வங்கிகளில் வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

    • எழுதியவர், அஜித் கத்வி
    • பதவி, பிபிசி

இந்தியாவில் தங்கம் என்பது நெருக்கடி காலத்தில் ஆபத்பாந்தவனாக உள்ளது. வேறு வழியே இல்லாத சமயங்களில் மக்கள் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர்.

தங்க நகைக்கடன் என்பது மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வெள்ளியை வைத்து கடன் பெறுவது தொடர்பான சில விதிகளை மாற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெள்ளியை வைத்து கடன் பெறுவது எப்படி? எவ்வளவு கடன் பெற முடியும்? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

"வெள்ளியை வைத்து கடன் பெறுவது எளிது"

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெள்ளியை வைத்து கடன் பெறுவது குறித்த விதிகளை மாற்றி புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

கிராமப்புற வங்கிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளும் இனி வெள்ளியை பெற்றுக் கொண்டு கடன் வழங்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்களும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் வெள்ளிக்கு கடன் வழங்க முடியும்.

எந்த வகையான தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடன் கிடைக்காது?

தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகளை வைத்து கடன் பெற முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில் நாணயங்கள் மற்றும் நகைகளை வைத்து கடன் பெற முடியும்.

தங்கம் மற்றும் வெள்ளி யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி இருக்கும் பட்சத்தில் கடன் பெற முடியாது.

ஏற்கெனவே வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்கம் அல்லது வெள்ளி மீது மீண்டும் கடன் பெற முடியாது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, இந்த கடன் காலம் 12 மாதங்களாக இருக்கும்.

எவ்வளவு நகைகளை அடமானம் வைக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையின்படி, ஒரு தனிப்பட்ட நபரால் அடகு வைக்கப்படும் அனைத்து நகைகளின் மொத்த எடைக்கும் ஒரு வரம்பு உண்டு. தங்க நகைகளை அதிகபட்சமாக ஒரு கிலோ வரையும், வெள்ளி நகைகளை அதிகபட்சமாக 10 கிலோ வரையும் அடகு வைக்கலாம்.

அனைத்துக் கடன்களுக்கும் சேர்த்து தங்க காசுகளின் மொத்த எடை 50 கிராமுக்கு மேல் இருக்கக் கூடாது. வெள்ளிக் காசுகளின் எடை 500 கிராமுக்கு மேல் இருக்கக் கூடாது.

எவ்வளவு ரூபாய் வரை கடன் பெறலாம்?

எந்தவொரு தனிநபரும் தங்கம் அல்லது வெள்ளிக்கு ஈடாக அதிகபட்சமாக எவ்வளவு கடன் பெற முடியும் என்பதற்கும் ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடன் - நகைகளின் மதிப்பு விகிதம் (Loan to Value Ratio - LTV) மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

நகைகளின் மதிப்பு 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால், 80% வரை கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை தெரிவிக்கிறது. இரண்டரை லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், 85% வரை கடன் பெறலாம். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், 75% வரை கடன் பெறலாம்.

கடனுக்கான தங்கம்-வெள்ளியின் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நகைகளை அடகு வைக்கும்போது அதன் மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது?

அதற்காக, 30 நாட்களின் தங்கம் மற்றும் வெள்ளியின் சராசரி இறுதி விலை (Average Closing Price), அல்லது ஐபிஜேஏ (இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லரி அசோசியேஷன்) அல்லது செபியால் முந்தைய நாள் அறிவிக்கப்பட்ட இறுதி விலை, இந்த இரண்டு விலைகளில் குறைவான விலையின் அடிப்படையில் நகைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கம்-வெள்ளி மீதான கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் என்ன ஆகும்?

தங்கம் அல்லது வெள்ளி நகைகளுக்கு ஈடாகக் கடன் பெறப்படும்போது, அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது அவசியம்.

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையின்படி, கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறினால், கடன் வழங்குபவர் (வங்கி அல்லது நிதி நிறுவனம்) அத்தகைய நகைகளை ஏலம் (auction) விடலாம். இருப்பினும், ஏலம் விடுவதற்கு முன்பு, கடன் வாங்கியவருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுப்பது அவசியம்.

கடன் வாங்கியவரின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், முதலில் ஒரு பொது அறிவிப்பை (public notice) வெளியிட வேண்டும். அதன் பிறகு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் கடனாளியைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அடகு வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்படும்.

ஏலத்தின் போது, நகைகளுக்கு வங்கி ஒரு குறைந்தபட்ச விலையை (Reserve Price) அறிவிக்க வேண்டும். இந்த விலை அந்தந்த காலகட்டத்தின் நடப்பு மதிப்பில் 90%க்குக் குறைவாக இருக்கக்கூடாது.

இரண்டு முறை ஏலம் தோல்வியடைந்தால், ரிசர்வ் விலை குறைக்கப்பட்டு, நடப்பு மதிப்பில் குறைந்தபட்சம் 85% ஆக நிர்ணயிக்கப்படும்.

கடன் செலுத்தப்பட்ட பிறகு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அடகு வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியை வங்கி விடுவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாமதம் ஏற்பட்டால், கடன் வாங்கியவர் அல்லது அவரது வாரிசுக்கு ஒரு நாளைக்கு ₹5,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தங்கம் அல்லது வெள்ளிக்கு ஈடாக எப்போது கடன் பெறவேண்டும்?

நிதி வல்லுநர்கள், தங்கம் அல்லது வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது கடைசி வழியாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள்.

"தங்கம் அல்லது வெள்ளியை நீங்கள் அடகு வைக்கும் போது, அதனை சேமித்து வைப்பதற்கான கட்டணமும் விதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றன," என அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரான மிதுன் ஜத்தல் கூறுகிறார்.

"சரியான நேரத்தில் கடனைச் செலுத்தத் தவறினால், உங்கள் நகைகள் ஏலம் போகலாம். கூடுதலாக, தங்கம்-வெள்ளி நகைகளுக்கு ஈடாகக் கடன் வாங்குபவர் நிதி நெருக்கடியில் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்படுவதால், இது சிபில் ஸ்கோரைப் (CIBIL score) பாதிக்கிறது. இது ஒரு வகையான தனிநபர் கடன் (Personal Loan) போன்றது." என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேபோல், ஆமதாபாத்தைச் சேர்ந்த மணி பிளான்ட் ஃபின்மார்ட்டின் இயக்குநர் மெஹுல் ஷாவும் "தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஈடான கடன் கடைசி விருப்பமாகவே இருக்க வேண்டும். அவசர காலங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும்." என சொல்கிறார்.

"நாம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்லும் பாரம்பரியம் உள்ளது. எனவே, சில சமயங்களில் நகைகளைச் சரியான நேரத்தில் திருப்ப முடியாவிட்டால், அவற்றை நிரந்தரமாக இழக்க நேரிடலாம். எனவே, கடன் வாங்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு