வங்கதேசம் தோற்கக் காரணமான ஒரு பந்து - எல்லைக் கோட்டை கடந்தபோதும் 4 ரன் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகக் கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிக்காகக் கடினமாகப் போராடியும் ஒரேயொரு பந்து சாதகமாக அமையாததால் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்காவுக்கு அதுவே நல்வாய்ப்பாக அமைந்துபோனது.

போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதில் அந்தப் பந்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அது வங்கதேசத்துக்கு சாதகமாக அமைந்திருந்தால் சூப்பர் ஓவராக அமைந்திருக்கும். அது தவறியதால், தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் டி பிரிவில் 20-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்ரிக்க அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது. 114 ரன்கள் எனும் குறைந்த இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்கா

இந்த வெற்றி மூலம் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றாலும் கணித ரீதியாக நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கும் வாய்ப்பு இருப்பதால், இன்னும் ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 3 ஆட்டங்களையும் முடித்துவிட்ட தென் ஆப்ரிக்கா அடுத்ததாக 4-ஆவது ஆட்டத்துக்காக செயின்ட் லூசியாவுக்கு புறப்படுகிறது.

அதேசமயம் வங்கதேச அணி 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 வெற்றிகளைப் பெற்றால், சூப்பர்-8 சுற்றுக்கு நல்ல ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறவும் வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்த இரு ஆட்டங்களையும் நல்ல ரன்ரேட்டில் வெல்வது வங்கதேசத்துக்கு அவசியம். ஆதலால், குரூப் டி பிரிவில் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதை தென் ஆப்ரிக்கா மட்டும் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. நேபாளத்துடன் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதில் பெரிதாக தடையிருக்காது.

எதிர்பாராத முடிவுகளைத் தரும் நியூயார்க் மைதானம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த அதே நியூயார்க் மைதானத்தில் வேறு விக்கெட்டில் தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் ஆட்டம் நடந்தது. இந்த மைதானத்தில் பெரிதாக ரன்களை எதிர்பார்க்க முடியாது, குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்வதில் இரு அணிகளும் மல்லுக்கட்ட வேண்டிய நிலைதான் இருந்தது.

பாகிஸ்தான் அணியைக்கூட 119 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி. ஆனால், நேற்றை ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களை அடித்தநிலையில் அந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலை பந்துவீச்சாளர்களுக்கு இருந்தது.

ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர்களும் தங்களுக்கான கடினமான பணியைச் செய்து, 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர். அதன்பின் ஹிர்தாய், மெகமதுல்லா ஆட்டத்தை திருப்பி வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், நம்பிக்கையை கைவிடாத தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியாகப் பந்துவீசி வங்கதேசத்தை முடக்கினர்.

தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களைக் கூட எடுத்ததற்கு கிளாசன்(46), மில்லர்(29) ஆகியோர்தான் காரணம். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம்.

இவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருந்தால், தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். தென் ஆப்ரிக்க அணியின் மானம் காத்த கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வங்கதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடந்த ஆட்டத்தைப் போன்று இந்த ஆட்டத்திலும் ஹிர்தாய், மெகமதுல்லா அணியை தூக்கி நிறுத்தினர். ஆனால், கடைசி நேரத்தில் இருவரும் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

எல்லைக் கோட்டைக் கடந்தும் 4 ரன்கள் வழங்கப்படாதது ஏன்?

இந்த ஆட்டம் உண்மையில் சூப்பர் ஓவரில் முடிந்திருக்க வேண்டியது. வங்கதேசம் தோற்ற 4 ரன்கள், பவுண்டரியாக வழங்கப்பட்டிருந்தால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் 3வது சூப்பர் ஓவர் ஆட்டமாக அமைந்திருக்கும். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரை மெகமதுல்லா எதிர்கொண்டார். 2-ஆவது பந்தை மெகமதுல்லா ப்ளிக் ஷாட் மூலம் அடிக்க முயன்றபோது, கால்காப்பில் பந்துபட்டு லெக்பை மூலம் பவுண்டரி சென்றது.

ஆனால், கால்காப்பில் மெகமதுல்லா வாங்கியதைப் பார்த்த தென் ஆப்ரிக்க வீரர்கள் நடுவரிடம் அவுட் அப்பீல் செய்யவே, நடுவரும் அவுட் வழங்கினார். ஆனால், இதை எதிர்த்து மெகமதுல்லா 3வது நடுவரிடம் அப்பீல் செய்தார்.இதை ஆய்வு செய்த 3வது நடுவர், கால்காப்பில் வாங்கிய பந்து தவறான திசையில் சென்றதாகக் கூறி, அவுட் வழங்கியதை ரத்து செய்தார்.

ஆனால் லெக்பை மூலம் பவுண்டரி சென்றதற்கு பவுண்டரி வழங்கவில்லை. ஒருவேளை பவுண்டரி வழங்கியிருந்தால், ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் வந்திருக்கும்.

ஆனால் ஐசிசி விதி டிஆர்எஸ்(3.7.1.) விதிப்படி, “ நடுவரின் முடிவு அவுட்டாக இருக்கும்போது, பேட்டர் அப்பீல் செய்து அவுட் ரத்து செய்யப்பட்டால் அந்த பந்து “டெட்பால்” என அறிவிக்கப்படும். பேட்டிங் செய்யும் அணி விக்கெட்டை பாதுகாக்கலாம், ஆனால், அதனால் கிடைத்த ரன்கள் செல்லாததாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியால் வங்கதேசத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய 4 ரன்கள் கிடைக்கவில்லை. ஒருவேளை களநடுவர் அவுட் வழங்காமல், லெக் பை என அறிவித்திருந்தால், சூப்பர் ஓவரில் ஆட்டம் முடிந்திருக்கும்.

தென் ஆப்ரிக்காவின் 3 தலைவலிகள்

தென் ஆப்ரி்க்க அணிக்கு அதன் முதல் 3 வரிசை ஆட்டக்காரர்களின் பேட்டிங் ஃபார்ம் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இந்த 3 பேட்டர்களும் சேர்ந்து 9 இன்னிங்ஸ் ஆடி வெறும் 61 ரன்கள் சேர்த்துள்ளனர், சராசரியாக 6.77 ரன்கள் மட்டும்தான். உகாண்டா, பிஎன்ஜி அணி பேட்டர்களின் சராசரியைவிடக் குறைவாகும்.

இதில் பெரிய தலைவலியாக இருப்பது ஹென்ட்ரிக்ஸ் பேட்டிங்தான். கடந்த 3 போட்டிகளில் 4,3,0 என்று ஹென்ட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். இவர்கள் 3 பேரும் 3 ஆட்டங்களிலும் ஆட்டமிழந்தவிதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 5-வது ஓவரில் டக்அவுட்டில் வெளியேறினார். டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி முதல் 5 ஓவர்களில் முதல் 4 விக்கெட்டுகளை இழப்பது இதுதான் முதல்முறை. ஆனால், கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்துதான் அணிக்கு கவுரமான ஸ்கோரைக் கொண்டு வந்தனர். அதிலும் மில்லருக்கு நேற்று பிறந்தநாள். 13 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டிய மில்லருக்கு கேட்ச் வாய்ப்பை லிட்டன் தாஸ் தவறவிட்டதால் 29 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது.

தென் ஆப்ரிக்காவை இறுக்கிய வங்கதேசம்

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் தமிம் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் பேட்டிங் முதுகெலும்பை நொறுக்கிவிட்டார். 4 ஓவர்கள் வீசிய தமிம் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைப் பயன்படுத்தி ரிஷாத் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மானும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி தென் ஆப்ரிக்க அணியின் ரன் சேர்ப்புக்கு பெரிய தடைக்கற்களை போட்டனர். ரிசாத் ஹூசைன், முஸ்தபிசுர், தமிம் ஆகிய 3 பேரும் கடைசி 3 ஓவர்களை வீசி டெத் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தினர்.

அதிலும் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய ஸ்கோர் வராமல் தடுத்தனர். தஸ்கின் அகமதுவும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிஷாத் ஹூசைன் தனது முதல் 3 ஓவர்களில் 28 ரன்களை வழங்கிய நிலையில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஒட்டுமொத்தத்தில் வங்கதேசத்தின் பந்துவீச்சு தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.

“வெற்றி பெற வேண்டிய ஆட்டம்”

தோல்வி அடைந்த வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ கூறுகையில் “ஒவ்வொருவரும் பதற்றத்துடன் இருந்தோம். ஜேக்கர் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. தன்சித் கடந்த இரு ஆட்டங்களாக தீவிரமாகப் பயிற்சி செய்தார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பது அவசியமாக இருந்ததை அவர் செய்து கொடுத்தார். இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றிருக்க வேண்டும், வெற்றியை நெருங்கியபோதும், கடைசி இரு ஓவர்களை தென் ஆப்ரிக்க சிறப்பாகப் பந்துவீசியது. கிரிக்கெட்டில் இதுபோன்ற முடிவுகள் நடக்கும்.” எனத் தெரிவித்தார்.

கடைசி ஓவரில் என்ன நடந்தது?

114 ரன்கள் எனும் குறைவான ஸ்கோர், ஓவருக்கு 5 ரன்கள் சேர்த்தாலே வென்றுவிடலாம் என்ற நிலையில், தன்சித் ஹசன்(9), சான்டே(14), லிட்டன் தாஸ்(9), சஹிப்(3) என முதல் 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அணியை சிக்கலில் தள்ளினர்.

ஹிர்தாய், மெகமதுல்லாவின் போராட்டம்தான் ஆட்டத்தை கடைசிவரை நகர்த்தி வந்தது. 18-வது ஓவரில் ரபாடா எடுத்த ஹிர்தாய்(37) விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. செட்டில் ஆன பேட்டர் ஆட்டமிழந்ததும் வங்கதேசத்துக்கு நெருக்கடி அதிகரித்தது.

கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேசவ் மகராஜ் இதுவரை வீசியதே இல்லை. பரிசோதனை முயற்சியாக நேற்று பந்துவீசியபோது, முதல் 2 பந்துகளில் 4 ரன்களை வங்கதேசம் சேர்த்தது. 3வது பந்தை ஜேக்கர் அலி தூக்கி அடிக்க லாங் ஆன் திசையில் கேட்சானது. 4-வது பந்தில் ஒரு ரன். 5-வது பந்தை கேசவ் ஃபுல்டாஸாக வீசவே மெகமதுல்லா சிக்ஸருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் மார்க்ரம் கடினமான கேட்சைப் பிடித்தபோது வங்கதேசத்தின் தோல்வி உறுதியானது. கடைசிப்பந்தில் ஒரு ரன் சேர்க்கவே வங்கதேசம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)