You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் குழந்தைகளுக்கு அதிக பலன் தரும் புதிய சேமிப்பு திட்டம் - எங்கே, எப்படி தொடங்குவது?
மகளிரின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு ஒரு புதிய சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
கடந்த பட்ஜெட்டின்போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் மஹிளா சம்மான் சேமிப்புப் பத்திரம்.
சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தபால்துறை அலுவலகம் ஒன்றில், MSSC எனும் மஹிளா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கை தொடங்கினார். அதை ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து எம்எஸ்எஸ்சி கணக்கில் நிறைய பெண்கள் சேரவேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமேயான திட்டம்
பிரதமர் மோடி கொண்டு வந்த இந்தத் திட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். அவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் சேமிக்கும் தொகையை வட்டியோடு திருப்பி அளிக்கும் பெண்களுக்கான மிகச் சிறந்த திட்டம் இது. இதில் 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களும் இணைய முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியர், குழந்தைகளும் அவர்களுடைய பொறுப்பாளர்கள் பெயரில் (guardian) மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
மாதம் எவ்வளவு சேமிக்கலாம் ?
ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டை 100-ன் மடங்குகளில் தான் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, ரூ1000, ரூ.1100, ரூ.1200, ரூ.1300 என்பது போல் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் எத்தனை கணக்குகள் என வரையறுக்கப்படவில்லை. ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு கணக்கிற்கும் 3 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
எங்கே தொடங்குவது? எப்படித் தொடங்குவது?
இந்தத் திட்டம் நம் நாட்டில் உள்ள தபால் நிலையங்கள் அனைத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. டெபாசிட்டை ஆரம்பிக்க ஆதார், பான் ஆவணங்கள் தேவைப்படும். அவை இரண்டும் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். ஆதார் கார்டு இல்லாதவர்கள், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஆதார் கார்டு இருப்பது இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதை எளிமையாக்கும்.
தேவைப்படும் போது பணம் எடுக்க முடியுமா?
டெபாசிட்டை ஆரம்பித்து ஓராண்டு கழித்து, கணக்கிலிருக்கும் தொகையில் அதிகபட்சமாக 40 சதவிகித தொகையை எடுத்துக் கொள்ளலாம். டெபாசிட் கணக்கை தொடங்கியவர் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால், அப்போது முழுத் தொகையும் வழங்கப்பட்டு விடும். டெபாசிட் போட்டிருப்பவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு இந்த டெபாசிட் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம். பிள்ளைகளுக்காக முதலீடு செய்து வரும் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டாலும் இடையில் முழுப் பணமும் தரப்பட்டுவிடும். மேற்குறிப்பிட்ட காரணங்கள் தவிர டெபாசிட் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அப்போது 2 சதவிகித அபராத வட்டி கழிக்கப்பட்டு, அது வரைக்குமான காலத்துக்கு 5.5% வட்டி வழங்கப்படும்.
பணம் பாதுகாப்பாக இருக்குமா?
மகிளா சம்மான் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது. எந்த அச்சமும் சந்தேகமும் இதில் தேவையில்லை. தற்போதைய நிலையில் இந்த மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. வங்கிகளின் இரண்டு ஆண்டு டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும். உதாரணமாக, இரண்டு ஆண்டு டெபாசிட்டுக்கு எஸ்.ஐ.பி 6.8% வட்டி கொடுக்கிறது. தனியார் வங்கிகள் முதிர்வு காலத்துக்கு 7.10% வட்டி வழங்குகின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது இது மிக லாபகரமான பயன்பாடு அதிகம் உள்ள மிக எளிமையான திட்டம்.
முதிர்வு காலம் எப்போது ?
சேமிக்க தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகள் முடிந்த பிறகு 7.5 சதவீத வட்டியுடன் நீங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்