You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நரேந்திர மோதி முதல் மு.க.ஸ்டாலின் வரை கூறுவது என்ன?
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதற்கான முடிவுகள் இன்று(ஜூன் 4) எண்ணப்பட்டு இந்திய அளவில் பாஜக பெரும்பான்மை இடங்களிலும், இரண்டாவதாக காங்கிரஸ் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரியைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி முதல் முக.ஸ்டாலின் வரை தங்களது வெற்றி குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோதி உரை
இந்திய அளவில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
இது தொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இந்த வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒடிஷாவில் பாஜக வெற்றி அடைந்ததற்கும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் பிரதமர் மோதி.
இதைத் தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் இருந்து நேரடியாக மக்களிடம் பேசியுள்ளார் மோதி. அவர் பேசுகையில், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஒடிஷா வெற்றி குறித்தும், கேரளாவில் முதல் நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுள்ளது குறித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் நாட்டு மக்கள் அவர் இல்லாத நினைவே எனக்கு வரவிடவில்லை. இந்த நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் எனக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளனர்.”
தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு கட்சியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நாட்டு மக்கள் பாஜக மீதும், தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றி உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் வெற்றி” என்று கூறினார்.
இதோடு இந்தத் தேர்தலை திறன்மிக்க வழியில் நடத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோதி.
‘நாளை இந்தியா கூட்டணி கூட்டம்’
தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் முடிவுகள் மோதிக்கு எதிரானதாக வந்துள்ளது. இது நாட்டு மக்களுக்கும், மோதிக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மக்களின் இந்தத் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காப்பதற்கு உதவியிருப்பதாகக் கூறியுள்ளார். மக்கள் மோதியைப் புறக்கணித்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “அரசமைப்பு சட்டத்தைக் காப்பாற்றுவதே எங்களின் போராட்டமாக இருந்தது. மக்கள், கூட்டணிக் கட்சியினர், காங்கிரஸ் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோருக்கு மனதின் ஆழத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ராகுல் காந்தி.
“பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகளை நீங்கள் கவனிக்க வேண்டும். மோதியை மக்கள் அதானியுடன் நேரடியாக இணைத்துப் பார்க்கின்றனர். இருவருக்கும் ஊழல்களில் நேரடித் தொடர்பு உள்ளது. எங்களுக்கு நரேந்திர மோதி, அமித் ஷா வேண்டாம் என மக்கள் கூறுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளை இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் விவாதித்த பிறகே அடுத்தகட்ட முடிவுகள் என்ன என்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி போட்டியிட்ட ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்காக இரண்டு தொகுதி வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவரை, எந்தத் தொகுதியில் இருந்து விலகப் போகிறார் என்று கேட்டபோது, “அந்த முடிவு எனது அதிகாரத்திற்கு உட்பட்டது என்றால் இரண்டு தொகுதிகளுக்கும் நானே நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
‘பிரதமர் பதவி விலக வேண்டும்’
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி, பிரதமர் மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்டதால் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோதிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். ஏனெனில், இந்த முறை (தேர்தலில்) 400 இடங்களைத் தாண்டி வெற்றி பெறுவோம் என அவர் கூறியிருந்தார்” என்றார்.
மோதிக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு
மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்கு மத்தியிலும், ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெற்றுள்ள வெற்றி தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்து நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதை மறுபகிர்வு செய்து, பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திர மக்கள் தங்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொடுத்துள்ளதாகவும், அதற்கு அவர்கள் எங்களது கட்சி மற்றும் கூட்டணியின் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக் கூறியது என்ன?
ஒடிஷாவில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து, சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளத்தை முந்தி பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரம் மக்களவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை, ஒரு இடங்களில்கூட படுதோல்வியைப் பெற்றுள்ளது பிஜு ஜனதா தளம். இதிலும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களையும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக், கட்சி வேறுபாடில்லாமல் வெற்றி பெற்ற அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள் எனவும், பிஜு ஜனதா தளத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘பாஜகவின் கனவு பலிக்கவில்லை’
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களையும் வென்றுள்ள நிலையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.
அதில் அனைத்து கட்சியினருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட ஸ்டாலின், பிரதமர் மோதிக்கு எதிரான அலை வீசுவதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், “தங்களுக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று பாஜக பிம்பத்தைக் கட்டமைத்தது. ஆனால் தற்போதோ ஆட்சியமைக்கப் பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
“சமீபத்தில்கூட கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பாஜக உளவியல் தாக்குதலை ஏற்படுத்தியது. ஆனால், அத்தகைய பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊடக பரப்புரை அனைத்தையும் கடந்து இந்தியா கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.”
தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தேர்தலில் பாஜகவின் கனவு பலிக்கவில்லை என்றும், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் திமுக முன்னெடுக்கும் என்றும் கூறினார்.
அதேபோல் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஏற்கெனவே பலமுறை இதற்குப் பதில் அளித்துவிட்டேன். அதுபற்றிப் பிறகு பேசலாம்" என்று கூறிவிட்டார்.
'இந்தத் தேர்தல் முடிவு நம்மை சோர்வடையச் செய்யாது'
தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக இந்த தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட பத்து இடங்களில் மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தோல்வி தங்களை சோர்வடையச் செய்யாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே, அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும் அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்குச் சாதகமாக வந்துள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அதிமுகவுக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ள அவர்,
“இந்தத் தேர்தல் முடிவு நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் கிடைத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்,” என்றும் கூறியுள்ளார்.
‘பாஜகவை ஆதரித்த தமிழ் மக்களுக்கு நன்றி’
தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதியிலும் பாஜக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களை ஆதரித்து, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த முறை தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்களின் ஆதரவைப் பெற எங்களது பணியை இரட்டிப்பாக்குவோம்.”
“மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவிருப்பதில் பெரு மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள அவர், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து பாஜக தலைவர்கள் மட்டும் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)