You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடு முழுவதும் 9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலி - நிரப்புவது எப்போது? காத்திருக்கும் இளைஞர்கள்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரை பூர்வீகமாக கொண்ட 27 வயது ககன் தீப் சிங் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற போராடி கொண்டிருக்கிறார்.
ஆனால் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வை 6 முறை எழுதிய அவர் ஒருமுறை கூட தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் துவண்டு போகாமல் தனது முயற்சியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறை தேர்வில் வெற்றிவாய்ப்பை இழக்கும் போதும் அது தனக்கு வலியை ஏற்படுத்தும் என்கிறார் அவர். ககன் தீப் பல ஆண்டுகளாக டெல்லியில் இருந்தபடி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இதுகுறித்து பேசும் அவரது பெற்றோர், "இப்போதும் தனது நாளின் பெரும்பகுதியை போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ககன் தீப் சிங் செலவிடுகிறார். ஆன்லைனில் பாடங்களை கவனிக்கிறார். புத்தகங்கள் படிக்கிறார். குறிப்புகளை எடுத்துக் கொள்கிறார்" என்கின்றனர்.
பணத்திற்காக தனது குடும்பத்தினரை சார்ந்திருக்க விரும்பாத ககன் தீப் சிங் சில சமயங்களில், அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள போர்ட் ப்ளேயரில் உள்ள அரசுக் கல்லூரியில் பகுதிநேரமாக வரலாறு பாடம் கற்றுத்தருகிறார். இதன் மூலம் அவருக்கு சிறிய அளவில் பணம் கிடைக்கிறது. தனது இலக்கை அடைய வெகு தொலைவு உள்ளது என்பது ககன் தீப் சிங்குக்கு நன்கு தெரியும்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் , விரும்பிய அனைவருக்கும் அரசு வேலை கிடைத்துவிடாது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அரசு தரவுகளின்படி 2022 மார்ச் மாதம் வரையில் அரசு துறைகளில் 9,64,359 பதவிகள் காலியாக உள்ளன.
மார்ச் 2023 நிலவரப்படி, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணியிடங்களில் 7,47,565 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதில், இந்திய ரயில்வேயில் ஜூலை 2023 வரையில் 2,50,965 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜனவரி 2023 வரையில் மத்திய ஆயுதப் போலீஸ் படைகளில் 84,866 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால், அரசுப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, அரசு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்.
இதுகுறித்து பேசும் பேராசிரியர் ரித்திகா கேரா, "ஒரு வேலையைப் பற்றி நினைக்கும் போது, சம்பளம், பணி பாதுகாப்பு, வேலை நேரம், பணிச் சூழல், சலுகைகள் போன்றவை குறித்தும் நாம் யோசிப்போம். நாட்டின் தற்போதைய சூழலில், இதுபோன்ற வேலை எங்கு கிடைக்கும்? அரசாங்கத் துறையில் மட்டுமே கிடைக்கும்” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)