20 நாள் நீடித்த உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

சோனம் வாங்சுங் உண்ணாவிரதம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜந்தர் மந்தரில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேயும் கைது செய்யப்பட்டுள்ளார். திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி போலீசார் என்னை தாக்கி, காவலில் எடுத்துள்ளனர்" என்று எழுதியுள்ளார்.

காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் தாஸ் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

"அபிஜித் திப்கே தங்கியிருந்த இடத்திலேயே டெல்லி காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது. போராட்டக் களத்திலிருந்து சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் கூறினர். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது" என்று அதில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அளித்த புதுடெல்லி டிசிபி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், @abhijeet_dipke

படக்குறிப்பு, கடந்த 20 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதுடெல்லி டிசிபி-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது, ​​போராட்டக்காரர்கள் அதனை சீர்குலைக்க முயன்றனர், இதனால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்து, முழு செயல்முறையையும் பாதுகாப்பாக செய்து முடித்தனர். ஜந்தர் மந்தரில் இருக்கும் போராட்டக்காரர்களை கூடிய விரைவில் அமைதியான முறையில் இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டது இதுவே முதல் முறை.

அவரது உடல்நிலை மோசமடைந்தால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நீதிமன்ற உத்தரவு தெரிவித்தது.

வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு , அவருக்கு கட்டாயமாக உணவு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மருத்துவர்கள் தரும் பரிந்துரை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி ஜூலை 20-ஆம் தேதி பேரணி நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக இந்த பேரணி திட்டமிடப்பட்டிருந்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு