காணொளி: காஸா ஒப்பந்தம் - எகிப்து மாநாட்டில் நடந்தது என்ன?
"பல ஆண்டுகளாக நீடித்த இன்னல்கள் மற்றும் வன்முறைக்குப் பிறகு காஸா போர் முடிவுக்கு வந்துள்ளது."
எகிப்து நகரான ஷர்ம் எல்-ஷேக்கில் திங்கட்கிழமை நடந்த மாநாட்டில், காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய வார்த்தைகள் இவை.
இந்த மாநாட்டில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம், அதற்காக உதவிய இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் குறித்து பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
காஸா ஒப்பந்தம் பற்றி பேசிய டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் முன்னிலையில் இந்திய பிரதமர் மோதியை பாராட்டினார்.
சரி, காஸா ஒப்பந்தம் கையெழுத்தானபோது நடந்தது என்ன?
எகிப்தின் கடற்கரை நகரான ஷார்ம் எல்-ஷேக்கில் நடந்த மாநாட்டில், காஸாவின் எதிர்காலம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி பற்றி 20 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியும் விவாதித்தனர்.
இதன் பிறகு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து காஸா ஒப்பந்தத்தை வரவேற்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய டிரம்ப், பல ஆண்டுகளாக நீடித்து வந்த வன்முறை முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் இஸ்ரேலும், ஹமாஸும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் செய்தியாளரைச் சந்தித்த போது, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இத்தாலி பிரதமர் மெலோனி, பாலத்தீன அதிபர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
எகிப்தின் அதிபர் அலுவலகம் இந்த மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
காஸாவில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவது, இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறுவது மற்றும் காஸாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது ஆகியவற்றின் அவசியம் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிபர் டிரம்ப்பின் காஸா அமைதித்திட்டத்தின் அடுத்த கட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அது தொடர்பான ஆலோசனைகளையும் தொடங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
இது காஸா நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் காஸாவின் மறுக்கட்டமைப்பில் தொடங்கி, அரசியல் தீர்வில் நிறைவடையும் என எகிப்து அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, எனினும், இந்தியா சார்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்றார்.
இந்தியா ஒரு சிறந்த நாடு என உரையாற்றிய டிரம்ப், அங்கு என்னுடைய நல்ல நண்பர் உயர் பொறுப்பில் இருக்கிறார் என மோதி குறித்து கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீரையும் பாராட்டினார். பின்னர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்பை உரையாற்றக் கூறினார்.
காஸாவில் போரை நிறுத்தியதற்காக டிரம்பைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், அவரை அமைதியை விரும்பும் அதிபர் எனக் கூறினார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதற்காக நோபல் பரிசுக்குப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்த்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



