You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் - முழு விவரம்
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
ராகுல் காந்தியின் ட்வீட்
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி என்ன பேசினார்? இந்த வழக்கில் பின்னணி?
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன
ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்
அதே சமயம் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்