காணொளி: இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர்கின்றனவா?
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலையடுத்து இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் தோஹாவில் திங்கட்கிழமை நடந்த அவசர உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில் சேர்வார்களா என்ற கேள்விக்கு மத்தியில் இந்த மாநாடு நடந்ததது.
இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன? இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர்கின்றனவா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
கத்தார் கூறியது என்ன?
இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த கத்தார் அமீர் ஷேக் தமின் பின் ஹமத் அல்-தானி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்தார்.
"அரபு உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் முயற்சி செய்கிறது." என அவர் கூறினார்.
கடந்த வாரம் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் நோக்கம் "காஸா தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடங்கச் செய்வதுதான்" என்றும் கத்தார் அமீர் கூறினார்.
அமெரிக்காவுக்குக் கோரிக்கை
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்களும், "கூட்டு பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்த வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேசமயம், கத்தாரில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்டது போலத் தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, இஸ்ரேல் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதற்கிடையில், திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி தனக்கு ஏதும் தெரியாது எனவும், இது போன்ற தாக்குதல் இனி நிகழாது எனவும் தெரிவித்துள்ளார்.
சௌதி இளவரசருடன் பேசிய இரான் அதிபர்
இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதில் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையே பல தசாப்தங்களாக பகைமை நீடிக்கிறது. இரானில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். சௌதியில் மற்றொரு பிரிவான சுன்னி முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.
தற்போதைய விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரான் மற்றும் சௌதியும் ஒன்றிணைந்து விவாதித்துள்ளன.
இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், "காஸா இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அழிக்கும் செயல்" என தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலை விமர்சித்தார்.
தோஹா மீதான தாக்குதல், இஸ்ரேலிய "தாக்குதலிலிருந்து" எந்த இஸ்லாமிய அல்லது அரபு நாடும் பாதுகாப்பாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கத்தார் அமீருடன் பேச்சுவார்த்தை நடத்திய மசூத் பெஷஷ்கியன், சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் இராக்கின் பிரதமர் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேலுக்கு வலுத்த கண்டனம்
துருக்கியின் அதிபர் எர்துவான், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
"இஸ்ரேலுக்கு எதிரான தடைகளை அதிகரிக்க, ராஜீய முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்" என கூறிய அவர், "துருக்கி, தனது பாதுகாப்புத் தொழில்நுட்ப திறன்களைச் சகோதர நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது." என்றார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், "கண்டனங்கள் இஸ்ரேலின் ஏவுகணைகளை நிறுத்தாது; அறிக்கைகள் பாலத்தீனத்தை விடுவிக்காது." என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், "இஸ்ரேலிய விரிவாக்கத் திட்டங்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்?
கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், உச்சி மாநாட்டின் ஓரு பகுதியாகத் தனிப்பட்ட சந்திப்பு நடத்தின.
அதில், கூட்டு பாதுகாப்பு அமைப்பையும், வளைகுடா நாடுகளின் தடுப்புத் திறன்களையும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுப்பு நாடுகள் கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. ஆனால், அதில் அதற்கான விவரங்களைப் பற்றி தகவல்கள் விவரிக்கவில்லை.
இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றுபடுகிறதா என்ற கேள்வி தொடர்ந்து நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், தோஹா மாநாடு பிராந்திய அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



