You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓஜி விமர்சனம்: கேங்ஸ்டராக ரசிகர்களின் நீண்டகால ஆசையை பூர்த்தி செய்தாரா பவன் கல்யாண்?
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
ஹரிஹர வீரமல்லு படத்தால் ஏமாற்றமடைந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், அதற்குப் பிறகு வந்த 'ஓஜி' (OG) மீது அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பவன் கல்யாண் பல்வேறு வகையான படங்களில் நடித்திருந்தாலும், அவர் இதற்கு முன் ஒரு வலிமையான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.
கேஜிஎஃப், சலார் போன்ற பரபரப்பான கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பது பவன் ரசிகர்களின் ஆசை.
அந்த ஆசையை இயக்குநர் சுஜித் இந்தப் படத்தில் நிறைவேற்றியுள்ளார்.
ஒரு வகையில், இது ரசிகர்களுக்கான படம், ஏனென்றால் பவனின் புதிய அவதாரத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதை என்ன?
கம்பீரா (ஹீரோ) ஜப்பானில் உள்ள ஒரு போர்வீரனின் மகன்.
அவர் அனைத்து தற்காப்புக் கலைகளிலும் வல்லவர். ஆனால் தனது ஆசான் இறந்தபின், இளம் வயதிலேயே ஜப்பானை விட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்கிறார்.
அங்கே சத்யா தாதா (பிரகாஷ் ராஜ்) கப்பலில் அவருக்கு தங்க இடம் அளிக்கிறார். அந்த தருணத்திலிருந்து கம்பீரா, சத்யா குடும்பத்தின் பாதுகாவலராக மாறுகிறார்.
கதை 1990க்குச் செல்லும் போது, சத்யா தாதாவுக்கு பம்பாயில் சொந்த துறைமுகம் உள்ளது. அங்கே ஒரு கொள்கலனில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் வருகின்றன.
அதை சத்யாவின் மகன் தடுக்க முயல்கிறார். அந்த கொள்கலன் விவகாரத்தில் சத்யா தாதாவின் எதிரியான மிராஜ்கரின் மகன் ஜிம்மிக்கும் பங்கு இருக்கிறது. இதனால் சத்யா தாதா, ஜிம்மியை கொள்கலன் விவகாரத்தில் இருந்து விலகி இருக்குமாறு சொல்கிறார்.
இந்த மோதலில் சத்யாவின் மகன் கொல்லப்படுகிறார். இது தான் கதையின் திருப்புமுனை.
சத்யாவின் மகனின் மரணத்திற்குப் பின்னால் என்ன நடந்தது?
ஆர்.டி.எக்ஸ்-க்குப் பின்னால் உள்ள உலகளாவிய மாஃபியா யார்?
என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து கொள்கலனை வெளியே கொண்டு வர நினைத்த மிராஜ்கரின் மூத்த மகன் இம்ரான் ஹாஷ்மி செய்தது என்ன?
ஹீரோ எப்படி எல்லோரையும் சமாளிக்கிறார்?
கம்பீரா முதலில் தனது சொந்த தந்தையாகக் கருதிய பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தை விட்டு வெளியேறி, தலைமறைவாகியது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சுஜித்தின் மாயாஜாலம்
உண்மையில், இதேபோன்ற கதையுடன் ஏராளமான படங்கள் வந்துவிட்டன. ரசிகர்களும் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது, 'இதை ஏற்கெனவே எங்கேயோ பார்த்தது போன்ற' உணர்வு ஏற்படுகிறது.
ஏனெனில், எல்லா கேங்ஸ்டர் கதைகளும் ஒரே பாதையில் தான் செல்கின்றன. அதாவது நன்மைக்கும் தீமைக்குமான மோதல்.
காட்ஃபாதரிலிருந்து நாயகுடு, பாஷா, கேஜிஎஃப், சலார் வரை கதை எல்லா வகையிலும் ஒன்றுதான். உணர்ச்சிகள் மட்டும் தான் மாறுகின்றன.
ஹீரோவும் வில்லனும் இருவருமே கேங்ஸ்டர்களாக இருந்தாலும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே தான் வித்தியாசம் இருக்கிறது.
ஹீரோ, சிறுவயதில் தன்னை ஆதரித்த குடும்பத்தின் பாதுகாவலராக மாறுவது புதிய கதையல்ல.
குடும்பத்தை மையமிட்ட கதையை எடுத்துக்கொண்டால், அது ஆத்ம பந்தவு (என்.டி.ஆர்), அதில் வன்முறையைச் சேர்த்தால், அது சிம்ஹாத்ரி, நீங்கள் அதை மாஃபியாவுடன் கலந்தால், அது பாஷா.
அவ்வளவுதான் வித்தியாசம்.
அப்படியானால், கதையில் புதிதாக ஒன்றும் இல்லையெனில், படைப்புத் திறமையைக் கொண்டு தான் விளையாட வேண்டும்.
இதைத்தான் இயக்குனர் சுஜித் செய்திருக்கிறார்.
கேமராவும் இசையும் கதையைத் தாங்கிச் செல்கின்றன.
ரசிகர்களுக்கு சில இடங்களில் படம் உற்சாகத்தைக் கொடுத்தது. இயக்குனர், பவனை இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் காட்டியுள்ளார்.
ஒரு விதத்தில், இது பவனின் படம் அல்ல, சுஜித்தின் படம்.
அவருக்கு பிளஸ், மைனஸ் இரண்டும் உண்டு.
அவர் ரசிகர்களை மனதில் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளார். ஆனால் அனைத்து பார்வையாளர்களையும் படம் கவரவில்லை.
சில காட்சிகள் அருமையாக இருந்தாலும், அவற்றில் அதிக ஆழம் இல்லை.
காரணம், கதாபாத்திரங்களில் வலிமை இல்லை, சரியான காட்சிகள் எழுதப்படவில்லை.
இரண்டாம் பாதியில், காவல் நிலையக் காட்சி போல நான்கைந்து காட்சிகள் இருந்திருந்தால், படம் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கும்.
படத்தின் ஆரம்பம் முதலே "கம்பீரா" என்ற பெயரை கேட்டாலே அனைவரும் பயத்தில் நடுங்குகிறார்கள். ஹீரோவுக்கு நேருக்கு நேர் சவால்விடும் அளவுக்கு வில்லன் சக்தி வாய்ந்தவராக இருக்கும்போது, மோதல் வலுப்பெறுகிறது.
இம்ரான் ஹாஷ்மியிடம் ஸ்டைல் இருக்கிறது, ஆனால் வலிமை குறைவாக உள்ளது. ஹீரோவின் மகளைக் கடத்துவது என்ற பழைய டிரிக் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சுஜித்தின் பிரச்னை என்னவென்றால், அவர் ஒரே படத்துக்குள் இரண்டு படங்களுக்கேற்ற கதாபாத்திரங்களையும் கதைகளையும் எழுதுகிறார். எங்கு, என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் குழம்பி விடுகிறார். இதே பிழை தான் சாஹோவிலும் நடந்தது. அதில், பல வில்லன்களை வைத்திருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இந்தப் படமும் ஜப்பானில் எங்கோ தொடங்குகிறது. நடுவில் பல நாடுகளுக்குச் செல்கிறது.
பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள், ஒவ்வொருவரும் தனித்தனி கதைகளை சொல்கிறார்கள்.
ஒரு ஃப்ளாஷ்பேக் அர்ஜுன் தாஸுக்காக, இன்னொரு ஃப்ளாஷ்பேக் வில்லனுக்காக, மற்றொன்று ஷ்ரியா ரெட்டிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றைத் தவிர, காட்சிகள் முன்னும் பின்னுமாக உள்ளன. படத்தில் நிறைய பேர் இருந்தால், யாருக்கும் ஒரு முழுமையான பாத்திரம் இருக்காது.
மொத்தத்தில், கதையை எளிமையாகச் சொன்னால்:
ஒரு குடும்பத்தை பாதுகாக்கும் ஹீரோ
அவர் ஏதோ ஒரு காரணத்தால் தலைமறைவாகிறார்.
அவரால் முடிந்த போதெல்லாம் அவரது குடும்பத்திடம் திரும்புகிறார்.
பின்னணியில் மும்பை கும்பல்.
மக்களை அழிக்க ஆர்டிஎக்ஸ் வந்துவிட்டது. அதிலிருந்து நகரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
ஆனால், இந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, தேவையற்ற சுமைகளைச் சேர்த்ததால், இது சிறப்பான படமாக மாறாமல், ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படமாகி விடுகிறது.
தமனின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது.
படத்தில் வரும் ஒவ்வொரு சிக்கல்களையும் ஹீரோ வலிமையின் மூலம் கையாள்கிறார்.
ஒவ்வொரு பிரேமிலும் கேமராமேன்களின் உழைப்பு தெரிகிறது.
எடிட்டிங்கும் கச்சிதமாகவே அமைந்துள்ளது. (படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருந்திருந்தால் பார்ப்பது கடினமாகியிருக்கும்.)
நடிப்பைப் பொறுத்தவரை இம்ரான் ஹாஷ்மி ஸ்டைலாகத் தோன்றுகிறார்.
அர்ஜுன் தாஸ் மற்றும் ஷ்ரியா ரெட்டி அற்புதமாக நடித்திருந்தனர்.
படத்தில் ஆழம் கொண்ட இரண்டு கதாபாத்திரங்கள் இவை மட்டுமே.
பிரகாஷ் ராஜ் எப்போதும் போல இயல்பாக நடித்துள்ளார். பெரிய காட்சிகள் இல்லாவிட்டாலும், அவர் திரையில் தோன்றும் காட்சிகள் சிறப்பாக உள்ளன.
பவன், இந்தப் படத்துக்காக தனியாக நேரம் ஒதுக்கியிருப்பது திரையில் வெளிப்படையாகத் தெரிகிறது.
ஹரிஹர வீரமல்லுவைப் போலல்லாமல், ஷ்ரத்தா சீரியஸாகவும், புதிய தோற்றத்திலும் வந்துள்ளார். சில உணர்ச்சிமிகு காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.
நாயகி பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் பெரிய முக்கியத்துவம் பெறவில்லை. அவருக்கு கிடைத்த பாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.
சுபலேகா சுதாகர், ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஐயங்கார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களை விட சற்று அதிக நேரம் திரையில் வருகிறார்கள்.
இரண்டாம் பாதியில் அபிமன்யு சிங்குக்கு நல்ல காட்சி இருந்தது.
படம் முழுதும் வன்முறைக் காட்சிகளால் நிரம்பியிருந்தது. ரத்தம் தெறிக்காமல் ஒரு காட்சி கூட இல்லை.
பாகுபலியில் தலையை நறுக்கும் காட்சியை நாம் ஏற்கெனவே பார்த்திருந்தாலும், அதேபோன்ற காட்சி இந்தப் படத்தில் வரும்போதும் நெகிழ வைக்கிறது.
மேலும், ரசிகர்களை கண்கலங்க வைக்கும் ஒரு காட்சியும் உள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ரசிகர்களுக்கு இது அருமையான படம். மற்ற பார்வையாளர்களுக்குப் பரவாயில்லை எனத் தோன்றச் செய்யும் படம்.
படத்தின் ப்ளஸ்
1. திரையில் பவன் தோன்றும் காட்சிகள்
2. இசை, கேமரா
3. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷ்ரியா ரெட்டியின் நடிப்பு
4. இரண்டாம் பாதி காவல் நிலையக் காட்சி
படத்தின் மைனஸ்
1. ஏற்கெனவே பல படங்களில் பார்த்த கதை
2. அதிகப்படியான கதாபாத்திரங்கள், ஆழமற்ற திரைக்கதை
3. தீவிர வன்முறை
4. ஆழமற்ற காட்சிகள்
வழக்கமான கேங்ஸ்டர் கதையிலும் பவன் கல்யாண் தனக்கே உரிய சிறப்பான பாணியில் நடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பண்டிகை விருந்தைப் போல் அமைந்துள்ளது.
குறிப்பு: இது ஆசிரியரின் தனிப்பட்ட கருத்து .
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு