பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று குஜராத்தி சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர்.

சூரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷைலேஷ் கல்தியாவின் உடல் உள்பட, தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

தாக்குதலில் இறந்த ஷைலேஷ் கல்தியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​இறந்தவரின் மனைவி ஷீத்தல் கல்தியா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் முன் தனது கோபத்தை வெளிப்படுத்தி ஜம்மு-காஷ்மீர் நிலைமையை விவரித்தார்.

"சுற்றுலாப் பயணிகளுக்கு இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தாலும், ராணுவத்திற்கு அது தெரியாது" என்று கூறிய ஷீத்தல், "காஷ்மீர் ஒரு சுற்றுலாத் தலம், ஆனாலும் அங்கு ராணுவ வீரர்கள் இல்லை, காவல் துறையினர் இல்லை, முதலுதவிப் பெட்டிகள் இல்லை. வசதிகள் இல்லை," என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு பிரச்னை பற்றி இறந்தவரின் மனைவி கூறியது என்ன?

சம்பவத்திற்குப் பிறகு, ஒரு ராணுவ வீரர் தங்களிடம், 'நீங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' எனக் கேட்டதாக ஷீத்தல் கல்தியா கூறினார்.

"அப்படியானால், எங்களை ஏன் மேலே செல்ல விட்டீர்கள்? எங்களது ஆதரவுத் தூண் போய்விட்டது." என்றார் ஷீத்தல்.

குடிமக்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததைக் கண்டித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய அவர், "அரசாங்கம் முதலில் தன்னுடைய வசதிகளைப் பராமரிக்க வேண்டும். உங்களுக்குப் பின்னால் எத்தனை விஐபிக்கள் உள்ளனர்? எத்தனை கார்கள் உங்களுக்காகச் செல்கின்றன? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைதான் முக்கியம். ஆனால், அது வரி செலுத்தும் மக்களின் வாழ்க்கை அல்ல."

"ஆனால் இந்த இரண்டு சிறுவர்களைப் பற்றி என்ன சொல்வது? ஒருவர் டாக்டராக விரும்புகிறார். மற்றொருவருக்கு இன்ஜினியர் ஆக வேண்டுமென்று ஆசை. இப்போது எப்படி நான் அவர்களைப் படிக்க வைப்பது?" என்றார் ஷீத்தல்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் எங்களிடமிருந்து எல்லா வரிகளையும் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் என் குடும்பத்திற்குத் தேவைப்படும்போது எந்த வசதிகளும் கிடைக்கவில்லை."

"காஷ்மீர் மோசமாக இல்லை. ஆனால் அங்கு பாதுகாப்பு நன்றாக இல்லை"

"மேலே உள்ள மினி சுவிட்சர்லாந்தில் ஒரு அதிகாரிகூட இல்லை. ஒரு பாதுகாப்பு வீரரும் இல்லை. அப்படி யாராவது இருந்திருந்தால், இது நடந்திருக்காது." என்றார்.

ராணுவத்தினர் கேட்டது என்ன?

"இவ்வளவு நடந்த பிறகும், கீழே இருந்த ராணுவத்தினருக்கு மேலே என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து தகவல் தெரிவித்துவிட்டு, ஆம்புலன்ஸை அழைத்தபோதுதான் மேலே ஏதோ நடந்திருப்பதை ராணுவத்தினர் அறிந்தனர்" என்கிறார் ஷீத்தல்.

ராணுவத்தினர் தங்களிடம் "நீங்கள் ஏன் நடந்து வருகிறீர்கள்?" என்று கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஷீத்தல், "நாங்கள் அரசை நம்பி, ராணுவத்தை நம்பி மேலே சென்றோம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று ராணுவம் கேட்டது. அந்த அதிகாரியைப் பிடித்து, ஏன் அப்படிச் சொன்னார் என்று கேளுங்கள். சிறுவர்கள் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்கள்" என்கிறார்.

"நம் நாட்டின் ராணுவமே இப்படிப் பேசினால், வேறு யாரிடம் பேச முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"விஐபிகளுக்கு ஹெலிகாப்டர் போன்ற உயர்ந்த வசதிகள் உள்ளன. அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அந்த வரியைச் செலுத்திய பிறகும் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த வசதியும் இல்லை. ஹெலிகாப்டரை விடுங்கள். ஒரு ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லை, எந்த வீரரும் இல்லை, அதிகாரியும் இல்லை."

"பயங்கரவாதிகள் முன்னோக்கி வந்து எங்களைச் சுடும்போது, எங்கள் அரசாங்கம் என்ன செய்கிறது? அங்கே ராணுவத்தைப் பார்த்தபோது, இதுவே பாதுகாப்பான இடம் என்று நாங்கள் நினைத்தோம்."

"நமக்கு என்ன மாதிரியான அரசாங்கம் இருக்கிறது? காஷ்மீரில் பிரச்னை அல்ல; நமது அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பில்தான் பிரச்னை" என்றார் ஷீத்தல்.

பாவ்நகரில் இறந்தவரின் உறவினர்கள் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாவ்நகரைச் சேர்ந்த தந்தையும் மகனும் இறந்துள்ளனர். அவர்களது உடலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதில் பாவ்நகரை சேர்ந்த யதீஷ் பர்மாரும் அவரது மகன் ஸ்மித் பர்மாரும் இறந்தனர்.

தந்தை மற்றும் மகனின் உடல்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி-ஆமதாபாத் வழியாக விமானம் மூலம் இரவு தாமதமாக பாவ்நகருக்கு கொண்டு வரப்பட்டன.

பாவ்நகரை சேர்ந்த இறந்தவரின் உறவினரான சர்தக் நதானி கூறுகையில், "நாங்கள் குதிரையில் மலையில் ஏறி டிக்கெட்டுகளுடன் உள்ளே சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், இரண்டு தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. அது பட்டாசுகள் என்று நினைத்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு, பயங்கரவாதிகள் அருகில் வந்து சுடத் தொடங்கினர்.

என் மனைவி சுடப்பட்டபோது நாங்கள் மூன்று பேர் அங்கே இருந்தோம். என் சகோதரர் சுமித் அங்கே நின்று கொண்டிருந்தார், அவரையும் அவர்கள் சுட்டனர்."

"சம்பவம் நடந்தபோது ராணுவ வீரர்களோ அல்லது பாதுகாப்புப் படையினரோ யாரும் இல்லை" என்று சர்தக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.