'ஏன் உங்களுக்கு வேலை தருகிறார்கள்?'- உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள்
2022இல், 'கிக்' பொருளாதாரத்தில் அல்லது உணவு டெலிவரி தொழிலில் சமவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜொமேட்டோ நிறுவனம் ப்ராஜெக்ட் ஜீல் (Project Zeal) எனும் திட்டத்தை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் டெலிவரி பார்ட்னர்களாக பணியில் சேர்ந்தனர். போலியோவால் பாதிக்கப்பட்ட ஜனாபாய் அவர்களில் ஒருவர். கணவர் இறந்த பிறகு, குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வந்தது.
"நான் தையல் வேலை செய்து 10,000 ரூபாய் சம்பாதித்தேன், ஆனால் அது போதுமானதாக இல்லை. இப்போது நிறைய சம்பாதிக்கிறேன். என் மகனுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்குவேன். அவனை ஒரு விமானியாக்குவேன்." என்கிறார் ஜனாபாய் பவார்.
ஜனாபாய் மட்டுமல்ல நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300 மாற்றுத்திறனாளிகள் உணவு டெலிவரி பார்ட்னர்களாக பணியாற்றி வருகின்றனர்.
"சில வாடிக்கையாளர்கள் எங்களை புரிந்துகொண்டு, படியிறங்கி வந்து உணவைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் சிலர், 'நாங்கள் கீழே வரமாட்டோம், அதற்கு பதிலாக ஆர்டரை கேன்சல் செய்கிறோம்' என்று கூறுவார்கள். சிலர், 'உங்களுக்கு இந்த வேலையை யார் கொடுத்தார்கள்?' என்று கோபமாக கேட்பார்கள்." என்கிறார் உணவு டெலிவரி பார்ட்னர் மஞ்சுஷா தநோர்கர்.
இதுபோன்ற டெலிவரி பார்ட்னர்களுக்கான சிறப்பு அம்சங்கள் தங்கள் செயலியில் இருப்பதாக ஜொமேட்டோ கூறுகிறது. இருப்பினும், தாங்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வதாகவும், ஜொமேட்டோ அதன் செயலியை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் கிக் தொழிலாளர்கள் கோருகிறார்கள்.
நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, '2024–25 ஆம் ஆண்டில் கிக் பொருளாதாரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும், 2029–30 ஆம் ஆண்டில் இது 2.35 கோடியாக உயரும். இந்தச் சூழலில், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



