தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-01-2026) தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிகரான பலன்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை' செயல்படுத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுவது என்ன?
'திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு'
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமணம் முன்பணம் 10,000 ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதாகவும் அரசின் அறிக்கை கூறுகிறது.
இவைபோக, "ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழலை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய பணிக்கொடை 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது."
அதோடு, "பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது" என்று அரசு அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது?
செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,
- மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு வழங்குவதற்கு, பணியாளர்களின் 10% பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
- 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக, அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.
- அரசு அலுவலர்கள்பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
- புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னரே ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு அறிக்கை கூறுகிறது.

அரசு ஊழியர்கள் கூறுவது என்ன?
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"ஊழியர்களிடம் இருந்து எந்த விதத்திலும் பிடித்தம் செய்யாமல், அரசே கொடுப்பதுதான் ஓய்வூதிய திட்டம். இவர்கள் எங்களிடம் இருந்து பெறப்படும் தொகையை அரசின் பங்களிப்போடு சேர்த்து, அவர்களே வைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் வட்டியை எங்களுக்கான ஓய்வூதியமாகக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள்," என்கிறார் ஜாக்டோ ஜியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் சி.முருகன்.
மேற்கொண்டு பேசிய அவர், "இப்படிச் செய்வதற்குப் பெயர் ஓய்வூதியம் இல்லை. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்கள் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு என இரண்டையும் சேர்த்து மொத்தமாக எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். அதற்கு மாறாக, இதில் அந்த நிதியை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை மட்டும் ஓய்வூதியம் என்ற பெயரில் தருவார்கள்," என்று தெரிவித்தார்.
"இப்படியொரு மோசமான திட்டத்தை அரசே அறிவிப்பது கவலைக்குரியது" என்றார் அவர்.

ஆனால், இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறுகிறார் ஜாக்டோ ஜியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன்.
மேலும், "தமிழ்நாட்டில் உள்ள 140 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சமரசமற்ற போராட்டத்தை முதலமைச்சர் புரிந்துகொண்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
இந்த ஓய்வூதிய திட்டத்தை முழுதாக வரவேற்கிறோம். இதைத் தொடர்ந்து, ஜனவரி 6 முதல் மேற்கொள்ளவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் வாபஸ் பெறுகிறோம்," என்று கூறினார்.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் மத்தியிலேயே ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியாவில் வேறு எந்தவொரு மாநில அரசும் ஓய்வூதியம் என்பதைக் கொடுப்பதே இல்லை. அந்த வகையில் பார்க்கும்போது, எங்களது 23 ஆண்டு கால கனவு, ஒன்பது ஆண்டுக்கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது. இதில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், எந்தவொரு போராட்டத்திலும் நூறு சதவிகிதம் வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், Constantine Ravindran
'பெரும்பான்மை ஊழியர்கள் ஏற்றுக் கொண்டதையே அரசு செய்துள்ளது'
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து எழும் விமர்சனங்கள் தொடர்பாக மாநிலத்தை ஆளும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேசி, அவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதையே அரசு செய்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
"அரசு ஊழியர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது போன்ற பல அம்சங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஊழியர்களின் பங்களிப்பு வெறும் 10% மட்டுமே, மீதி 90% அரசின் பங்களிப்புதான். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு 13,000 கோடி செலவு வருகிறது. ஆனாலும் அதைச் செய்துள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடர்பாக எழும் விமர்சனங்கள் பற்றிப் பேசுகையில் "பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள். ஒருவேளை எழுப்பப்படும் கவலைகளில் ஏதேனும் முக்கியமான ஒன்று இருந்தால் அதுவும் கருத்தில் கொள்ளப்படும்," என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
'தேர்தல் நெருக்கத்தில் வந்த அறிவிப்பு'

பட மூலாதாரம், Tarasu Shyam
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக வந்துள்ள தமிழக அரசின் அறிவிப்பின் முக்கியத்துவம் பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "நிறைவேற்றப்படாத வாக்குறுதியாகவே இருந்து வந்தது என்பதால், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதைச் செய்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்றார் அவர்.
"அரசு ஊழியர்கள் சங்கங்கள் பெரும்பாலும் திமுக ஆதரவு அமைப்புகளாகவே இருந்து வருகின்றன. அரசு ஊழியர்கள் அதிருப்தியுடன் இருந்தால் அரசாங்கத்தை செவ்வனே நடத்த முடியாது. இவை அனைத்தையும் மனதில் வைத்து இது தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்" என்று தராசு ஷ்யாம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












