You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நதிக்கரையில் இருவேறு கிராம மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கல் வீசும் ஆபத்தான விளையாட்டு
மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் ஆண்டுக்கு ஒருநாள் இவர்கள் ஒன்று கூடுவார்கள். கொண்டாடுவதற்காக அல்ல, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீச.
இந்த கல்வீச்சு மோதல் காரணமாக அல்ல. மாறாக, மத்திய பிரதேசத்தின் பாண்டூர்ணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் கொள்கின்றனர்.
இந்த வழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. அதிகாரிகள் இதைத் தடுக்க பலமுறை முயன்றுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆனால் இந்த விழா ஒரு போதும் நிறுத்தப்படவில்லை.
போபாலில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் ஜாம் ஆறு ஓடுகிறது. அதன் கரையில் பாண்டூர்ணா மற்றும் சாவர்காவ் என இரண்டு கிராமங்கள் உள்ளன.
ஆற்றின் நடுவே ஒரு பலாஷ் மரம் கொடி போல நடப்படுகிறது. பின்னர் கல்வீச்சு தொடங்குகிறது. இரு தரப்பில் யார் மரத்தை கைப்பற்றுகிறார்களோ அவர்கள் வெற்றியின் அடையாளமாக அதை கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
வீசப்படும் கற்கள் உங்களை குருடாக்கலாம், எலும்புகளை உடைக்கலாம், அல்லது உயிரையேக்கூட பறிக்கலாம். இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன. இதில் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய பாண்டுர்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தர் சிங் கனேஷ், "ஒவ்வொரு ஆண்டும் 500-600 பேர் காயமடைகின்றனர். இதை நிறுத்த நிர்வாகம் முயற்சித்தது, ஆனால் இதை ஒரு பாரம்பரியமாகக் கருதும் உள்ளூர் மக்களின் நிலைப்பாடு எங்கள் முயற்சிகளைத் தோல்வியடையச் செய்திருக்கிறது."
அதிகாரிகள் அந்த பகுதியிலுள்ள உயரமான கட்டடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்காணித்து வந்தனர். நதியை நோக்கி பார்த்தால், வானம் கற்களால் நிரம்பியிருப்பது போலத் தோன்றுகிறது.
பாண்டுர்ணாவைச் சேர்ந்த 43 வயதான அரவிந்த் தோம்ரே கூறுகிறார், "நான் சிறு வயதிலிருந்தே இதில் பங்கேற்று வருகிறேன். எங்களைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு அல்ல, கிராமத்தின் கௌரவம். காயம் ஏற்படுவது சகஜம், ஆனால் வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சி அதைவிடப் பெரியது."
இந்த விளையாட்டில் தனது தலை உடைந்ததாகவும், முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், மூக்கு உடைந்ததாகவும், வலது கால் எலும்பு முறிந்ததாகவும் அரவிந்த் கூறுகிறார்.
அவருக்கு அருகில் நிற்கும் கோபால் பால்பாண்டே, "எங்களுக்கு இது உயிரைவிடப் பெரிய பண்டிகை," என கூறுகிறார்.
கோபாலும் கடந்த 16 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் பங்கேற்று வருகிறார், அவரது உடலில் இதன் அடையாளங்கள் உள்ளன.
உள்ளூரில் சொல்லப்படும் கதைகளின்படி, நூற்றாண்டுகளுக்கு முன்பு சாவர்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பாண்டுர்ணாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் இடையேயான காதல் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை மீட்க நடந்த போராட்டம் படிப்படியாக ஒரு பாரம்பரியமாக மாறியது.
இன்று இந்தப் பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் பலாஷ் மரத்தை மையமாகக் கொண்டு நிறைவேற்றப்படுகிறது.
உள்ளூர் முதியவர்களின் கூற்றுப்படி, கோட்மார் மேளாவைப் பற்றிய குறிப்பு சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கோட்மார் மேளாவில் பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை உள்ளது. கல்வீச்சில் யாரோ ஒருவரின் மகன் உயிரிழந்திருகிறார், வேறு ஒருவர் ஊனமுற்றிருக்கிறார்.
மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்தக் கற்களை வீசித் தாக்கும் விளையாட்டில் 1955 முதல் இதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு கோட்மார் மேளாவில் இப்பகுதியைச் சேர்ந்த அமித் (பாதுகாப்பு காரணங்களால் பெயர் மாற்றப்பட்டது) இறந்தார்.
அமித் நான்கு குழந்தைகளையும் மனைவியையும் விட்டுச் சென்றார்.
அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், "என் அப்பா கோட்மார் விளையாட சென்றார். இங்குள்ளவர்கள் அவர் ஒரு பெரிய வீரர் என்று கூறுகின்றனர், ஆனால் ஒரு முறை அவரது தலையில் கல் தாக்கியது. அப்போது நாங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். என் அப்பா மேளாவிலேயே இறந்தார்," என சொல்கிறார்.
இத்தனை இறப்புகள் மற்றும் காயங்கள் இருந்தபோதிலும், கோட்மார் மேளா இன்றும் அதே உற்சாகத்துடன் நடைபெறுகிறது. இதற்குப் பின்னால், இரு கிராமங்களின் பழைய போட்டி, வன்முறையையும், நம்பிக்கையையும் பாரம்பரியத்துடன் இணைப்பது, நிர்வாகம் மற்றும் தலைவர்களின் சத்தமில்லாத ஆதரவு, மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
எனவே, எதிர்ப்பு குரல்கள் அடக்கப்படுகின்றன, மேலும் பாரம்பரியத்தின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ரத்தம் சிந்துகிறது. நாங்கள் பாண்டுர்ணாவிலிருந்து புறப்படும்போது, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் வருவோம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த வன்முறையான பாரம்பரியம் குறித்த முழு விவரத்தை காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு