவுக்கு வந்தபோது தான் எதிர்கொண்ட உருவக்கேலிகளையும், அவமானங்களையும் பற்றிப்பேசினார் விஜய்.
“நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன்,” என்றார் விஜய்.
‘ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு’
மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.
தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)