You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிணவறையில் உடற்கூராய்வு செய்யும் கர்ப்பிணி - எம்.காம். படித்தவர் இந்த வேலைக்கு வந்தது ஏன்?
- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
- பதவி, பிபிசிக்காக
(குறிப்பு: இந்தக் கட்டுரையின் சில அம்சங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
"உயிருடன் உள்ளவர்களைக் கண்டு பயப்பட வேண்டும். ஆனால் பிணங்களைக் கண்டு பயப்பட வேண்டுமா?"
பிரேத பரிசோதனை அறையில் பிணங்களை அறுத்துச் சோதனை செய்யும் வராலு என்ற இளம்பெண்ணின் கேள்வி இது. இறந்த உடலைக் கண்டாலே பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் எம்.காம். படித்த வராலு இந்த வேலையை ஒன்றரை ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
உடல்களை அறுத்து உடற்கூறாய்வு செய்வதென்பது பெரும்பாலும் ஆண்களால் செய்யப்படுகிறது. இந்தத் தொழிலுக்கு வரும் பெண்கள் மிகவும் அரிதானவர்கள். இந்நிலையில், வராலு இந்தத் தொழிலில் எப்படி நீடிப்பார்? அவருடைய கதை என்ன?
தற்போது கர்ப்பமாக இருக்கும் வராலு, மகப்பேறு விடுப்பில் வீட்டில் உள்ளார். அவரது வீட்டில் அவரை பிபிசி சந்தித்து வாழ்த்தியபோது அவர் சொன்ன கதை இதுதான்.
“என் பெயர் பகடலா வராலு. வயது 24. எங்களுடைய வீடு கடப்பா மாவட்டத்தின் சப்பாடு மண்டலத்தில் உள்ள சின்னவரதயப்பள்ளியில் உள்ளது. நான் புரொடத்தூரில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.”
“விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. அந்த உடல்களை அறுத்து உறுப்புகளை வெளியே எடுப்பது என் வேலை.”
“நான் எனது முழு விருப்பத்துடன் இந்த வேலையில் சேரவில்லை. வீட்டைக் கவனிப்பதற்காகத் தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். புரொடத்தூரில் இன்டர் (சிஇசி) வரை படித்தேன். பிறகு திருப்பதியில் எம்.காம். பட்டப்படிப்பு படித்தேன். என் தந்தை ஆடு மேய்ப்பவர். அம்மா வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருக்கிறார். முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்,” என விவரித்தார்.
மேலும், ”கடந்த ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. உடற்கூறாய்வு உதவியாளர் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு அப்பணிக்காக விண்ணப்பித்தேன். காகித வேலையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் பிணங்களை அறுத்து சோதனை செய்வதுதான் இங்கே எனது வேலை என பின்னர் தெரிய வந்தது.
இந்த வேலையை மட்டுமின்றி மற்ற வேலைகளையும் முயற்சி செய்யலாம். ஆனால் சம்பளம் குடும்பத்தின் தேவைக்கே போதுமானதாக இல்லை. அரசு வேலை என்பதால் சம்பளம் அதிகம். எதிர்காலத்தில் வேலை நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில் இந்த வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்,” என்றார்.
முதல் நாளில் மூன்று சடலங்கள்
மேற்கொண்டு பேசிய அவர், “முன்பு பிணங்களைப் பற்றிய பயம் இருந்தது. பிணங்களின் அருகில் சென்றால் இறந்தவர்கள் 'பேய்'களாக மாறி நம்மை ஆட்டிப் படைப்பார்கள் என்கின்றனர் பெரியவர்கள்.
அதனால் யாரும் உயிரற்ற மனித உடல்களின் அருகில் செல்வதில்லை. இத்தகைய சூழ்நிலையில், நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் மூன்று இறந்த உடல்களைக் கையாளும் நிலை ஏற்பட்டது. மருத்துவர் அந்த உடல்களை அறுத்து உடல் உறுப்புகளைப் பரிசோதனை செய்ததைப் பார்த்க்கும் நிலை ஏற்பட்டது.
உடற்கூறு ஆய்வு எப்படிச் செய்வது என்று அதுவரை எனக்குத் தெரியாது. முதல் நாள் மிகவும் பயமாக இருந்தது. அதைக் கற்றுக்கொடுத்த மருத்துவர் நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றார். இந்த வேலையைச் செய்யத்தான் நீங்கள் பணி அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள் என்று மருத்துவர் கூறினார். அன்றிலிருந்து நான் பயத்தை விட்டுவிட்டேன். நான் அதை ஒரு தொழிலாகக் கருதி, ஒரு வேலையாகச் செய்ய ஆரம்பித்தேன்,” என்றார்.
“நான் ஒரு சடலத்தை அறுத்து உறுப்புகளைப் பிரித்தெடுத்தேன். இரவும் பகலும் அதன் நினைவாகவே இருந்தது. தலையை உடைத்து உடல் உறுப்புகளை வெளியே இழுப்பது கனவில்கூட வந்து பயமுறுத்தியது. இது போன்ற கனவுகள் அடிக்கடி வருவது வழக்கம். முதலில் அந்த செயல்முறையைச் செய்ய நான் பயந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்லப் பழக்கமாகிவிட்டது.”
வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பு
தொடர்ந்து தமது பணி அனுபவம் குறித்து எங்களிடம் பேசிய பகடலா வராலு, பிணவறையில் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றார்.
“பழகிவிட்டது என்றாலும் இந்தப் பணி எளிதானது அல்ல. சில நேரங்களில் வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டது. சில உடல்களைப் பார்த்தால் வயிறு கலங்குகிறது. அழுகிய மற்றும் புழுக்கள் தாக்கிய சடலங்களும் வருகின்றன. அறை முழுவதும் நாற்றம் குமட்டும் நிலைகூட ஏற்படும்.
'இது என்ன கர்மா? ஆரம்பத்தில் சிறு வயதில் இருந்தது போலவே எப்படி வாழ்க்கை முழுவதும் வாழ்வது? முன்பு இருந்தவர்கள் இப்போது இறந்துவிட்டனர். இப்போது அவர்கள் இல்லை’ என்பது உள்ளிட்ட பல எண்ணங்கள் என் மனதுக்குள் ஓடின.”
சிறு சிறு காரணங்களுக்காகக்கூட பலர் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்து கொள்வதாக ஆதங்கப்பட்ட வராலு, அந்தத் தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.
“மொபைல் போன் வாங்கவில்லை, பெற்றோர்கள் வெளியில் அழைத்துச் செல்லவில்லை, விரும்பியதை யாரும் வாங்கித் தரவில்லை, பணம் கொடுக்கவில்லை, பைக் வாங்க முடியவில்லை என்பன உள்ளிட்ட சிறு காரணங்களுக்காக விஷம் குடிப்பது, தூக்கில் தொங்குவது, ரயிலில் விழுந்து உயிரை விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அவர்களின் உடல்கள் மிகவும் மோசமாக வருகின்றன. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? சின்ன சின்ன விஷயங்கள்கூட உயிரைப் பறிக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. உயிரை விடுவதற்கு முன் நான் அவர்களுடன் அமர்ந்து பேசியிருந்தால் அவர்கள் இப்படி துரதிர்ஷ்டவசமாக உயிரை இழந்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.”
'அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது'
“உடற்கூறாய்வு செய்யப் பயப்படுகிறோம். அவர்களும் (மது) குடித்துவிட்டு அதைச் செய்கிறார்கள். ‘அப்படி முதுகலை பட்டம் பெற்ற உங்களுக்கு இந்த வேலை தேவையா?’ என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
இந்தப் பெண், பிணங்களுக்கு அருகில் வேலை செய்துவிட்டு வருகிறாள். எனவே அவளைத் தொடாதே என்று சிலர் கூறுகிறார்கள். இதுபோன்ற நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருந்தது.
பிணங்களை அறுத்து ஆய்வு செய்வதால் சிலர் என்னை இழிவாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு மருத்துவரும் அதையே செய்கிறார். நான் அப்படிச் செய்தால் என்ன தவறு?
முதலில் அப்படிப்பட்ட வார்த்தைகளால் மனம் புண்பட்டாலும் பின்னர் அவற்றைக் கேட்பதற்கும் பழகிவிட்டேன். நான் என் வேலையைச் செய்கிறேன். அவர்கள் நினைப்பதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
உயிருள்ளவர்களைவிட பிணங்கள் எவ்வளவோ மேல்
மனிதர்கள் பொதுவாக பிணங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள். எனக்கும் வீட்டில் தனியாகப் படுத்து தூங்க முன்பெல்லாம் பயமாக இருந்தது.
இப்போது நான் நேரடியாக இறந்த உடலுக்கு மிக அருகில் செல்கிறேன். மனிதர்களைவிட இறந்த உடல்கள் சிறந்தவை என்றே தோன்றுகிறது. உண்மையில் அவை நம்மை ஒன்றும் செய்யாது.
கர்ப்பிணிப் பெண்கள் பிரேத பரிசோதனை அறைக்கு அருகில் இருக்கும்போது இறந்த உடல்களின் அருகில் செல்லக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது என் வேலை. அதைச் செய்வதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை.
'மாதத்திற்கு 25 உடல்கள் வருகின்றன'
சில இறந்த உடல்களை அவர்களது உறவினர்கள்கூட தொடுவதில்லை. அருகில் சென்று பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். மற்றவர்கள் அந்த பிணங்களைப் பார்த்தாலே அருவருப்பாக உணர்கின்றனர். ஆனால், அந்த பிணங்களைக்கூட கையாளும் எங்களுக்கும் பிறருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கே நீங்கள் உணர வேண்டும்.
மாதத்திற்கு 25 இறந்த உடல்கள் வரை நான் பணியாற்றும் பிணவறைக்கு வரும். இரண்டு ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்வோம். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம்.
பெண்ணாக இருந்தால் நுழைவுத் தேர்வுக்காகப் படிப்பது, மேற்படிப்பு படிப்பது பின்னர் அவரை திருமணம் செய்து அனுப்பும் பெற்றோர்கள் தான் இக்காலத்தில் இருக்கின்றனர். இதில் பலர் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் சொந்த கால்களில் நிற்கின்றனர். நானும் அப்படித்தான் இந்த வேலையைச் செய்து வருகிறேன்.
பணிக்கு ஊக்கம் அளிக்கும் கணவர்
உடற்கூறு ஆய்வுப் பிரிவின் உதவியாளராக வேலை பார்க்கும் மனைவிக்கு கணவர் பாலையா மற்றும் மாமியாரிடம் இருந்து தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
“யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று நான் சொன்னேன். உயிருடன் இருக்கும்போது நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
இவர்கள் இறந்தவர்களுக்கும் அதையே செய்கிறார்கள். முதலில் எனக்கும் பயம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. எனக்கு அப்படிப்பட்ட உணர்வுகளோ பயமோ இப்போது இல்லை.
நான் எம்பிஏ படித்திருக்கிறேன். வேலையின் மதிப்பு எனக்குத் தெரியும். அதனால்தான் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வேலையைச் செய்கிறார்கள்," என்றார் அவரது கணவர் பாலையா.
'முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம்'
அந்த இளம் பெண்ணால் எப்படி இந்த வேலையைச் செய்ய முடியும் என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட மருத்துவர்கள்கூட, தற்போது அவர் தனது பணிகளைத் திறம்படச் செய்வதைக் கண்டு வியந்துள்ளனர்.
வராலு தன் பணியை மிகவும் துணிச்சலாகச் செய்து வருகிறார் என புரொடத்தூர்லு வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் ஆனந்த்பாபு பாராட்டினார்.
"வராலு இப்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். இப்பணியை அவர் ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அவரால் எப்படி இந்தப் பணியைத் தொடர முடியும் என முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம்.
தொடக்கத்தில் அனுதீப் என்ற தடயவியல் நிபுணர் இருந்தார். அவர் வராலுவுக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார். வராலுவே இறந்த உடல்களை அறுத்து, பாகங்களை வெளியே எடுக்கிறார்.
அவர் பயமின்றி தைரியமாக வேலை செய்கிறார். பொதுவாக பெண்கள் பிரேத பரிசோதனைக்கு வருவதில்லை. ஆண்கள் மட்டுமே வருகிறார்கள். பலர் மதுவும் அருந்துகிறார்கள்.
ஆனால் அழுகிய உடலையும் துணிச்சலாக வராலு அறுத்து உறுப்புகளை எடுத்துத் தருகிறார். இந்த வேலையைச் செய்ய அந்தப் பெண்ணால் முடியும். அவர் இந்த வேலையை நன்றாகச் செய்கிறார்," என்று ஆனந்த் பாபு கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)