You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ரிஷப் ஷெட்டி மாயாஜாலம் மீண்டும் ஜொலித்ததா?
- எழுதியவர், ஜிஆர் மஹரிஷி
- பதவி, பிபிசி செய்திக்காக
கடந்த 2022-ல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியான காந்தாரா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது காந்தாரா சாப்டர் 1 இதன் முன்கதையாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை எந்தளவிற்கு பூர்த்தி செய்துள்ளது?
காந்தாராவில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஒரு இடத்தில் மறைந்து போகும். அந்த இடத்தில் இருந்து சாப்டர் 1 தொடங்குகிறது.
காந்தாரா பகுதியின் பிரமாண்டம், ஈஸ்வரன் பூந்தோட்டம் பகுதியின் தனித்துவம், முன்பு பன்றியின் வடிவத்தில் இருந்து இப்போது புலியின் வடிவத்தில் தோன்றும் பஞ்சுர்லி என பல்வேறு கற்பனை கூறுகளுடன் கதை அமைந்துள்ளது
திரைப்படத்தின் கதை என்ன?
பல நூற்றாண்டுகளுக்கு முன் கடம்பா வம்சம் பங்காரா ராஜ்யத்தை ஆண்டுவந்தது.
அரசன் குலசேகரா (குல்ஷன் தேவய்யா), அவரின் தந்தை ராஜநேகரா (ஜெய்ராம்) மற்றும் அவரின் சகோதரி கனகவதி (ருக்மினி வசந்த்) ஆவர்.
இந்த ராஜ்யத்தைச் சேர்ந்த யாரும் காந்தாரா காட்டிற்கு செல்லமாட்டார்கள். அங்குள்ள பழங்குடியின மக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பர்.
அவர்களின் தலைவன்தான் பெர்மே (ரிஷப் ஷெட்டி). இவர் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தெய்வ மகன் என சொல்லப்படுகிறது. சில சக்திகள் இவரை பாதுகாக்கும்.
இதே காட்டில் உள்ள மற்றொரு பழங்குடியின சமூகம், கடவுள் சிலைக்காக காந்தாரா இன மக்களுடன் சண்டையிட தயாராகின்றனர்.
இதற்கிடையில் மன்னர் குலசேகரா மதுபோதையில் காந்தாரா காட்டிற்கு வேட்டைக்காக செல்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பெர்மே தனது மக்களுடன் பங்காராவிற்குள் செல்கிறார். தனது சமூக மக்கள் அங்கு அடிமைகளாக இருப்பதைப் பார்க்கிறார். அங்குள்ள துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறார்.
இதற்கு எதிராக அரசர் என்ன செய்கிறார்? கதாநாயகனுக்கு எப்படி தெய்வீக சக்தி கிடைக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
காந்தாரா படத்தில் நில உரிமையாளர் மற்றும் ஏழை மக்களிடையே நிலப் பிரச்னை காட்டப்பட்டிருக்கும்.
நில உரிமையாளருடன் இருக்கும் கதாநாயகன் பின் உண்மையை அறிந்துகொண்டு நிலத்திற்காக போராடுவார்.
இந்த பிரச்னையை அப்படியே அரசருக்கும் பழங்குடி மக்களுக்கு இடையே நடப்பதுபோல மாற்றினால் அதுதான் சாப்டர் 1.
அரசர் ஈஸ்வர பூந்தோட்டம் என்ற பகுதியை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால் அவரின் கால்தடம் அங்கு படுவதை பழங்குடியின மக்கள் விரும்பவில்லை.
காந்தாராவில் நிலம், சாதி, பிற்படுத்தப்படுதல், வனத்துறை அதிகாரிகளின் கொடுங்கோன்மை பற்றி தத்துவ ரீதியாக சொல்லப்பட்டிருக்கும். தந்தை, மகன் இடையிலான பாசமும் நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கும்.
சாப்டர் 1-ல் இந்த குறை உள்ளது. கதாநாயகன், கதாநாயகி, அரசர் மற்றும் தந்தையை தவிர வேறு எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.
படம் முதலிலேயே சொதப்பிவிட்டது. இடைவெளியிலும் படம் வேகமெடுக்கவில்லை.
படத்தின் தொடக்கத்தில் வரும் பின்னணி குரலிலும் தீவிரம் இல்லை. திரைக்கதை எளிமையாக இல்லை என்பதால் திரையில் பார்த்து புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.
2-ஆம் பாதி எப்படி உள்ளது?
இரண்டாம் பாதியில்தான் படம் சற்று வேகமெடுக்கத் தொடங்கியது. இப்போதுதான் படம் எதை நோக்கி செல்கிறது என்ற தெளிவு கிடைக்கிறது.
உண்மையில் காந்தாரா திரைப்படம் கிராஃபிக்ஸ் காட்சிகளால் வெற்றி பெறவில்லை. கதையும், திரைக்கதையும் வலிமையாக இருந்தது.
ஆனால் சாப்டர் 1-ல் கதை, திரைக்கதையை விட்டுவிட்டு சண்டை மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டியின் சாமி ஆட்டம் காட்சிகள் நன்றாக உள்ளன. ஆனால் மீண்டும் அதே மேஜிக் கைக்கொடுக்கும் என நினைப்பது பேராசைதான்.
ஒரு காட்சியை மீண்டும் பார்ப்பதுபோல தோன்றுகிறது. குழப்பமான கதை, மொதுவான திரைக்கதை, கதாபாத்திரங்களை சரியாக கையாளாதது ஆகியவற்றை தவிர படத்தின் மேக்கிங் மற்றும் பின்னணி இசை கச்சிதமாக உள்ளது.
அரவிந்த் எஸ் காஷ்யப்பின் ஒளிப்பதிவு மற்றும் அஜனீஷின் பின்னணி இசைக்கு கூடுதல் பாராட்டு அவசியம்.
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பற்றி சொல்ல தேவையில்லை. ருக்மினி வசந்தின் நடிப்பு அருமை. தனது கண்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெய்ராம் மற்றும் குல்ஷனின் நடிப்பும் நன்றாகவே உள்ளது. காந்தாரவில் நடித்திருந்த மொத்த காமெடி நடிகர்களும் இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களின் நகைச்சுவைகள் உங்களை சிரிக்கவைக்காது.
காந்தாராவில் வில்லன் வலுவாக இருந்தார். ஒவ்வொரு தருணத்திலும் அவரின் கொடூர சிந்தனைகள் வெளிப்படும். அதனால்தான் கதாநாயகன் தனியாக தெரிந்தார்.
ஆனால் சாப்டர் 1 -ல் கதாநாயகன் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதைப் போல இருந்தன.
படத்தின் நிறைகள் என்ன?
- ரிஷப் ஷெட்டி மற்றும் ருக்மினியின் நடிப்பு
- ஒளிப்பதிவு
- இசை மற்றும் கிராஃபிக்ஸ்
- கிளைமேக்ஸ் காட்சி
படத்தின் குறைகள் என்ன?
- முதல்பாதி
- சலிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை
- தெளிவற்ற கதை மற்றும் திரைக்கதை
மற்றபடி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.