'மழையென பொழிந்த தங்க நாணயங்கள்' - ஒரு மாதம் நீடித்த இந்திய ஆடம்பர திருமணம் கண்டு ஆங்கிலேயர் வியப்பு

    • எழுதியவர், குர்ஜோத் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"ஷீஷ் மஹாலில் இருந்து குதிரையில் வந்த மகாராஜா, வழி முழுவதும் தங்க நாணயங்களைப் பொழிந்து கொண்டு பாங்கியா கோட்டைக்குச் சென்றார். கன்வர் நௌனிஹால் சிங் திருமணச் சடங்குகளைப் பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்."

"கன்வர் நௌனிஹாலின் தாயார் திரைக்குப் பின்னால் இருந்து வெளியில் வந்தபோது, மகாராஜா ரஞ்சித் சிங் அவரிடம், 'இன்று எனக்கு கடவுள் கொடுத்த மிகச் சிறப்பான நாள். என் முன்னோரால் இந்த நாளைக் காண முடியவில்லை. அதை நான் இன்று காண்கிறேன், அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறினார்."

மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளம் வயதிலேயே அவரது தந்தையும் தாத்தாவும் இறந்துவிட்டனர்.

இந்த கொண்டாட்டமும், மகாராஜா ரஞ்சித் சிங் பேசிய வார்த்தைகளும், அவருடைய அரண்மனையில் இருந்த வழக்கறிஞர் சோஹன் லால் சூரி எழுதிய 'உம்தத்-உத்-தவாரிக்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 1837 இல் நடைபெற்ற மகாராஜா ரஞ்சித் சிங்கின் பேரன் கன்வர் நௌனிஹால் சிங்கின் திருமணம், சீக்கிய ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய அரச கொண்டாட்டங்களில் ஒன்றாகும், கடைசியானதாகவும் கருதப்படுகிறது.

இந்த திருமணம் நடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஜா ரஞ்சித் சிங் மரணம் அடைந்தார்.

அதற்குப் பிறகு லாகூர் அரசின் எந்த வாரிசும் இத்தகைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. பின்னர் அது படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஆக்ஸ்போர்டில் கற்பிக்கும் முனைவர் பிரியா அத்வால், அந்த காலத்தில் பஞ்சாபில் நடந்த மிக ஆடம்பரமான திருமணம் இதுதான் என்று கூறுகிறார். ஆனால், இந்த திருமணத்தைச் சுற்றி சமூக ஊடகங்களில் பரவும் பல கதைகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பிரியா அத்வால், 'ராயல்ஸ் அண்ட் ரெபெல்ஸ்' என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

ஷாம் சிங் அட்டாரிவாலாவின் மகள் நானகி கவுரை கன்வர் நௌனிஹால் சிங் திருமணம் செய்வது, குடும்பத்தின் செழிப்பு மற்றும் ராஜ்ஜியத்தின் வலிமையை வெளிப்படுத்த மகாராஜா ரஞ்சித் சிங் பயன்படுத்திய ஒரு பெரிய நிகழ்வு என்று அவர் கூறுகிறார்.

ஷாம் சிங் அட்டாரிவாலா சீக்கிய அரசின் முக்கிய தளபதிகளில் ஒருவர்.

இந்தத் திருமணத்திற்கு ராஜ்ஜீய மற்றும் அரசியல் முக்கியத்துவமும் இருந்தது என்றும், இது ரஞ்சித் சிங் குடும்பத்தின் எழுச்சி குறித்த அடையாளமாக இருந்தது என்றும் பிரியா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"கரக் சிங், மகாராஜா ரஞ்சித் சிங்கின் அதிகாரப்பூர்வ வாரிசாக இருந்தாலும், போர்த்திறன், குதிரையேற்ற திறன், ஆர்வம் ஆகியவற்றால் கன்வர் நௌனிஹால் சிங் மகாராஜாவைப் போல் மதிக்கப்பட்டார்," எனவும் பிரியா விளக்குகிறார்.

"மகாராஜா ரஞ்சித் சிங், தனது மூத்த மகன் கரக் சிங்கை விட நௌனிஹால் சிங்கை அதிகமாக நேசித்தார்." கன்வர் நௌனிஹால் சிங் நவம்பர் 6, 1840 அன்று மரணம் அடைந்தார்.

'1 மாதம் நீடித்த கொண்டாட்டங்கள்'

இந்த நிகழ்வில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைத் தளபதி சர் ஹென்றி ஃபென் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் என்றும், சட்லெஜ் முழுவதும் உள்ள சுதேச அரசுகளின் மன்னர்களும் தலைவர்களும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வந்ததாகவும் பிரியா கூறுகிறார்.

"நௌனிஹால் சிங்கின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஒரு மாதம் நீடித்தன, அதற்காக நிறைய பணம் செலவிடப்பட்டது. அதற்கு முன்பு நடந்த கரக் சிங்கின் திருமணமும் ஆடம்பரமாக இருந்தது, ஆனால் அதன் முடிவில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது."

மகாராஜா ரஞ்சித் சிங் அட்டாரிக்கு வந்தபோது, தங்க நாணயங்கள் அல்லது பணமழை பொழிந்தார், அல்லது டோலியின் போது அது நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் இவ்வாறு செய்வது மகாராஜாக்களின் பாரம்பரியமாக இருந்தது.

இந்த நிகழ்வு, திருமணத்தைப் பார்க்க வந்த ஆங்கிலேயர்கள் உட்பட பல விருந்தினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் திருமணத்தில் கலந்து கொண்ட கிராமவாசிகளுக்கும் படைவீரர்களுக்கும் பெரும்பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.

ஆனால், திருமணத்திற்கு மொத்தம் எவ்வளவு பணம் செலவானது என்பதைப் பற்றிய எந்த பதிவும் இல்லை என்று பிரியா விளக்குகிறார்.

சமகால ஆதாரங்களின் படி, இந்தத் திருமணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இனிப்புகளுக்கான மிட்டாய் தயாரிப்பாளர்களும் பிற கைவினைக் கலைஞர்களும் பல மாதங்களுக்கு முன்பே அழைக்கப்பட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமணத்தைப் பற்றி வழக்கறிஞர் என்ன எழுதினார்?

பிப்ரவரி 10 அன்று, கரக் சிங் மற்றும் நௌனிஹால் சிங் இருவரும் திருமணத் தயாரிப்புகளுக்காக அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டனர். திருமண விழாவிற்கான பொழுதுபோக்கு ஏற்பாடுகளுக்கு உதவ, ரஞ்சித் சிங் தனது அமைச்சர் பாய் ராமையும் அட்டாரிக்கு அனுப்பினார்.

மகாராஜா ரஞ்சித் சிங், பரிசுகள், நகைகள் போன்ற விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்தினார். திருமண நிகழ்வுகளில் ரஞ்சித் சிங் மற்றும் மை நகாய் இருவரும் முக்கிய பங்காற்றினர்.

உம்தத்-உத்-தவாரிக் என்ற நூலில் திருமணம் குறித்து எழுதப்பட்ட அனைத்தும் முதலில் மகாராஜாவிடம் வாசித்து காட்டப்பட்டதால், அது அதிகாரப்பூர்வப் பதிவாக கருதப்படுகிறது என்று பிரியா எழுதுகிறார்.

மார்ச் 10 அன்று, மகாராஜா ரஞ்சித் சிங் அட்டாரி கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்து, மணமகனுடன் டோலாவை அமிர்தசரஸை நோக்கி அனுப்பியபோது, வழியெங்கும் பணமழை பொழிந்ததாக உம்தத்-உத்-தவாரிக் குறிப்பிடுகிறது.

இதற்குப் பிறகு, மகாராஜா லாகூருக்குத் திரும்பி, ஷலாபாக் என்ற இடத்தில் சர் ஹென்றி ஃபேனைச் சந்தித்தார். 'ராயல்ஸ் அண்ட் ரெபெல்ஸ்' என்ற புத்தகத்தின் படி, ஷாலிமார் பாக் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. ஆனால் ரஞ்சித் சிங் அதை 'ஷலபாக்' என்று அழைத்தார்.

உம்தத்-உத்-தவாரிக் கூற்றுப்படி, "வெற்றி பெற்ற வீரர்களை, உபகரணங்கள், நகைகள் மற்றும் பிற அற்புதமான பொருட்களால் அழகாக அலங்கரிக்கவும், அவர்களின் அணிவகுப்பை லாத் சாஹிப்பிற்கு (பிரிட்டிஷ் பிரதிநிதி) காண்பிக்கவும் கன்வர் நௌனிஹால் சிங்கிற்கு உத்தரவு வழங்கப்பட்டது. அதை பார்க்கும், கேட்கும் மக்கள் கண்கள் பிரகாசிக்கும் வகையில் வழங்கவும் கன்வர் நௌனிஹால் சிங்கிற்கு உத்தரவிடப்பட்டது".

திருமணமும் ஜம்ருத் போரும்

திருமண நிகழ்வின் பின்னணியைப் பற்றி, 'ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்' என்ற நூலில் எழுத்தாளர் ஹரி ராம் குப்தா குறிப்பிட்டுள்ளார். மகாராஜா ரஞ்சித் சிங், பிரிட்டிஷ் பிரதிநிதிக்கு தனது அதிகாரம், செல்வம் மற்றும் ராணுவ வலிமையை காட்ட விரும்பினார். அதற்காக பெஷாவர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்த படைகளும் திரும்ப அழைக்கப்பட்டன என்று எழுதியுள்ளார்.

கைபர் கணவாயின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜம்ருத் பகுதியில் கோட்டை ஒன்றைக் கட்ட ஹரி சிங் நல்வாவிடம் மகாராஜா கூறியிருந்தார். ஆப்கன் ஆட்சியாளர் தோஸ்த் முகமது கான் இந்தக் கோட்டையை தனது ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதினார்.

மார்ச் 10 அன்று, ஹரி சிங் உதவி கோரி ஒரு கடிதம் அனுப்பினார். அதற்கு, 'பிரிட்டிஷ் பிரதிநிதி திரும்பிய பிறகு படை அனுப்பப்படும்' என்ற பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் 21 அன்று இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது.

இதற்குப் பிறகு, மகாராஜா ரஞ்சித் சிங், கன்வர் நௌனிஹால் சிங்கையும் மற்ற பிறரையும் உடனடியாக பெஷாவருக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு, ஏப்ரல் 30 முதல் மே 1 வரை நடந்த போரில் ஹரி சிங் நல்வா உயிரிழந்தார்.

'கன்வர் நௌனிஹால் சிங்கின் மரணம்'

மகாராஜா ரஞ்சித் சிங் இறந்த நேரத்தில், கன்வர் நௌனிஹால் சிங் பெஷாவர் கோட்டையைப் பாதுகாக்கும் பணியில் இருந்தார். அதனால், அவர் 1840ஆம் ஆண்டு லாகூருக்குத் திரும்பினார்.

கரக் சிங் மர்மமான சூழ்நிலையில் இறந்த பிறகு, கன்வர் நௌனிஹால் சிங் தனது தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நாளில் இறந்ததாக பிரியா கூறுகிறார்.

கன்வர் நௌனிஹால் சிங் மீது ஒரு கதவு விழுந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பிரிட்டிஷ் ஓய்வூதியப் பதிவுகளின்படி, கன்வர் நௌனிஹால் சிங் நான்கு முறை திருமணம் செய்துகொண்டார் என்று பிரியா எழுதியுள்ளார்.

நானகி கவுர், சாஹிப் கவுர், பதூரன் கவுர் மற்றும் கட்டோச்சன் கவுர் ஆகியோர் தான் அவரது மனைவிகள்.

கன்வர் நௌனிஹால் சிங்கிற்கு குழந்தைகள் இல்லை. ரஞ்சித் சிங்கின் மகன் மகாராஜா ஷேர் சிங் லாகூர் அரசவையைக் கைப்பற்றிய பின், நௌனிஹாலின் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டதாக பிரியா கூறுகிறார்.

இச்சம்பவம் நடப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்வர் நௌனிஹால் சிங்கின் திருமணத்தை முன்னிட்டு அக்குடும்பம் அதிகாரத்தில் உயர்ந்த நிலையை அடைந்ததைக் கொண்டாட பெரும் விழாக்கள் நடைபெற்றன.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஜா ரஞ்சித் சிங் மரணம் அடைந்தார். அதற்கடுத்த சில ஆண்டுகளில், லாகூர் தர்பாரின் மற்ற வாரிசுகளான கரக் சிங், ஷேர் சிங் மற்றும் கன்வர் நௌனிஹால் சிங் ஆகியோரும் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு