இந்திய தாக்குதலில் சிதைந்த மசூதி - கள நிலவரம் என்ன?

இந்திய தாக்குதலில் சிதைந்த மசூதி - கள நிலவரம் என்ன?

நேற்று இரவு இந்தியா நடத்திய தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளில் பிலால் மசூதியும் ஒன்று.

இந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இங்கே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் துருப்புக்கள் அதிக அளவில் உள்ளன. அவர்கள் யாரையும் இந்த பகுதியை கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

மசூதியின் கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

சிதறிக்கிடக்கும் இடிபாடுகள் மற்றும் பெரிய உலோக கூரைத் துண்டுகளை எங்கும் காண முடிகிறது.

இங்கே ஒரு உலோகத் துண்டையும் நீங்கள் காணலாம்.

இத்தகைய காட்சிகளை நாங்கள் அனைத்து இடங்களிலும் பார்க்க முடிந்தது.

இந்த மசூதியின் கட்டடம் சேதமடைந்தது மட்டுமல்லாமல், மசூதிக்கு மிக அருகில் இருந்த சில வீடுகளும் ஓரளவு சேதமடைந்துள்ளன.

அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நேற்று இரவே வெளியேறிவிட்டனர்.

அவர்களில் சிலர் இன்று திரும்பி வந்து தங்கள் சொத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவது, கதவுகளை பூட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டனர்.

அவர்களில் சிலரிடம் பிபிசி செய்தியாளர் ஃபர்ஹாத் ஜாவேத் பேசினார். வெடிச்சத்தம் கேட்கும்போது தூங்கிக்கொண்டு இருந்ததாகவும் ஏவுகணைகள் இந்த கட்டடத்தைத் தாக்கியபோது பெரியளவில் தீப்பொறிகளை பார்த்ததாகவும் அவரிடம் தெரிவித்தனர்.

வெடிப்புச் சத்தம் கேட்கும்போது தூங்கிக்கொண்டு இருந்ததாகவும் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் செய்தியாளரிடம் பேசிய ஒருவர் கூறினார்.

குழந்தைகள் பயந்து, அதிர்ச்சியடைந்தனர் என்றும் , அனைவரும் அலறினர் என்றும் அவர் தெரிவித்ததாக செய்தியாளர் கூறுகிறார்.

மற்றொரு நபரிடம் பேசும்போது, அச்சத்தில் இருந்த மக்களால் தெருக்கள் நிரம்பியிருந்ததாகவும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்ததாகவும் அவர் கூறினார்.

அச்சம், நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிர்ச்சி போன்ற உணர்வுகள் இந்த பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல.

நகரத்தின் வழியாக நாம் நடந்து செல்லும்போது, ​​இந்தத் தாக்குதலின் தாக்கம் அன்றாட வாழ்க்கையில் தெளிவாகத் தெரிகிறது.

தெருக்களில் அமைதி நிலவுகிறது. ஆனால், சூழலே பதற்றமாக உள்ளது. நேற்று இரவு என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள மக்கள் முயற்சித்து வருகின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு