செந்தில் பாலாஜியை கைவிடப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பது ஏன்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு ஆளுநர் மீதும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதி இருக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். அவரது கருத்துகள் சுட்டிக்காட்டுவதென்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில், தமிழ்நாடு ஆளுநர், செந்தில் பாலாஜி விவகாரம், காங்கிரசுடனான கூட்டணி, பா.ஜ.க. ஆகியவை குறித்து அவர் சில முக்கியக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

தங்களது அரசு நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர், தமிழக நலன்களுடன் ஆளுநர் விபரீத விளையாட்டை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

"இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து - இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது “ என்று கூறியிருக்கிறார்.

“நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகிறது. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல் சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன் - தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்” என்றும் முதலமைச்சர் தனது பேட்டியில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு" என்று இந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

செந்தில் பாலாஜி விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர் சட்டரீதியான விசாரணையைச் சந்திக்க வேண்டுமென்று கூறியுள்ள முதலமைச்சர், அவரது கைது சட்டவிரோதமானது எனவும் அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

"அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அ.தி.மு.க. அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது, அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. “ என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

“9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக - திடீரென்று ரெய்டு நடத்தி - 18 மணி நேரம் அடைத்து வைத்து - சித்ரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவசரம் எங்கே வந்தது?

எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது. மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார்." என்று கூறியிருக்கிறார்.

தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜியை நீக்கியிருக்கலாமே என்ற கேள்விக்கு, "தார்மீக அடிப்படை" ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார் முதலமைச்சர்.

"நாடு முழுவதும் குற்ற வழக்குகளைச் சந்திக்கும் எம்.எல்.ஏ.க்கள் - எம்.பி.க்கள் மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் ஜெயலலிதா. பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையிலேயே எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். ஆகவே “தார்மீக அடிப்படை” என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தும் கிளை அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப்பட்ட பிறகு - நான் எடுத்துள்ள நிலைப்பாடே சரியானது" என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அணியைக் கட்டமைப்பதாலேயே தங்களை பா.ஜ.க. குறிவைப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

"தி.மு.க. அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பா.ஜ.க.வின் வன்மத் தாக்குதலுக்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், இந்தப் பேட்டியின் மூலம், பா.ஜ.க. எதிர்ப்பு, செந்தில் பாலாஜியை கைவிடப்போவதில்லை, காங்கிரசுடன் கூட்டணி ஆகிய விஷயங்களை தி.மு.க. தலைமை உறுதிப்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

"அமலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பயமுறுத்துவது என்ற தந்திரம் மேற்கு வங்கத்திலும் மகாராஷ்டிராவிலும் பலனளித்தது. ஆனால், தமிழ்நாட்டில் வேலைக்காகவில்லை. செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்யும் கடிதத்தை ஐந்து மணி நேரத்தில் திரும்பப் பெற வைத்ததன் மூலம், சட்டரீதியாக ஆளுநரை கட்டுப்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறது தி.மு.க. பா.ஜ.கவை எதிர்க்கக் கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது என்றும் பா.ஜ.கவிற்குச் சொல்லியிருக்கிறது.“என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“இது தவிர, செந்தில் பாலாஜியை கைவிட மாட்டோம் என்பது ஒரு முக்கியமான அரசியல் ஸ்டேட்மென்ட். 2ஜி விவகாரத்தில் ஆ. ராசாவின் மீதும் கனிமொழி மீதும் குற்றம்சாட்டப்பட்ட போது, கட்சி அவர்களுடன்தான் இருந்தது. தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்ள முடியும், யாரையும் பலி கொடுத்தோ, கைவிட்டோ வெற்றிபெற முடியாது என்பதில் தி.மு.க. தெளிவாக இருக்கிறது. சர்க்காரியா கமிஷன் காலகட்டத்திலும் தி.மு.க. இப்படித்தான் நடந்துகொண்டது. இது தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்துவரும் நிலைப்பாட்டின் தொடர்ச்சி" என்கிறார் பன்னீர்செல்வன்.

2024ஆம் ஆண்டுத் தேர்தலை சந்திக்கும்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதி இருப்பாரா என்பதில் முதல்வர் சந்தேகம் எழுப்பியிருப்பது சரிதான் என்கிறார் அவர்.

"வரவிருக்கும் மூன்று மாநிலத் தேர்தல்களில் என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தில் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் பா.ஜ.கவுக்கு இப்போதுவரை தெளிவில்லை. தெலங்கானாவைப் பொறுத்தவரை, யாரும் எதிர்பாராத விதமாக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளர்ந்துவிட்டது. ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்கப்போகிறது. கர்நாடக மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாநிலத் தேர்தல்களிலும் தோல்வியடைந்தால் அதே தலைமை எப்படித் தொடர முடியும்?”

“பா.ஜ.க.வில் மக்களால் தேர்வுசெய்யப்படும் தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரைவிட மாநிலங்களவை மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் முக்கியத்துவம் கட்சித் தலைமையின் அச்சத்தையே காட்டுகிறது. மக்களால் தேர்வு செய்யப்படுபவர்களைவிட நிர்மலா சீதாராமனுக்கும் ஜெய்சங்கருக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனவேதான் முதலமைச்சர் அப்படிச் சொல்லியிருக்கிறார்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ஆனால், செந்தில் பாலாஜியைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்திருப்பது அவ்வளவு சிறப்பான வியூகம் கிடையாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"செந்தில் பாலாஜியை கைவிட மாட்டேன் என ஜெயலலிதா மீதான வழக்குகளைச் சுட்டிக்காட்டி கேட்கிறார். ஜெயலலிதா போலத்தான் இவரும் செயல்படுவார் என்றால் இவரை ஏன் தேர்வுசெய்ய வேண்டும். தி.மு.கவை ஏன் ஒரு மாற்றாகக் கருத வேண்டும்? செந்தில் பாலாஜி நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்த பிறகு அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை அளிக்கலாமே? ஒரே ஒரு செந்தில் பாலாஜிக்காக அரசியல் அரங்கில் தினமும் தி.மு.கவினர் அவமானப்படுவதை எப்படி சகித்துக்கொள்வது? ஒருவேளை நாளை அவர் தண்டிக்கப்பட்டால், கட்சிக்கு மிகப் பெரிய அவமானமாகிவிடும். ஆனால், முதல்வர் தான் முதலில் எடுத்த முடிவை மாற்ற வேண்டாம் எனக் கருதுகிறார். அது சரியான வியூகமாகத் தெரியவில்லை" என்கிறார் குபேந்திரன்.

இதே பேட்டியில், நீட் தேர்வை நீக்குவது குறித்த கேள்விக்கு, "மாநில அரசால் செய்ய முடிந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மத்திய அரசு செய்ய வேண்டியதை, மத்திய அரசின் மூலமாக செய்ய வைப்போம். மத்திய அரசு செய்யத் தவறினால், மத்திய அரசை மாற்றி செயல்படுத்திக் காட்டுவோம்" என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: