இலங்கை நெருக்கடி: ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்க ஐ.எம்.எஃப் சம்மதம் - இனியாவது பொருளாதார சிக்கல் தீருமா?

இலங்கை மத்திய வங்கி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது. முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதி எவ்வாறான நன்மைகளை அளிக்கும்?

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி பணத்தை வைத்து, ஒன்றும் செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

எனினும், இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு வேறு இடங்களில் கடனை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

''இந்த பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கைக்கு வேறு இடங்களில் கடனை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் பூட்டு போடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, அந்த பூட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 300 மில்லியன் டாலர் தான் முதலில் கிடைக்கும். அந்த 300 மில்லியன் டாலரை வைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். அதேநேரத்தில் இன்னும் 7 பில்லியன் டாலர் அளவிலான கடன் வேறு வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.

வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்துவதற்கு காலம் இருக்கின்றது. அந்த கடனை மீள செலுத்தும் காலத்திற்கு இடையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள்" என அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம், Getty Images

ஐ.எம்.எஃ ப் கடன் தொகையை எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்?

''இதை கொடுப்பதற்கான காரணம் என்னவென்று சொன்னால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இருக்கின்றார்கள். விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், சாதாரண மக்களுக்கு தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது. அவ்வாறான மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையிலான திட்டத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்த முடியும். அது தவிர, இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாத போது அதற்காக அதனை பயன்படுத்த முடியும். ஆனால், ஒரு மாதத்திற்கு பெட்ரோலுக்கு மாத்திரமே இறக்குமதி செய்ய 300 மில்லியன் டாலர் செலவிடப்படுகின்றது.

இந்த திட்டத்தை 6 மாதத்திற்கு கொடுக்கின்றார்கள். இந்த தொகையை கொடுப்பதனால், பெரிதாக நன்மை ஏற்பட போவதில்லை. நன்மை என்னவென்று சொன்னால், நாங்கள் இலங்கைக்கு கடன் கொடுக்கின்றோம், இலங்கை கடன் மறுசீரமைப்புக்கு தயாராகியுள்ளது, இலங்கைக்கு கடன் கொடுக்க முடியும் என்கின்ற அனுமதியை சர்வதேச நாணய நிதியம் கொடுத்துள்ளது. அது தான் முக்கியம்" என மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக இனி கருதப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கடனுதவி தொடர்பில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதை அடுத்து, இலங்கை வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை வங்குரோத்தான நாடாக இனி கருதப்படாது. அதனால், இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும். நாம் இந்த இடத்திலிருந்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் முழுமையான உரையொன்றை நாடாளுமன்றத்தில் நாளை ஆற்ற எதிர்பார்க்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி
படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

"ஐ.எம்.எஃப் திட்டம் முழுமை பெற சாத்தியம் இல்லை "

நான்கு கட்டங்களாக வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டம் முழுமை பெறுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற கடனுதவி தொடர்பான அனுமதி குறித்து, பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்த தருணங்களில் இதுவரை காலம் மொத்தமாக 17 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை கடந்த காலங்களில் நாடிய 16 தடவைகளில், 9 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை இடைநடுவில் இலங்கை நிறுத்திக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கேள்வி :- இதுவரை காலம் இலங்கை எத்தனை தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது?

பதில் :-16 தடவைகள் நாடியுள்ளோம். இது 17வது தடவை.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி
படக்குறிப்பு, எம்.கணேசமூர்த்தி, மூத்த விரிவுரையாளர், பொருளியல் துறை. கொழும்பு பல்கலைக் கழகம்

கேள்வி :- இந்த 16 தடவைகளும் சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய உதவித் திட்டத்தின் ஊடாக, இலங்கை முன்னேற்ற பாதையை நோக்கி நகர்த்துள்ளதா?

பதில் :- ''இந்த 16 தடவைகளில் 9 தடவைகள் இடைநடுவில் கைவிட்டுள்ளோம். இடைநடுவில் கைவிடுவது என்றால், சரி என ஒப்புக் கொண்டு, இரண்டு தவணை வரும் வரை பார்த்துக்கொண்டிருப்பது. அது வந்ததற்கு பிறகு, நிலைமை சீரடைந்ததற்கு பிறகு எங்களால் செய்ய முடியாது என்று அப்படியே விட்டு விடுவது. கடந்த தடவைகளில் அது தான் நடந்துள்ளது. மிக பெரும்பாலான தடவைகளில் அவ்வாறு தான் நடந்துள்ளது. ஆனால், இது இலங்கைக்கே மட்டுமான ஒன்று கிடையாது. இலங்கை மட்டுமே முடியாது என்று சொன்னது கிடையாது. பணம் இல்லாத போது, டாலர் இல்லாத போது வேறு வழியில்லாமல்; ஏதோ ஒரு வகையில் இந்த மாதிரியான நெருக்கடி வரும் போது, ஐ.எம்.எப்பிடம் நாடுகள் சென்றுள்ளன. ஆனால், நிலைமைகள் ஓரளவு சீரடைந்ததற்கு பிறகு இடைநடுவில் கைவிட்டுள்ளன. ஏனென்றால், ஐ.எம்.எப்பின் நிபந்தனைகள் மிக மிக வலிமையுடையவை. சாதாரண பொதுமக்கள் மட்டும் இல்லை, மத்திய தர வகுப்பு, ஏனைய தரப்பு என அனைவருக்கும் மிக மிக மோசமான வலியை கொடுக்கும். ஆகவே, இதை தொடர்ந்துக்கொண்டு செல்வதென்பது அரசியல் ரீதியாக மிகவும் சவாலான விடயம். எந்தவொரு அரசுமே அவ்வாறு செய்ய விரும்பாது. நாட்டை மேல் நிலையில் தூக்கி நிறுத்துவதற்காக அரசியல் ரீதியாக அரசியல்வாதிகள் தற்கொலை செய்ய விரும்பமாட்டார்கள். ஆகவே, இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை கூட, ஒன்னுமே செய்ய முடியாத காரணத்தினால் அவ்வாறான ஒரு உறுதிமொழியை கொடுத்து விட்டு, இடைநடுவில் இதனை கைவிடும் சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது. இதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வது மிக மிக கடினம். இந்த கொள்கைக்கு எதிராக நாட்டிலே தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது நீண்ட காலத்திற்கு செல்வது என்பது நிச்சயமாக நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை."

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்ற நாடுகள் தொடர்பிலும் மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெளிவூட்டினார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்ற நாடுகளில் 50 சதவீதமான நாடுகள் தான் ஓரளவிற்கு, அந்த கொள்கைகள் வெற்றியளித்துள்ளன. அடுத்த 50 சதவீதமான நாடுகளில் இந்த கொள்கைகள் மிக பெரிய தோல்வியை தான் சந்தித்துள்ளன. இலங்கை உட்பட பல நாடுகள் தோல்வியை தான் சந்தித்துள்ளன. ஐ.எம்.எப்பின் நிகழ்ச்சி திட்டங்களை அமல்படுத்திய நாடுகளில் 50 சதவீதமான நாடுகளில் தான் அது ஓரளவிற்கு வெற்றியளித்துள்ளதே ஒழிய, முற்று முழுதாக 100 சதவீதமோ, 90 சதவீதமோ வெற்றியளித்ததாக தெரியவில்லை. சில நாடுகளில் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் சமூக ரீதியிலான எதிர்பாராத பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அதனுடைய வெற்றி தோல்வி என்பது எதிர்வரும் காலங்களில்; இலங்கை அரசாங்கம் எப்படி கொண்டு நடத்தப் போகின்றது?, அதனூடாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா?, அந்த வளர்ச்சியின் நன்மைகள் மக்களை சென்றடையுமா? என்பதை அடிப்படையாக வைத்து தான் பார்க்கப்பட வேண்டும்" என மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் என்ன சொல்கின்றது?

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர்

சர்வதேச நாணய நிதியத்தினால் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர், இலங்கைக்கு தமது நிறுவனம் கடனுதவி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 2.276 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் இலங்கைக்கு 2.276 பில்லியன் அமெரிக்க டாலரை 48 மாதங்களில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரச்னைக்கு தீர்வாக இதனை பார்க்க முடியும். இந்த கடனுதவித் திட்டத்தின் ஊடாக உடனடியாக 330 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிதியானது விலையை ஸ்திரப்படுத்தல், அந்நிய செலாவணி இருப்பதை அதிகரித்தல், பணவீக்கத்தினால் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை குறைத்துக்கொள்ளுதல், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இயலுமையை இதனூடாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்" என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: