You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முழு மலையே கீழே இடிந்து வந்தது' - ஜம்மு காஷ்மீர் திடீர் வெள்ளத்தில் தப்பியவர்கள் கண்டது என்ன?
(எச்சரிக்கை: சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தபட்சம் 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரதீப் சிங் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் பேசிய கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் ஷர்மாவும் 45 உயிரிழப்புகளை உறுதி செய்தார்.
மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு சேவைகள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சிங் தெரிவித்தார்.
பல தன்னார்வலர்களும் மீட்புக் குழுவுக்கு உதவி செய்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
மீட்கப்பட்டவர்கள் தங்கள் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். திடீரென சிதிலங்கள் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றதாக அவர்கள் விவரித்தனர்.
காயமடைந்தவர்கள் சொன்னது என்ன?
பிபிசி குழு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையை அடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து விரிவாக விவரித்தனர்.
"என் மகளின் வாயில் மண் நிரம்பியிருந்தது. மூச்சுத் திணறி அவள் இறந்துவிட்டாள்," என அழுதுகொண்டே ஒரு பெண் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் கூறினார்,
"என் மகள் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டாள். மருத்துவப் படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். யாராவது என் மகளைத் திருப்பிக் கொடுங்கள், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்," என்று அவர் வேதனையுடன் கூறினார்.
"என்ன இருந்தாலும் சரி, எங்களை இப்போது வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். எட்டு மணி நேரத்துக்கு பிறகு அவளை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எங்கள் மகளை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்," என அந்த சிறுமியின் தந்தை சொல்கிறார்.
ஒரு நபர், தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்தார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் 'ஓடுங்கள், ஓடுங்கள்' என்று கத்தினர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எழுந்தவுடன் எல்லாம் தகர்ந்து போனது," என்று அவர் கூறினார்.
"பாலத்தைக் கடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் அவரது சகோதரியும் உயிரிழந்தார்.
"நான் வீட்டுக்குச் சென்று என்ன சொல்வேன்? இது அவள் எனக்கு கட்டிய கடைசி ராக்கி. எனக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள், இப்போது நான் தனியாக இருக்கிறேன்." என பிபிசி-யிடம் தனது ராக்கியைக் காண்பித்தவாறு அவர் கூறினார்
அங்கு இலவச உணவு வழங்கப்பட்ட கூடாரத்தின் கீழ் பலர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அவர்களை மீட்பது கடினமாக இருந்ததாகவும் ஒரு பெண் தெரிவித்தார்.
' வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம்கேட்டது, எல்லோரும் 'ஓடு' என கத்தினர் '
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்களது கஷ்டத்தை பகிர்ந்துள்ளனர்.
ஷாலு மெஹ்ரா மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "எங்களுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது, எல்லாம் புகைமூட்டமாக மாறியது. எல்லோரும் 'ஓடு, ஓடு, ஓடு' என்று கத்தினர்," என அந்த சம்பவம் குறித்து சொல்கிறார்.
"நான் ஓட முயன்றபோது, ஒரு பெண் என் மீது விழுந்தார். ஒரு மின்கம்பம் என் தலையில் விழுந்து மின்சாரம் தாக்கியது," என்று அவர் கூறினார்.
போத்ராஜ் தனது குடும்பத்தின் மற்ற 10 உறுப்பினர்களுடன் கிஷ்த்வாருக்கு வந்திருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் உட்பட மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியதாக அவர் கூறினார்.
"திடீரென வெடிப்பு போன்ற ஏதோ ஒன்று நடந்து எல்லாம் பனிமூட்டமாக மாறியது. ஆனால் இரண்டு நிமிடங்களுக்குள் நான்கு அடி உயரத்தில் இடிபாடுகள் பரவிவிட்டன," என்று அந்த சம்பவம் குறித்து போத்ராஜ் தெரிவித்தார்.
"நிகழ்விடத்தில் உடல்கள் கிடந்தன. புதிய பாலம் கட்டப்படும் இடத்தில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மேலே இருந்த எஞ்சிய 100 முதல் 150 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்," என சாஷோட்டியின் நிலைமை குறித்து அவர் விவரித்தார்.
"சில விநாடிகளில் சிதிலங்கள் வந்தன. அவற்றில் பெரிய மரங்களும் கற்களும் அடங்கும்," என அவர் தெரிவித்தார்.
"மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர்"
தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்த ஒரு பெண், இந்தப் பேரழிவின் வேதனையான காட்சியை விவரித்தார்.
"நான் ஒரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். பின்னர் என் தந்தையைப் பார்த்து, தைரியத்துடன் வெளியேறினேன்," என்று அவர் தெரிவித்தார்.
"என் தாயார் ஒரு மின்கம்பத்தின் கீழ் சிக்கியிருந்தார், அவர்கள் மீது பலர் இருந்தனர். நான் எப்படியோ வெளியேறினேன், ஆனால் என் தாயார் மிகவும் காயமடைந்துள்ளார்," என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.
சாஷோட்டியில் ஏற்பட்ட அழிவு குறித்து அவர் கூறுகையில்: "அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். எங்கள் கண்முன் மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர். நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை ."
"மண், கற்கள், மரங்கள் உட்பட முழு மலையே கீழே இடிந்து வந்தது. எங்கும் சேறும் சகதியும் பரவியது," என இடிபாடுகளைப் பற்றி அவர் விவரித்தார்.
"குழந்தைகள் பலர் இருந்தனர். அவர்கள் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. என் தந்தை சிலரை மீட்டார், ஆனால் பலர் அங்கேயே உயிரிழந்தனர். சுற்றிலும் உடல்கள் கிடந்தன. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார்.
நிர்வாகம் விரைவாக அனைவருக்கும் உதவியதாகவும், ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கையின்போது ஒரு சிறுமி மீட்கப்பட்டார்.
"மேலிருந்து வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றது. அங்கு பலர் உயிரிழந்தனர், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
"நானும் நடுவில் சிக்கியிருந்தேன். ஒரு காவலர் எனக்கு உதவினார். அவர் என்னை மீட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள், ஆனால் என்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு