You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை 'கடிப்பது' எப்படி?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன.
இறந்து போன நாகப் பாம்பு, கட்டு வரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி?
முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு
அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம்பின் தலை அவரது வலது கை பெருவிரலில் கடித்துவிட்டது.
அந்த நபருக்கு பெருவிரல் கறுத்துவிட்டது. நஞ்சு தோள்பட்டை வரை ஏறிவிட்டது. அருகிலுள்ள மருத்துவமனை சென்ற பிறகு அவருக்கு நஞ்சுமுறி மருந்து வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டது. இறுதியில் அவர் முழுமையாக குணமடைந்தார்.
இரண்டாவது சம்பவம்: டிராக்டரின் கீழே நசுங்கிய பிறகும் கடித்த நாகம்
அசாமின் அதே பகுதியில், வயலில் ஓடிக் கொண்டிருந்த டிராக்டரின் சக்கரத்தில் ஒரு நாகப் பாம்பு நசுங்கி இறந்தது. ஆனால், காலை 7:30 மணியளவில் வேலை முடிந்து டிராக்டரில் இருந்து கீழே இறங்கிய விவசாயி அதனிடம் கடிபட்டார்.
பாம்பு நசுங்கி இறந்து சில மணிநேரம் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 குப்பிகள் நஞ்சுமுறி மருந்து, ஆன்டிபாடி மருந்துகள் என 25 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.
மூன்றாவது சம்பவம்: இறந்து 3 மணிநேரம் கழித்து கடித்த கட்டு வரியன்
மூன்றாவது சம்பவம், அசாம் மாவட்டத்தின் கம்ரூப் மாவட்டத்தில் நடந்தது. மாலை சுமார் 6:30 மணியளவில் ஒரு கரும்பட்டை கட்டு வரியனை கொன்ற சிலர், அதைத் தங்கள் வீட்டுப் பின்புறத்தில் வீசினார்கள்.
அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர், இரவு 9:30 மணியளவில் ஆர்வத்தில் இறந்த பாம்பைக் காண அங்கு திரும்பிச் சென்றார். அப்போது இறந்துபோன பாம்பு என்று கருதி, எச்சரிக்கையின்றி அதைக் கையில் எடுத்து, தலையைப் பிடித்துப் பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில், அவரது வலது கை சுண்டு விரலில் அந்த நச்சுப் பாம்பு கடித்துவிட்டது. குடும்பத்தினர், கடித்த இடத்தில் வலியோ, வீக்கமோ ஏதும் ஏற்படாததாலும் அது இறந்த பாம்பு என்பதாலும் ஆரம்பத்தில் கவனிக்காமல் தவிர்த்துவிட்டனர்.
ஆனால், நள்ளிரவு 2 மணியளவில் கடிபட்ட நபர் பதற்றத்துடன், தூக்கமின்றி, உடல் வலியுடன் அவதிப்பட்டுள்ளார். பிறகு படிப்படியாக நஞ்சின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அவருக்கு நஞ்சுமுறி மருந்துகளுடன் 43 மணிநேரம் சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நபர் உயிர் பிழைத்து, குணமடைய 6 நாட்கள் ஆனதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
பாம்பு இறந்த பிறகும் கடித்தது எப்படி?
இந்த மூன்று சம்பவங்களையும் கேட்கும்போது நம்புவதற்குச் சற்று கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உண்மையில் இருப்பதை வல்லுநர்கள் உறுதி செய்கின்றனர்.
இந்த மூன்று சம்பவங்களுமே அசாமில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இவற்றின் பின்னணி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்த ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், இறந்த பிறகு அல்லது தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட பாம்பு கடிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
முன்கோரைப் பற்களைக் கொண்ட பாம்பு வகைகளிடையே இத்தகைய அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்.
"பாம்புகளின் நஞ்சு என்பது மனிதர்களின் எச்சிலை போன்றதுதான். அந்த நஞ்சு சுரப்பதற்கான சுரப்பி கோரைப் பற்களில் ஒரு சிரிஞ்ச் ஊசியைப் போன்ற வடிவமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பற்கள் மூலமாக நஞ்சை கடிபடும் உயிரினத்தின் உடலில் அவற்றால் செலுத்த முடியும்" என்று ஆய்வறிக்கை விளக்கியுள்ளது.
அதோடு, "அசாமில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையைக் கையாளும்போது, அதன் நஞ்சு சுரப்பி மீது தற்செயலாக அழுத்தம் ஏற்பட்டு, கவனக் குறைவாக நஞ்சு செலுத்தப்பட்டிருக்கலாம்," என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேவேளையில், இத்தகைய சம்பவங்கள் இறந்த பாம்புகளில் நடப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கும் மனோஜ், இதன் அறிவியல் பின்னணி குறித்து விளக்கினார்.
"மனிதர்கள் தூங்கும்போது கொசு கடித்தால் அதைத் தன்னிச்சையாகவே அடிப்போம். ஆனால், அது நமக்கு விழித்தெழும் போது நினைவில் இருக்காது. மனிதன் இறந்தாலும் அவரது உள்ளுறுப்புகள் முழுமையாக இயக்கத்தை நிறுத்த சிறிது நேரமாகும். அதுபோலவே, பாம்புகளிலும் அது இறந்த பின்னரும் அதன் உள்ளுறுப்புகள் படிப்படியாகவே இயக்கத்தை நிறுத்தும்." என்று அவர் கூறினார்.
அப்படித்தான், பாம்புகளில் அவை இறந்த பிறகுகூட, தண்டுவடம் கடிப்பது போன்ற இத்தகைய செயல்முறைகளை அரிதான சமயங்களில் திடீரெனச் செயல்படுத்திவிடக் கூடும் என்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி, வழக்கமாக பாம்புகள் மேற்கொள்ளும் பொய்க்கடி மீதும் ஆய்வறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
அதாவது, பாம்புகள் தனது எதிரிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, பொய்க்கடி எனப்படும், நஞ்சை செலுத்தாமல் வெற்றுக் கடி மூலம் எச்சரிக்கும்.
ஆனால், "அந்தச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மூளைதான். இறந்த பாம்பின் உடலில் இந்தப் பண்பு சிறிதும் இருக்காது. ஆகையால், இறந்த பாம்பு ஒருவித உடலியல் இயக்க அடிப்படையிலான தூண்டுதலில் கடிக்கும்போது, கடிபடும் நபரின் உடலில் நஞ்சு இறங்குவதைத் தவிர்க்க முடியாது. பாம்பால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், நஞ்சு சுரப்பியில் இருக்கக்கூடிய மொத்த நஞ்சும் கடிபடுபவர் உடலில் செலுத்தப்பட்டுவிடும். இது தவிர்க்க முடியாத ஒன்று," என ஆய்வறிக்கை விளக்கம் அளித்துள்ளது.
எந்தெந்த பாம்புகள் இறந்த பிறகும் கடிக்க வாய்ப்புள்ளது?
அமெரிக்காவில் அதிகம் காணப்படும், மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை உடைய ரேட்டில்ஸ்நேக் எனப்படும் பாம்பு வகையில், இத்தகைய நடத்தைகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் முனைவர் மனோஜ்.
அதேநேரம், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரவுன் ஸ்நேக், சீனாவில் நாகப்பாம்பு போன்றவற்றில் இப்படி நடந்ததாக செய்திகள் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார் கர்நாடகாவின் ஆகும்பேவில் உள்ள களிங்கா ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.கணேஷ்.
"இந்தியாவில் காணப்படும் கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மூங்கில் குழிவிரியன், மலபார் குழிவிரியன் உள்பட விரியன் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள், பவளப் பாம்புகள், கட்டு வரியன் வகைப் பாம்புகள் ஆகியவற்றில் இந்த அபாயம் அதாவது இறந்த பிறகும் கடிக்கக் கூடிய ஆபத்து அதிகளவில் இருக்கிறது" என்று முனைவர் மனோஜ் தெரிவித்தார்.
அதேநேரம், "பார்ப்பதற்கு ஆபத்தற்றதாக தென்படக்கூடிய தண்ணீரில் வாழக்கூடிய கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற நீர்பாம்பு வகைகள்கூட இப்படிச் செய்வதுண்டு" என்று குறிப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, பாம்பு என்றாலே, இறந்துவிட்டாலும்கூட அதை எச்சரிக்கையின்றிக் கையாள்வது மிகவும் தவறான உதாரணம்.
"பலரும் இறந்த பாம்பு என்றால் அதை எடுத்துப் பார்ப்பது, கையாள்வது என்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இது ஆபத்தானது. 'ஒரு மனிதன் இறந்துவிட்டான்' என்பதற்கு மருத்துவ ரீதியாக சில வரையறைகள் இருப்பதைப் போல, பாம்புகள் போன்ற ஊர்வனவற்றுக்கு எந்தவொரு வரையறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அடிபட்ட அல்லது தலை வெட்டப்பட்ட பாம்பு அசைவற்று நீண்ட நேரம் கிடந்தாலே அது இறந்துவிட்டதாக நாம் கருதிவிடுகிறோம். பாம்புகளை உயிருடனோ அல்லது உயிரிழந்த நிலையிலோ எப்படிப் பார்த்தாலும், அதற்குரிய நிபுணர்களுக்குத் தெரியப்படுத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வு," என்று விளக்குகிறார் அவர்.
மேலும், "தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இறந்துவிட்ட பச்சைப் பாம்பின் உடலை உருவிவிட்டால் சமையல் நன்றாக வரும்" என்ற மூடநம்பிக்கையால், அத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது.
இதுகுறித்துப் பேசிய முனைவர் மனோஜ், "பச்சைப் பாம்பு உள்பட நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளில் பல வகைகள், எளிதில் சீற்றம் கொண்டு கடிக்கும் நடத்தையைக் கொண்டவையாக உள்ளன. அவற்றின் உடல் அமைப்பே அதற்கு ஏற்ற வகையில்தான் இருக்கும் என்பதால், அவை இறந்த பிறகும் கடிக்கும் அபாயம் அதிகமுள்ளது. எனவே மூடநம்பிக்கை அடிப்படையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்," என்று எச்சரித்தார்.
மறுபுறம், ஒரு பாம்பு இறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்கு அதன் நஞ்சு வீரியம் மிக்கதாக இருக்கும், அது கடிக்கக்கூடிய ஆபத்து எவ்வளவு நேரத்திற்கு உள்ளது என்பது தொடர்பாக விரிவான ஆய்வுகள் இல்லை என்று கூறுகிறார் முனைவர் கணேஷ்.
அவரது கூற்றை ஆமோதிக்கும் மனோஜ், "இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டங்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், ஒரு பாம்பின் உயிரைப் பறித்து, அதனிடம் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது. அதனால்தான், அசாமில் அரிதாக நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனவே, அதில் கிடைக்கக்கூடிய தகவல்களும் ஓர் அளவுக்குத்தான் இருக்கும். ஆனால், உலகின் வேறு சில நாடுகளில் இது ஏற்படுத்தும் தாக்கம், விரிவான ஆய்வுகளுக்கு உந்துதலாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
அசாமில் கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள், பாம்புக்கடி குறித்தான விழிப்புணர்வில் இன்னும் எந்த அளவுக்கு ஆழமான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்துகின்றன.
அதோடு, பாம்புகளை கவனமின்றி, பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வின்றிக் கையாளும் நபர்களுக்கு இந்தச் சம்பவங்களும் அவை குறித்தான ஆய்வின் முடிவுகளும் ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு