ஆதார் அட்டையில் வரப்போகும் புதிய மாற்றங்கள் - என்ன விவரங்கள் இருக்காது?

அடையாள அட்டை முதல் முகவரி ஆதாரம் வரை பரவலாக தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்பட்டுவருகிறது.

கடன், பாஸ்போர்ட், பேன் (PAN) என எது வாங்குவதாக இருந்தாலும் ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது. பல பள்ளிக் குழந்தைகள் கூட ஆதார் அட்டைகளை பெற்றிருக்கின்றனர்.

இப்படி பரவலான பயன்பாட்டால், ஆதார் அட்டை தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஒரு நபரின் அடையாளம், பிறந்த நாள், முகவரி என அனைத்தும் அதில் இருப்பதால் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஒரு புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இந்த அட்டையில் ஒரு நபரின் பிறந்த நாளோ, முகவரியோ இடம்பெறாது.

புதிய ஆதார் அட்டையில் புகைப்படமும், க்யூஆர் (QR) குறியீடும் மட்டும் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் 12 இலக்க ஆதார் எண் கூட இடம்பெறாது.

ஆதாரில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆதாரில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

டிசம்பர் முதல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக யுஐடிஏஐ நிர்வாக இயக்குநர் புவனேஷ் குமார் தெரிவித்தார்.

இதன் நோக்கம், ஆதாரின் ஆஃப்லைன் சரிபார்ப்பைக் குறைப்பது. குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் செய்யப்படும் சரிபார்ப்பைக் குறைப்பது.

ஆதார் சரிபார்ப்பு ஆன்லைனில் செய்யப்படும் போது, தனிநபரின் அடையாள ரகசியம் பாதுகாக்கப்படும்.

"ஆதார் அட்டையில் என்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதில் புகைப்படம் மற்றும் க்யூஆர் குறியீடு மட்டுமே இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

மேலும், "நாம் (மற்ற தகவல்களை) அச்சடித்துக்கொண்டே இருந்தால், மக்கள் அச்சடிக்கப்பட்ட தகவல்களுடன் உள்ள அட்டைகளையே பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதனால், அதை தவறாக பயன்படுத்த விரும்புபவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள்." என்றும் அவர் கூறினார்.

(இதைத் தடுக்க புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன)

ஆதார் அங்கீகாரத்திற்கான புதிய செயலி

தற்போதைய ஆதார் சட்டத்தின்கீழ், ஆஃப்லைன் சரிபார்ப்புக்காக ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பது, பயன்படுத்துவது அல்லது சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், பல இடங்களில் உங்கள் ஆதார் அட்டையின் நகலை வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு ஹோட்டலில் 'செக்-இன்' செய்யும் போது, ​​விருந்தினர்களின் ஆதார் அட்டைகள் நகல் எடுக்கப்பட்டு சேமிக்கப்படும். இப்படித்தான் ஆதார் எண் மற்றும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

இப்போது, ஆதார் அட்டை காகித நகல்களின் ஆஃப்லைன் சரிபார்ப்பைக் குறைக்க புதிய விதி கொண்டுவரப்படலாம்.

இந்த முன்மொழிவு டிசம்பர் 1-ம் தேதி மறு ஆய்வு செய்யப்படவுள்ளது.

யுஐடிஏஐ நிர்வாக இயக்குநர் புவனேஷ் குமார், ஆதார் ஒரு ஆவணமாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

ஆதார் எண் அல்லது க்யூஆர் குறியீட்டை சரிபார்ப்பதன் மூலம் மட்டுமே அது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது போலி ஆவணமாக இருக்கலாம்.

புதிய ஆதார் செயலியின் அம்சங்கள் என்ன?

யுஐடிஏஐ ஒரு புதிய ஆதார் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், முக அங்கீகார (face authentication) வசதியைப் பயன்படுத்தி முகவரி சான்று புதுப்பித்தல், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களை சேர்த்தல், மொபைல் எண்ணை புதுப்பித்தல் போன்றவற்றை செய்ய முடியும்.

எதிர்காலத்தில், இந்த ஆதார் செயலியை சினிமா தியேட்டர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, ஹோட்டல்களில் 'செக்-இன்' செய்வது, மாணவர்களை சரிபார்ப்பது, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது போன்றவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.

ஆதார் எதற்கான ஆதாரம்?

ஆதார் எந்த விஷயத்தின் சான்று என்பதைப் பற்றி பலருக்கும் குழப்பம் உள்ளது.

உண்மையில், ஆதார் என்பது அடையாளச் சான்று மட்டும். அது குடியுரிமைச் சான்றாகவும், பிறந்த தேதிக்கான சான்றாகவும் கருதப்படாது.

சமீபத்தில், ஆதாரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் குடிமகனாக சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்தது.

அதேபோல, ஆதார் ஒரு முகவரி சான்றும் அல்ல. அதற்குப் பதிலாக, பாஸ்போர்ட், மின்சார கட்டணப் பதிவு, வங்கி கணக்கு அறிக்கை, வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்றவை முகவரிக்கான சான்றுகளாகக் கருதப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு