கத்தார்: முன்னாள் கடற்படையினர் மரண தண்டனை பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை தளபதி

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.

அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

இந்தியர்களின் மரண தண்டனை குறித்து இந்திய கடற்படை தளபதி என்ன கூறினார்?

கத்தாரில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் அவர் பேசுகையில் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், "சம்பந்தப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னெவென்று இன்னும் கத்தார் பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினரையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார்.

மேலும், இந்திய அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவத்தோடு இந்த விவகாரத்தைக் கவனித்து வருவதாகவும் இந்தக் கடினமான நேரத்தில் அதிகாரிகளின் அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் ஆறுதலாக இருக்கும்," எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கத்தார் அரசு கைது செய்தது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளும் இந்திய குடிமகன்களுமான கைது செய்யப்பட்ட 8 பேரும் கத்தாரை சேர்ந்த ஜஹிரா அல் அலாமி எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த திட்டத்தின் நோக்கமானது ரேடாரில் சிக்காத நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது.

இந்தியாவைச் சேர்ந்த 75 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையில் முன்னாள் அதிகார்கள். கடந்த மே மாதத்தில், 2022ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த நிறுவனத்தை மூடப்போவதாக நிறுவனம் சார்பில் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, ​​இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்?

எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது.

அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார்.

பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார்.

பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார்.

தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)