கோவையில் தண்ணீர் தெளித்து தங்கம் கொள்ளை: நாக்பூரில் இரானி கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் தங்கநகை தொழில் செய்யும் வடமாநிலத்தவர்களை குறி வைத்து நகையை பறித்துச் சென்ற இரானி கொள்ளையர்களை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சென்று கைது செய்திருக்கிறது கோவை மாநகர காவல்துறை.

மாந்திரீகம் என்ற பெயரில் முகத்தில் தண்ணீர் தெளித்து ஏமாற்றி நகையைப் பறித்துச் செல்வதை இந்த கும்பல் பின்பற்றுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த கும்பலைப் பிடிப்பதற்காக 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் மித்யா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கோவைக்கு வந்து தங்கநகைப் பட்டறைத் தொழில் செய்துவந்த இவர், தற்போது இடையர்வீதியில் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்திவருகிறார். இவருடைய பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் அங்கேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியில் பேசி, மாந்திரீகம் செய்வதாக அச்சுறுத்திய கொள்ளையர்!

இவருடைய நகைக்கூடத்தில் சுபோமாஞ்சி என்ற தொழிலாளி ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று அவரிடம் 59 கிராம் தங்கத்தைக் கொடுத்து, தெலுங்கு வீதியிலுள்ள ஒரு டை ஒர்க்ஸ் நிறுவனத்தில் கொடுத்து வருமாறு அனுப்பியுள்ளார் சஞ்சய். அவர் அதைக் கொண்டு சென்றபோது அவரை ஏமாற்றி ஒரு கும்பல் தங்கத்தை கொள்ளையடித்துள்ளது.

இந்த கொள்ளை தொடர்பாக கோவை மாநகர காவல்துறைக்குட்பட்ட வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் இந்த சம்பவம் விளக்கப்பட்டுள்ளது.

சுபோமாஞ்சி தங்கத்துடன் வெளியே சென்றபோது, வெள்ளை ஜிப்பா அணிந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வந்து அவரிடம் தனக்கு நெஞ்சுவலிப்பதாகவும், அருகில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா என்றும் இந்தியில் கேட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

சுபோமாஞ்சி தெரியாது என்று சொன்னபோது, 25 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் வந்து, இந்தியில் இவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். தாங்கள் இருவரும் உத்தரபிரதேசத்திலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர் என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுபோமாஞ்சி அளித்த வாக்குமூலத்தின் படி,''என் குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறிய அவர்கள், அதை நாங்கள் மந்திரித்து உடனே சரி செய்கிறோம் என்று கூறினர். அப்போது மற்றொருவர் வேகமாக ஓடிச்சென்று ஊதுபத்தி வாங்கிவந்தார். அதன்பின் ஏதோ சொல்லி என்னுடைய முகத்தில் விபூதி போன்று ஏதோ கலந்திருந்த தண்ணீரைத் தெளித்தனர். உன்னிடமுள்ள பொருளை மந்திரித்து வாங்கிச் சென்றால் எல்லாம் சரியாகிவிடுமென்று கூறினர். அதை நம்பி, பாக்கெட்டில் இருந்த 59 கிராம் தங்கத்தை எடுத்துக்கொடுத்தேன். அதை வாங்கியதும் சிறிது துாரம் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்று பின்பு வந்து வாங்கிக்கொள் என்று கூறினர். நானும் கொடுத்துவிட்டு சிறிதுதுாரம் சென்றுவிட்டு திரும்பிப் பார்த்தபோது அவர்கள் இருவரையும் காணவில்லை'' என்று போலீசிடம் சம்பவத்தை சுபோமாஞ்சி விளக்கியிருக்கிறார். அந்த நேரத்தில் தனக்கு என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை என்றும் தங்களிடம் தெரிவித்ததாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சுபோமாஞ்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிஎன்எஸ் 318 (4) என்ற பிரிவின் கீழ் (ஏமாற்றி மோசடி செய்தல்) வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையில் காவலர்கள் கில்பர்ட், கார்த்தி, மகாராஜன், நாகூர் மீரான், தமிழரசன் ஆகியோர் அடங்கிய அந்தத் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் துவக்கினர். அதன்பின்பு நடந்ததை தனிப்படை போலீசார் விளக்கினர்.

''சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சுபோமாஞ்சியின் கவனத்தைத் திசை திருப்பிய அந்த கொள்ளையர்கள், அங்கிருந்து ஆட்டோவில் சென்றிருந்தனர் என்பது தெரிய வந்தது. அவர்கள் எங்கு சென்றனர் என்பதைக் கண்டுபிடிக்க நகருக்குள் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது கோவை 100 அடி சாலையிலுள்ள ஒரு திரையரங்கு வாகன நிறுத்தத்தில் தங்கள் காரை நிறுத்தி விட்டு, படத்துக்கு டிக்கெட் எடுக்காமல் ஆட்டோவில் சென்று சுபோமாஞ்சியிடம் கொள்ளையடித்ததும், வெவ்வேறு இடங்களுக்கும் ஆட்டோக்களில் சென்று வந்ததும் தெரியவந்தது'' என்றார் உதவி ஆய்வாளர் விக்னேஷ்.

ஊருக்குப்போவது காரில்; ஊருக்குள் சுற்றுவது ஆட்டோவில்!

அவர்கள் திரையரங்கில் நிறுத்தியிருந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார் சென்ற இடங்களை பல்வேறு சிசிடிவிக்களிலும் ஆய்வு செய்துள்ளனர் காவல்துறையினர்.

கோவையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அடுத்தடுத்த டோல்கேட்களைப் பார்த்துச் சென்றதில், அந்த கார், தெலங்கானா–மகாராஷ்டிரா எல்லையிலுள்ள காமாரெட்டி என்ற நகரைத் தாண்டவில்லை என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கிய விடுதியைக் கண்டறிந்து அங்கும் சிசிடிவியைப் பார்த்து விசாரித்துள்ளனர்.

''அங்கிருந்து அவர்களின் கார் புறப்பட்டு, நாக்பூரிலுள்ள கெம்டி என்ற புறநகர் பகுதி வரைக்கும் சென்றதைக் கண்டுபிடித்தோம். அந்தப் பகுதியில் தெருத்தெருவாகத் தேடிப்பார்த்தபோது, அந்தக் கார் அங்குள்ள ஒரு சந்துக்குள் நின்று கொண்டிருந்தது. அங்கேயே இருந்து கண்காணித்தபோது, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரியவந்தது. அவர்களின் வீட்டிற்குள் சென்று அவர்களை கைது செய்ய முயற்சி செய்தபோது, அந்த வீட்டிலிருந்த பெண்கள், குழந்தைகள் கத்திக் கூச்சலிட்டு, எங்களின் கால்களை இறுகப்பற்றிக் கொண்டு பெரும் கலாட்டா செய்துவிட்டனர். ஒரு வழியாக துரத்திப் பிடித்து 3 பேரையும் கைது செய்து கொண்டுவந்துவிட்டோம்'' என்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத தனிப்படை சேர்ந்த போலீஸார்.

நாக்பூரில் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்ட யாஷிம்அலி (வயது 57), குர்பானிக் (27) மற்றும் முஹம்மது பாரித் (வயது 25) ஆகிய மூவர் உட்பட இந்த கொள்ளையில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் இரானி கொள்ளையர்கள் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். நாக்பூரிலிருந்து காரில் ஊர் ஊராகச் சென்று, அங்கு ஏதாவது ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு, ஆட்டோக்களில் சென்று கொள்ளையடிப்பது வழக்கம் என்று இவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

கோவையில் சுபோமாஞ்சியிடம் மட்டுமின்றி, ஓராண்டிற்குள் இரு வேறு நபர்களிடமும் இதேபோன்று கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றி தங்கத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் விளக்கினர். மொத்தம் 5 பேர் கொண்ட இந்த இரானி கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சலீம்அலி இன்னும் பிடிபடவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த இரானி கொள்ளையர்களில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் வெவ்வேறு மொழிகள் பேசும் நபர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லியிலும் பல்வேறு கொள்ளைகளை இந்த இரானி கொள்ளையர்கள் நடத்தியுள்ளனர்.

மாதத்தில் 25 நாட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்ளைகளை நடத்திவிட்டு, 5 நாட்கள் மட்டும் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

''இந்த கொள்ளையர்களின் இலக்கு தமிழகத்திலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தான். அதிலும் 20 வயதுக்குட்பட்டோரையும், 50 வயதுக்கு மேற்பட்டோரையும் அதிகமாகக் குறிவைத்துள்ளனர். அவர்களை மடக்கிப் பேசி, ஒரு சில நிமிடங்களில் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து விடுகின்றனர். மாந்திரீகம் செய்வதாகக் கூறி, முகத்தில் தண்ணீர் தெளித்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

அதன்பின் கிடைப்பதை எடுத்துக்கொண்டு தப்பிவிடுகின்றனர். இதுவரை வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தாலும் எங்குமே இவர்கள் சிக்கியதாகத் தெரியவில்லை.'' என்று பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) கார்த்திகேயன், இனிமேல்தான் மற்ற மாநில போலீசாருக்கு இவர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர வேண்டுமென்றார்.

கொள்ளையர்களை பிடிக்க உதவிய சிசிடிவி கேமராக்கள்!

கோவையில் தங்கத்தைப் பறி கொடுத்த சுபோமாஞ்சி மற்றும் இதற்கு முன் ஏமாற்றமடைந்துள்ள சிலரை காவல்துறையினர் விசாரித்தபோது, தங்களிடமிருந்து தங்கத்தை ஏமாற்றி வாங்கிச் சென்றபோது, தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் முகத்தில் தெளித்தது மயக்கநீராக இருக்கும் என்று செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவலை காவல்துறையினர் மறுத்தனர்.

''மயக்க நீர் தெளிப்பவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து 2 நாட்கள் காரில் அழைத்துவரும்போது, எங்கள் முகத்தில் அதைத் தெளித்திருக்கலாமே. அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோ மாந்திரீகம் என்ற பெயரில் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் அவர்கள் அச்சமடைந்து கையில் இருப்பதைக் கொடுத்துள்ளதாகவே கருதுகிறோம்.'' என்றார் உதவி ஆய்வாளர் விக்னேஷ்.

பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளைகளை நிகழ்த்தி, எந்த மாநில காவல்துறையினரிடமும் சிக்காமல் இருந்த இரானி கொள்ளையர்களை, அவர்களின் சொந்த ஊருக்கே சென்று கைது செய்து வந்த தனிப்படையினரையும் அவர்களை வழி நடத்திய உதவி ஆணையாளர் முருகேசனையும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பாராட்டினார். கைது செய்யப்பட்ட இரானி கொள்ளையர் மூவரும் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சலீம்அலியை தனிப்படை தேடி வருகிறது.

''நகருக்குள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள்தான், இந்த இரானி கொள்ளையர்களை கைது செய்வதற்கு பெரும் உதவியாக இருந்தது. இவர்களைப் பிடிப்பதற்காக கோவையில் துவங்கி, நாக்பூர் வரையிலும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறோம். இவர்களின் தலைவன் சலீம்அலியைப் பிடித்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.'' என்றார் துணை ஆணையர் கார்த்திகேயன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு