You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிம்கள் மயானம் அமைக்க நிலம் கொடுத்த இந்து - நெகிழ வைக்கும் பின்னணி
- எழுதியவர், சீடூ திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜனார்தன் சிங்கின் மகன் நவம்பர் 18-ஆம் தேதி இறந்தார்.
25 வயது மகனின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு, அவருடைய நினைவாக, தற்போது கல்லறைத் தோட்டத்திற்கு நிலம் கொடுத்து, அதனை நிர்வகிக்க ஓர் நிர்வாகக் குழுவையும் உருவாக்குவதில் ஜனார்தன் சிங் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.
ஜனார்தன் சிங், தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஒரு பிகா அளவிலான நிலத்தை இஸ்லாமியர்களின் கல்லறைக்காக கொடுத்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய ஜனார்தன், "என்னுடைய மகனின் இறுதிச் சடங்கு மரியாதையுடன் நடத்தப்பட்டதைப் போலவே, சாதி மத பேதமின்றி இறந்தவர்களின் இறுதிச் சடங்கு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எங்களுடைய கிராமத்திற்கு அடுத்த கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு மயானமே இல்லை. என் மகனின் நினைவாக இதை விட முக்கியமாக வேறு எதை நான் செய்துவிட முடியும்?" என்று மகனை இழந்த தந்தை கேள்வி எழுப்புகிறார்.
பீகாரின் பக்சர் மாவட்டத்தின் சௌசா தொகுதியில், ராம்பூர் பஞ்சாயத்து எல்லைக்குள் டெபி டெஹ்ரா என்ற கிராமத்தில் ஜனார்தன் சிங்கின் குடும்பம் வசிக்கிறது. டேராடூனில் ஆயுர்வேத மருந்துகளுக்கான மூலப்பொருட்களை வர்த்தகம் செய்யும் தொழிலில் ஜனார்தன் சிங் ஈடுபட்டுள்ளார்.
ஜனார்தன் சிங் - கீதா தேவி தம்பதியினரின் மூன்று குழந்தைகளில் மூத்தவர் 25 வயது சிவம் சிங், டேராடூனில் நடந்த சாலை விபத்து ஒன்றில் இறந்தார், அவருக்கு திருமணம் ஆகவில்லை. எம்பிஏ பட்டதாரியான சிவம் சிங், தனது தந்தையின் தொழிலை நிர்வகித்து வந்தார்.
ஜனார்தனின் இரண்டாவது குழந்தையான மகள் மருத்துவம் பயின்று வருகிறார், இளைய மகன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
தனது மூத்த மகனைப் பற்றி கூறும் ஜனார்தன் சிங், "என்னுடைய மகன் சிவம் மிகவும் அமைதியானவர், அனைவரிடமும் நட்பாக இருப்பவர், இயல்பிலேயே பிற மதங்கள் மீதான மரியாதையும் விலங்குகள் மீதான அன்பும் உண்டு. வாரணாசியில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தோம். அப்போது, இறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்திலிருந்து சரியான பிரியாவிடை கொடுக்கப்பட வேண்டும் எனத் தோன்றியது" என்று ஜனார்தன் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
கல்லறைக்கு நிலம் கொடுத்ததன் பின்னணி
"எங்கள் பக்கத்து கிராமத்தில் உள்ள இஸ்லாமியக் குடும்பங்களுக்கு இருந்த பிரச்னை நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு மயானம் ஏதும் இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால்தான், நான் இந்த முடிவை எடுத்தேன்" என்று ஜனார்தன் சிங் கூறுகிறார்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜனார்தன் சிங்கின் தாயார் சாரதா தேவி, ராம்பூர் பஞ்சாயத்துத் தலைவியாக பதவி வகிக்கிறார்.
மயானத்தை நிர்வகிக்க இந்து-முஸ்லீம் கொண்ட நிர்வாகக் குழு
ஜனார்தன் சிங்கின் குடும்பம் வசதியானவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவரின் குடும்பத்தில் பலர் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள்.
ஜனார்தன் சிங்கின் தாத்தா மோதி சிங் ராணுவத்தில் பணியாற்றியபோது, 1961 கோவா விடுதலைப் போரில் பங்கு கொண்டதற்கான பதக்கம் உட்பட பல பதக்கங்களைப் பெற்றவர். மோதி சிங் தனது ராணுவப் பயிற்சியின் போது எழுதிய நாட்குறிப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
"எங்கள் தாத்தா ராணுவத்தில் பணிபுரிந்தவர், எங்கள் குடும்பமே தேசபக்தர்கள் நிறைந்தது. சமூகத்திற்காக உழைப்பதை எங்களுடைய கடமையாக கருதுகிறோம்" என்று ஜனார்தன் சிங் தெரிவித்தார்.
நிர்வாகக் குழு என்ன செய்யும்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜனார்தன் சிங்கின் சகோதரரும் வழக்கறிஞருமான பிரிஜ்ராஜ் சிங், "இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சிலரை உள்ளடக்கிய நிர்வாகக் குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தக் குழு இருவிதமான பணிகளை செய்யவேண்டும். முதலாவதாக, அந்த நிலம் கல்லறையைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வதாக இருக்கும்" என்று கூறினார்.
"இரண்டாவதாக, மயான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது. தற்போது, இந்த நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விளையும் பயிரை அறுவடை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை மயானத்திற்கு வேலி அமைக்க பயன்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்."
இந்த நிலம் வக்ஃப் ஆகுமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரிஜ்ராஜ் சிங், "இதன் சட்ட அம்சங்களை ஆராயவும் குழு ஒன்று அமைக்கப்படும். எங்கள் HUF (இந்து பிரிக்கப்படாத குடும்பம்) குடும்பத்திற்கு இந்த நிலத்தில் இனி எவ்வித உரிமையும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த நிலம், எங்கள் குடும்பத்தின் ஒரு குழந்தையின் பெயரில், இஸ்லாமிய சகோதரர்களுக்காக நிரந்தரமாகக வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ராம்பூர் பஞ்சாயத்தில் 50 முதல் 60 இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன.
சக்ரா மற்றும் ரசூல்பூர் கிராமங்களில் 20 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன, இந்தக் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய மயானம் ஏதும் இல்லை.
செங்கல் சூளை ஒன்றில் பணிபுரியும் முஹர்ரம் மியான் என்பவரின் தாயார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முஹர்ரமின் தந்தைக்கும் வயதாகிவிட்டது.
"என் அம்மா இறந்த போது, அவரை கிராமத்தில் அடக்கம் செய்தோம். இப்போது அந்த இடத்தில் அரசு பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து கல்லறைகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எங்கள் மூதாதையர்களின் கல்லறைகள் மீது பள்ளி மைதானம் கட்டப்பட்டுள்ளது, அங்கு சிறுவர்கள் விளையாடுகிறார்கள். எனவே, அங்கு இனிமேல் இறப்பவர்களை அடக்கம் செய்யமுடியாது. எதிர்காலத்தில் குடும்பத்தில் யாராவது இறந்தால் அடக்கம் செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் மூழ்கியுள்ளோம்" என்று முஹர்ரம் பிபிசியிடம் கூறினார்.
சக்ரா கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மயானம் இருந்த இடத்தில் தற்போது அரசு பள்ளி கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ள நிலம் கல்வித் துறைக்குச் சொந்தமானது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
கிராமத்தில் மயானம் இருந்த இடத்தில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டதால் இரண்டு சிக்கல்கள் உருவாகியுள்ளன. முதலாவதாக, கிராமத்தின் இஸ்லாமியர்களின் மூதாதையர்களின் கல்லறைகள் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விட்டது. இரண்டாவதாக, இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
'இது போலி வீடு, உண்மையான வீடு கல்லறை'
தொழிலாளியாக பணிபுரியும் அலாவுதீன், நன்றாக பாடக்கூடியவர். அவர், வாழ்க்கை, மரணம் என்பது போன்ற கருப்பொருள்களைச் சுற்றி பின்னப்பட்ட ஆன்மீக மற்றும் தத்துவப் பாடல்களைப் பாடுகிறார்.
"எங்கள் மூதாதையர்கள் அனைவரும் இந்தப் பள்ளியின் கீழ் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். படிப்பறிவில்லாத நாங்கள், மயானம் மற்றும் இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் வைத்திருக்கவில்லை. இங்கு, பள்ளிக்கூடத்திற்கான கட்டடம் கட்டத் தொடங்கியபோது, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை சென்று முறையிட்டோம். எங்களுக்கு மயானத்திற்கு இடம் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார், ஆனால் அப்படி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை" என்று அலாவுதீன் பிபிசியிடம் கூறுகிறார்.
"இப்போது அவர் (ஜனார்தன் சிங்) நமக்கான மீட்பராக வந்துள்ளார். நாம் தற்போது போலியான ஒரு வீட்டில் வசிக்கிறோம், நமது உண்மையான வீடு கல்லறை தான்."
சக்ரா கிராமத்தில் பிபிசியிடம் பேசிய எந்தவொரு இஸ்லாமிய குடும்பத்தினராலும், பக்சர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எதையும் காட்ட முடியவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக இந்த விஷயம் குறித்து முறையிட்டு வருவதாக இந்த இஸ்லாமியக் குடும்பங்கள் கூறுகின்றன.
இங்கு வசிக்கும் இஸ்லாமியக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். தங்களுக்கென ஒரு மயானம் கிடைத்திருப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
32 வயதான முஸ்தகிமுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.
"எங்களுக்கென தற்போது ஒரு மயானம் கிடைத்திருக்கிறது. நாங்கள் அதைப் பராமரிப்போம், அங்குள்ள மண்ணைச் சமன் செய்வோம், மரங்களை நடுவோம், தூய்மையைப் பராமரிப்போம்" என்று முஸ்தகிம் கூறுகிறார்.
"எங்களுக்கென ஒரு மசூதி கூட இல்லை, அதற்கான கோரிகையையும் நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கென ஒரு மயானம் கிடைத்துவிட்டது என்பது நிம்மதியைத் தருகிறது, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் கல்லறைத் தோட்டத்தை உருவாக்கிவிட்டால், அடுத்து வரும் சந்ததியினருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு