You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரோன் தாக்குதல், மின் தடை, 32 விமான நிலையங்கள் மூடல் - ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை என்ன நடந்தது?
இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர் பதற்றம் நிலவிவரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவில் எல்லையோர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன. ஜம்மு காஷ்மீரில் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை ஒரு காணொளி வெளியிட்டது.
ராஜஸ்தானின் பார்மரில் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை மற்றொரு காணொளி வெளியிட்டது.
ஆனால் இந்த காணொளியின் உண்மைத் தன்மையை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.
இந்தச் சூழலில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் புஜ் வரை சுமார் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் மூலம் அனைத்து அச்சுறுத்தல்களும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த சூழலில் ஶ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், அம்பாலா உட்பட 32 விமான நிலையங்கள் மே 14 வரை மூடப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் ஒரு டிரோன் பாகம் குடியிருப்பு மீது விழுந்ததையும், இதில் 3 பேர் காயமடைந்ததையும் பிபிசி பஞ்சாபி சேவை உறுதிப்படுத்தி உள்ளது.
ஃபெரோஸ்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் புபிந்தர் சிங் கூற்றுப்படி, அவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த டிரோனின் ஒரு உடைந்த பகுதி கய் பேமே கே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து அவ்வீடு தீப்பற்றி எரிந்ததாக புபிந்தர் சிங் தெரிவித்தார். டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து பாகிஸ்தான் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
முன்னதாக, ஜம்முவில் வெடிப்புச் சத்தங்கள் இடைவிடாமல் கேட்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி உயர்நிலை பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளும் கலந்து கொண்டனர்.
எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க அறிவுறுத்தி உள்ள இந்திய அரசு, மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம் என தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு