ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்: கடத்தியவர்கள் மீதே பணயக் கைதிகள் பாசம் வைப்பது ஏன்?

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்பது கடத்தப்பட்ட பணயக்கைதிகள் கடத்தல்காரர்கள் மீது கரிசனத்துடன் இருப்பதாகும். அதாவது தன்னை துன்புறுத்தும் நபர் மீதே, கரிசனமும் பாசமும் வளரும் சூழல் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது.

இதை எளிதாக புரிந்துக் கொள்ள, பிரபல மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் சம்பவங்களை உதாரணமாக கூறலாம். அதில் கொள்ளைக்காரர்கள் ஸ்பெயினில் உள்ள வங்கியை கொள்ளை அடித்து, ஊழியர்களையும், பொதுமக்களையும் பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பார்கள். அதில் பணய கைதியான மோனிகா கஸ்தம்பீட் என்ற பெண் ஒருவரை கொலை செய்யுமாறு டென்வர் என்ற கடத்தல் கும்பலின் நபருக்கு உத்தரவு போடப்பட்டிருக்கும். ஆனால் அவர் அந்த பெண்ணை கொல்லாமல், காலில் சுட்டு, கொன்றது போல நாடகமாடி, அந்த பெண்ணை மறைத்து விடுவார். பின் அவர்கள் இருவரும் காதலில் விழுந்து திருமணமும் செய்து கொள்வர். அவர்களுடன் சேர்ந்து அவரும் அடுத்த முறை கொள்ளையடிப்பார்.

அதே போன்று, இந்த கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் லிஸ்பன் என்ற கதாபாத்திரம், கொள்ளைக்கூட்டத் தலைவரான ப்ரொபசர் என்ற கதாபாத்திரத்துடன் காதலில் விழுந்து, அவர்களின் நியாயங்களை ஒப்புக் கொண்டு பின்னர் அடுத்த கொள்ளையில் அவரும் துணை புரிவார்.

இப்படி தன்னை கடத்தியவர்களிடமே பரிவுக் கொண்டிருப்பது தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது.

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் - பெயர் காரணம் என்ன?

மணி ஹெய்ஸ்ட் சீரிஸ்-ன் கதை கிட்டத்தட்ட நிஜமாகவே 50 ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில், ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கிரெடெட்பேங்கென் என்ற வங்கியில் 1973-ல், ஜான் எரிக் ஆல்சன் என்பவர் கொள்ளை அடித்தார். அப்போது நான்கு வங்கி ஊழியர்களை ஆறு நாட்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். சிறையில் இருந்த அவரது நண்பர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்று அவர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

ஆறு நாட்களுக்குப் பின் , கட்டிடத்தில் துளையிட்டு கண்ணீர்ப்புகை செலுத்தி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, பணய கைதிகள் அவருக்கு ஆதரவாக பேச தொடங்கினர். அவர் தங்களை துன்புறுத்தாமல் நன்றாக பார்த்துக் கொண்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகே, இதுபோன்ற உணர்வு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது.

கலிபோர்னிய செய்தித்தாள் உரிமையாளர் பேட்டி ஹேர்ஸ்ட், 1974-ல் புரட்சியாளர்கள் குழுவினால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் அந்த குழுவின் நோக்கங்களோடு இசைந்து, அவர்களுடன் இணைந்து கொள்ளையடித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவரது வழக்கறிஞர், 19 வயதான பேட்டி ஹேர்ஸ்ட், மூளைச் சலவை செய்யப்பட்டு, ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் -ஆல் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார். இந்த சம்பவம் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்ற சொல்லை அதிகம் தொடர்ப்புப்படுத்தி பேசப்பட்டது.

கடத்தல்காரர் மீது ஏன் கரிசனம் ஏற்படுகிறது?

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்ற சொல்லை உருவாக்கியவர் ஸ்வீடன் குற்றவியல், உளவியல் நிபுணர் நில்ஸ் பெஜிராட் என கூறப்படுகிறது. 1970களில் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவான எப் பி ஐ மற்றும் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்த மனநல மருத்துவர் பிரான்க் ஓக்பெர்க்ன் இது குறித்து மேலும் விளக்கியிருந்தார்.

“முதலில் கடத்தப்படுவர்கள் பயங்கரமான ஒரு சம்பவம் திடீரென நிகழ்ந்ததாக உணர்வர். தாங்கள் சாக போகிறோம் என்றே உறுதியாக நினைப்பார்கள். பின்னர் ஒரு குழந்தை போல அவர்கள் நடந்துக் கொள்வார்கள். அதாவது அனுமதியின்றி பேசவோ, சாப்பிடவோ, கழிவறைக்கோ செல்ல முடியாத நிலையில் இருப்பார்கள்” என்று கூறுகிறார்.

“அந்நேரத்தில், உணவு அளிப்பது போன்ற கனிவான சிறு நடவடிக்கைகள் கூட மிகப் பெரியதாக தோன்றும், வாழ்வதற்கு உதவி புரிந்தமைக்கான நன்றி உணர்வு அவர்களுக்கு தோன்றும்” என்கிறார் அவர்.

பணய கைதிகள், தங்கள் கடத்தல்காரர் மீது நேர்மறையான சக்தி மிகுந்த உணர்வை கொண்டிருப்பாகள் என்றும், இந்த கடத்தல்காரர் தன்னை இந்த நிலையில் வைத்துள்ளார் என்பதை அவர்கள் மனம் ஏற்க மறுக்கும் என்றும் விளக்குகிறார். அவர்கள் மனதில், கடத்தல்காரர் தான் தங்களை வாழ வைக்கும் நபராக எண்ணுவார்கள் என்றார் மனநலர் மருத்துவர் பிரான்க் ஓக்பெர்க்ன். ஆனால் இதுபோன்று உணர்வது அரிதானதே என்றும் குறிப்பிடுகிறார்.

50 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாக்ஹோம் வங்கியில் என்ன நடந்தது?

கொள்ளையரால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கிரிஸ்டின் என்மார்க் என்ற வங்கி ஊழியர், 1972-ல் நடந்த சம்பவம் குறித்து 2009ம் ஆண்டு ரேடியோ ஸ்வீடனில் பேட்டி அளித்திருந்தார். “ஒருவர் அதுவரை கொண்டிருந்த பற்றுகள், மதிப்புகள், விழுமியங்கள் எல்லாம் மாறி போகும் ஒரு விதமான சூழல் அது” என்றார். என்மார்க் தான் ஆல்சனுடன் மிகவும் நெருங்கிய பணயக்கைதியாக இருந்திருக்கிறார்.

வங்கியில் கடத்தி வைக்கப்பட்டிருந்த போது, ஒரு முறை ஸ்வீடன் நாட்டின் பிரதமர் ஒலோப் பால்ம்-யிடம் என்மார்க் தொலைபேசியில் பேச வேண்டியிருந்தது. அப்போது அவர், கடத்தல்காரருடன் சேர்த்து அனைவரும் வங்கியை விட்டு வெளியேற அனுமதி அளிக்குமாறு மன்றாடினார். பணயக்கைதிகளுடன் வங்கியிலிருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த ஆல்சன், ஒரு கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதிகாரிகள் அதனை மறுத்து விட்டனர்.

பிரதமரிடம் பேசும் போது ஒரு கட்டத்தில் என் மார்க், “எனக்கு தங்கள் மீது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது” என்றார். “ எங்கள் வாழ்க்கையை வைத்துக் கொண்டு நீங்கள் அங்கே சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் கடத்தல்காரர்களை முழுவதுமாக நம்புகிறேன். அவர்கள் எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவர்கள் கனிவுடன் நடந்துக் கொண்டனர். ஆனால், ஓலோப், எனது பயம் எல்லாம், காவல் துறையினர் எங்களை தாக்கி சாகடித்து விடுவார்கள் என்பது தான்” என்றார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் லாங்க், நியூ யார்கர் செய்தி நிறுவனத்துக்காக பேட்டி எடுத்திருந்தார். பணய கைதிகளில் ஒருவரான எலிசபெத் ஆல்ட்க்ரென், எப்படி தனக்கு தன்னை கடத்தியவரிடம் நன்றி உணர்வு ஏற்பட்டது என விளக்குகிறார்.

கடத்தி வைக்கப்பட்டிருந்த போது, எலிசபெத் ஆல்ட்க்ரெனுக்கு ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது மன சோர்வையும் பயத்தையும் ஏற்படுத்தியது. அதனை அறிந்த ஆல்சன், எலிசபெத்தை ஒரு கயிற்றால் கட்டி வங்கி முழுவதும் சென்று வர அனுமதித்தார். “அது மிக கனிவான செயலாக எனக்கு தோன்றியது” என்கிறார் எலிசபெத் ஆல்ட்க்ரென்.

சாப்ஸ்ட்ராம், மற்றொரு பணய கைதியும், கடத்தியவர் மீது நன்றியுணர்வு உருவானதாக கூறுகிறார். காவல்துறையினர் தன்னை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க, சாப்ஸ்ட்ராம்- ஐ கொல்ல போவதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் கொல்ல போவதில்லை, சாப்ஸ்ட்ராம்-க்கு மதுபானம் கொடுத்து அவரை மயங்க செய்து கொல்வது போல நாடகமாட போவதாக ஆல்சன் தெரிவித்துள்ளார். “எங்களை நன்றாக நடத்திய போது அவர் எங்களுக்கு ஆபாத்பாந்தவனாக தெரிந்தார்” என்றார் சாப்ஸ்ட்ராம்.

இந்த உளவியல் அணுகுமுறை, கடத்தல் சம்பவங்களின் போது காவல்துறையினர் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், இதுபோன்ற உணர்வுகள் தோன்றுவது மிக அரிதானதாகவே இருக்கிறது என கூறப்படுகிறது.

இது போன்ற உணர்வுகள் தோன்றும் சூழல்கள், கடத்தல் மட்டுமல்லாமல் வெவ்வேறானவையாகயும் இருக்கின்றன.

குடும்ப வன்முறை சம்பவங்கள் இதற்கு மற்றொரு உதாரணம் என்கிறார் ஆக்ஸ்பார்ட் பல்கலைகழக மனநல ஆலோசகர் ஜெனிபர் வைல்ட். “ குடும்ப வன்முறைகளின் போது குறிப்பாக ஆணை சார்ந்திருக்கும் பெண்ணுக்கு கோபத்துக்கு பதில் அனுதாபமே தோன்றும். குழந்தை துன்புறுத்தல் சம்பவங்களிலும் இதை காண முடியும். பெற்றோர்கள் உணர்வு ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தும் போது அந்த குழந்தை பெற்றோரை காட்டிக் கொடுக்காமல் பாதுகாக்கவே நினைக்கும்” என்கிறார்.

ஆனால், துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் நபரின் உணர்வுகளுக்கு இப்படி பெயர் வைத்து ஒரு வரம்புக்குள் வைப்பது சரியல்ல என்று கூறுபவர்களும் உண்டு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: