You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் நிரம்பிய மருத்துவமனைகள்
சீனாவில் பாதிப்புகளை உண்டாக்கியுள்ள புதிய கோவிட் அலை கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகத் தெரிகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகள் “ஒப்பீட்டளவில் குறைவாக” நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், அவை மிகவும் பரபரப்பாக உள்ளதாக மருத்துவர் மைக்கேல் ரியான் கூறுகிறார்.
சீனாவின் புள்ளிவிவரங்கள் புதன்கிழமையன்று கோவிட் நோயால் யாரும் உயிரிழக்கவில்லை எனக் காட்டுகின்றன. ஆனால், தொற்றுநோயின் உண்மையான தாக்கம் குறித்த சந்தேகமும் உள்ளது.
சமீபத்திய நாட்களில் பெய்ஜிங்கிலும் பிற நகரங்களிலும் உள்ள மருத்துவமனைகள் சமீபத்திய கோவிட் பரவல் சீனாவில் நிகழ்ந்ததன் விளைவாக நிரம்பி வருகின்றன.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீனா தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் ஒரு பகுதியாக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது.
நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய வயதானவர்களிடையே அதிக இறப்பு விகிதம் நிகழ்வது பற்றிய அச்சத்தையும் எழுப்புகிறது.
எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், அலுவல்பூர்வ புள்ளிவிவரங்கள் செவ்வாய்க்கிழமையன்று ஐந்து பேரும் திங்கட்கிழமையன்று இரண்டு பேரும் கோவிட் நோயால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கின்றன.
இது தொற்றுநோயின் சமீபத்திய பரவல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் மருத்துவர் ரியான் சீனாவை வலியுறுத்துவதற்கு வழிவகுத்தது.
“சீனாவில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளார்கள். ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரப்பப்படுகின்றன.
பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு, ஆபத்தான இந்த தொற்றுநோயை முழுமையாக நிறுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நாங்கள் பல வாரங்களாகக் கூறி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஜெனீவாவில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “சீனாவில் உருவாகி வரும் நிலைமை குறித்து மிகவும் கவலையாக உள்ளது,” என்றார்.
நோயின் தீவிரம், மருத்துவமனையில் அனுமதி, தீவிர சிகிச்சைத் தேவைகள் குறித்த குறிப்பிட்ட தரவுகளைக் கொடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர் ரியான் மேற்கொண்டு பேசியபோது, “தடுப்பூசி என்பது கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி,” எனக் கூறினார்.
சீனா தனது சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. இது உலகின் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைவிட தீவிரமான கோவிட் நோய் மற்றும் உயிரிழப்புக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதில் குறைவான செயல்திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் அரசாங்கம் தனது முதல் தொகுதி பயோஎன்டெக் கோவிட்-19 தடுப்பூசிகளை சீனாவுக்கு அனுப்பியதாக புதன்கிழமை அறிவித்த நிலையில், மருத்துவர் ரியான் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சுமார் 20,000 என்ற அளவில் மதிப்பிடப்பட்டுள்ள ஜெர்மன் தடுப்பூசிகள் சீனாவிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதுதான் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டு கோவிட் தடுப்பூசி. இருப்பினும் இது சீனாவுக்குக் கிடைக்கும் நேரம் மற்றும் அளவு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம் பெய்ஜிங் வந்த அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்தத் தடுப்பூசியை சீன குடிமக்களுக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்