நேஷனல் ஹெரால்டு வழக்கு: டெல்லி நீதிமன்ற உத்தரவு சோனியா, ராகுலுக்கு எவ்வளவு முக்கியமானது?

    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் டிசம்பர் 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மறுத்துவிட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் , அமலாக்கத் துறை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

பொதுவாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு நகரும்.

இந்த உத்தரவை ஒரு மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸ் கட்சி கொண்டாடியது.

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "இந்த (முடிவு) விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சான்றாகும்" என்றார்.

மறுபுறம், பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் இந்த முடிவு 'குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளிக்கவில்லை' என்று கூறினார் .

தொழில்நுட்பக் காரணங்களுக்காக விசாரணை நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்கவில்லை என்றும், வழக்கு இன்னும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும், அமலாக்கத் துறை விரும்பினால் இந்த முடிவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு முக்கியமான முடிவாகும். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை விரிவாகக் காணலாம்.

விவகாரத்தின் பின்னணி

2013-ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்தார்.

அதில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர், சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்தை வெறும் ₹50 லட்சத்திற்கு 'யங் இந்தியன்' (Young Indian) என்ற நிறுவனத்திற்கு மாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஏஜேஎல் என்பது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் நிறுவனமாகும். இதனை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.

சுப்ரமணியன் சுவாமி "மோசடி" மற்றும் "குற்றச் சதி" உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இவரது மனுவின் அடிப்படையில், 2014-ல் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில், 2021-ல் அமலாக்கத் துறை வழக்கு தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத் துறையின் இந்த தகவல் அறிக்கை (ECIR), காவல்துறையில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆர் (FIR) போன்றதாகும்.

அமலாக்கத் துறை, இந்த ஆண்டு தனது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் யங் இந்தியன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களான சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சட்ட நடைமுறை என்ன?

செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் அதன் சட்ட நடைமுறை என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

பொதுவாக ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால், நமது புகாரின் அடிப்படையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்கிறது. காவல்துறை அதனை விசாரித்து குற்றப்பத்திரிகை தயார் செய்யும், பின்னர் அது நீதிமன்ற விசாரணைக்காக அனுப்பப்படும்.

விசாரணைக்குப் பிறகு, எந்த அடிப்படையில் வழக்கு தொடரப்படவேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

ஆனால், பண மோசடி தொடர்பான வழக்குகளில் இந்த நடைமுறை சற்று மாறுபடும்.

உதாரணமாக, ஒருவர் கடத்தப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்பட்டால், கடத்தல் குறித்துக் காவல்துறையும், அந்தப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தும்.

இந்தச் சூழலில், காவல்துறை முதலில் கடத்தல் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யும். அந்த எஃப்ஐஆர்-ன் அடிப்படையில் அமலாக்கத் துறை ஒரு புதிய புகாரைப் பதிவு செய்யும்.

எனவே, ஒரு புலனாய்வு அமைப்பு முதலில் ஒரு புகாரைப் பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு பணமோசடி சம்பந்தப்பட்டிருந்தால் அமலாக்கத் துறை விசாரிக்க முடியும்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், எந்தெந்தக் குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்ற பட்டியல் உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றம் இதே சிக்கலைத்தான் எதிர்கொண்டது.

இந்த வழக்கில் காவல்துறையில் புகாரோ அல்லது எஃப்ஐஆரோ பதிவு செய்யப்படவில்லை, எனவே அமலாக்கத் துறை இதில் விசாரணை நடத்த முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ். ராஜு, 2014-லேயே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் தனிப்பட்ட புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கில் தனியாக ஒரு காவல்துறை எஃப்ஐஆர் தேவை இல்லை என்று கூறினார்.

நீதிமன்றம் என்ன சொன்னது?

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஒரு எஃப்ஐஆர் பதிவுக்குப் பிறகு நடைபெறும் காவல்துறை விசாரணைக்கும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளிக்கப்படும் தனிப்பட்ட புகாருக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியது.

புலனாய்வு செய்வதற்கு காவல்துறையிடம் சிறந்த வளங்கள், வசதிகள் உள்ளன.

ஒரு எஃப்ஐஆர்-ன் கீழ் நடத்தப்படும் விசாரணையில், குறிப்பிட்ட பணம் எந்தக் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்டது என்பது தெரியவந்தால் மட்டுமே, அந்தப் பணமோசடி குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியும் என்று நீதிமன்றம் விளக்கியது.

இந்த வழக்கில் நடந்தது போல, ஒரு தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை நேரடியாக விசாரணையைத் தொடங்க முடியாது.

மற்ற புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்குப் பிறகே பணமோசடிக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக அமலாக்கத் துறையின் சமீபத்திய ஆண்டு அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளதை நீதிமன்றம் குறிப்பிட்டது.

எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாத நிலையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க மறுத்த முந்தைய இரண்டு வழக்குகளையும் நீதிமன்றம் உதாரணமாகக் காட்டியது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஆவணங்களையும் மதிப்பாய்வு செய்ததாக நீதிமன்றம் கூறியது.

2014 ஆம் ஆண்டில், சுப்பிரமணியன் சுவாமி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) கடிதம் எழுதியதாகக் கண்டறிந்தது.

2014 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், சுப்ரமணியன் சுவாமியின் தனிப்பட்ட புகாரை மட்டும் வைத்துக்கொண்டு பணமோசடி வழக்கைத் தொடங்க முடியாது என்று அமலாக்கத் துறையின் அதிகாரிகள் கருதியதை நீதிமன்றம் கண்டறிந்தது.

2014-ல் சுப்ரமணியன் சுவாமி அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் இந்தப் புகாரின் பேரில் பணமோசடி வழக்கைத் தொடர முடியாது என்றும், இந்த விஷயத்தில் சிபிஐ போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு, சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சிபிஐயிடம் புகார் அளித்தார். ஆனாலும், கடந்த 11 ஆண்டுகளில் சிபிஐ புகாரை பதிவு செய்யவே இல்லை, அமலாக்கத் துறையும் கூட 2021-ல் தான் புகாரை பதிவு செய்தது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

"இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாததால், பிஎம்எல்ஏ (பணமோசடி தடுப்புச் சட்டம்) -வின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அமலாக்கத் துறையே ஒப்புக் கொள்ளவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.

சிபிஐ 'தயக்கம்' காட்டியதால், அமலாக்கத் துறையும் 2021 வரை புகாரை பதிவு செய்யவில்லை என்று முடிவு செய்யலாம் என நீதிமன்றம் கூறியது.

இந்தக் காரணங்களுக்காக, நீதிமன்றம் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துவிட்டது.

அடுத்தது என்ன?

இந்த வழக்கில், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நிதி மோசடி நடந்ததா இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

அமலாக்கத் துறையின் விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இது குறித்து இப்போதைக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

மாறாக, பணமோசடி வழக்கைத் தொடர்வதற்குத் தேவையான அடிப்படை நடைமுறையான எஃப்ஐஆர் (FIR) தாக்கல் செய்யப்படவில்லை என்பதையே நீதிமன்றம் கூறியது.

இருப்பினும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒரு எஃப்ஐஆர்-ஐ பதிவு செய்துள்ளது.

இந்த எஃப்ஐஆர்-ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையாக மாற்ற விரும்புகிறீர்களா என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் நீதிமன்றம் கேட்டபோது, அவர் அதற்கு இல்லை என்று பதிலளித்தார்.

இந்த எஃப்.ஐ.ஆர்., அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கானது என்றும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எஸ்.வி. ராஜு விளக்கினார்.

இது ஒரு மிக முக்கியமான முடிவு என்று சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நிஜாம் பாஷா கூறுகையில், "ஒரு குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டால், அந்த விவகாரம் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்" என்கிறார்.

இந்த நிலையில், ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (19/12/2025) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் சமீபத்திய எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய புகாரை பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்று நிஜாம் பாஷா கூறுகிறார்.

"ஆனால் இது 'இரட்டைத் தண்டனை' (Double jeopardy) என்கிற விதியின் கீழ் வருமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அதாவது, ஒரே குற்றத்திற்காக ஒரு நபரை ஒரு முறைக்கு மேல் விசாரிக்கவோ அல்லது தண்டிக்கவோ முடியாது.

பணமோசடி வழக்குகளை எதிர்த்துப் போராடும் மற்றும் காங்கிரஸ் கட்சியை முன்பு பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீக் சத்தா கூறுகையில், "இந்த முடிவு காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றி. இருப்பினும், இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிடாது. சட்டப் போராட்டங்கள் தொடரும்." என்று கூறுகிறார்.

ஆனாலும், 2014-ல் சுப்ரமணியன் சுவாமி அளித்த புகாரின் மீதான விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு