You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு பஷர் அல்-அசத் முதல் அறிக்கை - என்ன கூறியுள்ளார்?
- எழுதியவர், பௌலின் கோலா
- பதவி, பிபிசி நியூஸ்
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத், தான் ரஷ்யாவிற்குத் தப்பிச் செல்ல வேண்டுமென ஒருபோதும் விரும்பியதில்லை என்று கூறுகிறார். சிரியா தலைநகர் டமாஸ்கஸின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும்.
அசத்தின் அறிக்கை திங்களன்று சிரியா அதிபரின் நிர்வாகத்திற்கு சொந்தமான டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது அந்த டெலிகிராம் சேனலை யார் கட்டுப்படுத்துகிறார்கள் அல்லது அதை பதிவிட்டது அசத் தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த அறிக்கையில், சிரியா தலைநகர் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்த பிறகு, லடாகியா மாகாணத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்திற்கு 'போர் நடவடிக்கைகளை மேற்பார்வையிட தான் சென்றதாகவும், ஆனால் அங்கிருந்த சிரிய துருப்புகள் முன்னதாகவே அந்த தளத்தைக் கைவிட்டு வெளியேறி இருந்தன' என்றும் அசத் கூறுகிறார்.
கமெய்மிம் விமானப்படை தளமும் தீவிரமான ட்ரோன் தாக்குதலுக்கு ஆளானதால், ரஷ்யர்கள் அவரை மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததாக அசத் கூறுகிறார்.
அசத்தின் அறிக்கை கூறுவது என்ன?
அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், டிசம்பர் 8 அன்று என்ன நடந்தது என்பதையும், ரஷ்ய தளத்தில் அசத் எவ்வாறு முற்றுகையிடப்பட்டார் என்பதையும் அவர் விவரித்ததாகக் கூறப்படுகிறது.
"தளத்தை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியமான வழி இல்லாததால், டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை மாலை உடனடியாக ரஷ்யாவுக்கு வர ஏற்பாடு செய்யுமாறு தளத்தின் கட்டுப்பாட்டு மையத்தை மாஸ்கோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
"சிரியா ராணுவ படைகளின் தோல்வி மற்றும் எஞ்சியிருந்த அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்ததைத் தொடர்ந்து, டமாஸ்கஸ் வீழ்ந்தது. அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்தது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த நிகழ்வுகளின் போது எந்தவொரு கட்டத்திலும் நான் பதவி விலகுவதையோ அல்லது அடைக்கலம் தேடுவதையோ கருத்தில் கொள்ளவில்லை, எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ அத்தகைய கருத்தையும் முன்வைக்கவில்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
"ஒரு அரசு பயங்கரவாதத்தின் கைகளில் சிக்கும்போது, அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யும் திறன் இழக்கப்படும்போது, எந்தவொரு பதவியும் நோக்கமற்றதாகிவிடும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 நாட்களுக்குள் சிரியா நகரங்களும் மாகாணங்களும் இஸ்லாமிய போராளிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS- எச்டிஎஸ்) தலைமையிலான கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தபோது அசத்தை பொதுவெளியில் காண முடியவில்லை.
இருப்பினும், டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது பிரதமர் கூட அசத்தை தொடர்பு கொள்ள முடியாததால், அசத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற ஊகங்கள் அதிகரித்தன.
டிசம்பர் 9 அன்று, ரஷ்யாவில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்தன. இருப்பினும் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழு
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், சிரிய கிளர்ச்சிக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
சிரியாவின் மிக சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழுவான தஹ்ரிர் அல்-ஷாம் (எச்டிஎஸ்), 2011இல் ஜபத் அல்-நுஸ்ரா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், ஐ.நா., அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் அதை ஒரு பயங்கரவாத குழுவாகவே கருதுகின்றனர்.
அதன் தலைவர் அஹ்மத் அல்-ஷரா ( அபு முகமது அல்-ஜவ்லானி) சிரியாவில் பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கான சகிப்புத்தன்மை உறுதிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரது குழுவின் 'ஜிஹாதி' வரலாறு காரணமாக, அத்தகைய வாக்குறுதிகளை அக்குழு நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தை சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அல்-ஷராவை சந்தித்த ஐ.நா தூதர் கெய்ர் பெடர்சன், சிரியாவில் நம்பகமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய முறையில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கத்தார் நாட்டின் தூதரகம் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
மேற்கத்திய நாடுகள், தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கும் அளவுக்கு செல்லவில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும் பிரிட்டனும் எச்டிஎஸ் உடன் தொடர்பில் இருப்பதாக கூறின.
இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு குழுவுடன் ராஜ்ஜிய தொடர்புகளை தொடங்கியுள்ள போதிலும், அது ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே தொடர்ந்து கருதப்படுகிறது என்பதை பிரிட்டன் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
திங்களன்று பேசிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், "ரஷ்யா மற்றும் இரானுக்கு, சிரியாவின் எதிர்காலத்தில் பங்கு இருக்கக்கூடாது" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)