You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யானைகளுக்கு தனி சுரங்கப் பாதை - இறப்புகளை குறைக்க உதவுமா?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நாளுக்கு நாள் பெருகி வரும் மனித - விலங்கு மோதல்களால் அதிகம் உயிரிழக்கும் விலங்கு யானைதான். மனிதர்கள் - யானைகள் மோதலை தடுக்க பரிட்சார்த்த முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விபத்துக்களால் ஏற்படும் யானைகளின் உயிரிழப்பு குறையவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 80 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் யானைகளுக்கு எனப் பிரத்யேகமான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வேயில் யானைகளுக்காக அமைக்கப்படும் முதல் சுரங்கப் பாதை இது தான்.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுவதாக வனத்துறை மற்றும் இரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான பரிந்துரை கடந்த 2010-ம் ஆண்டே வழங்கப்பட்டுவிட்டது. 12 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு நீதிமன்றம் தலையிட்டதன் பின்னணியில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் எட்டிமடை - கஞ்சிக்கோடு ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் உணர்திறன் மிக்கவையாக விளங்குகிறது. இங்கு ஏ மற்றும் பி என இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன. இவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்கின்றன. ரயில் தடங்களின் இரு புறமும் அடர்ந்த வனப்பகுதிகளிலும் யானைகளின் வழித்தடமும் அமைந்துள்ளன.
2002 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 21 ஆண்டுகளில் இந்த நிலப்பரப்பில் மட்டும் 30 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. இதில் பெரும்பாலான விபத்துகள் பி வழித்தடத்தில் நடந்துள்ளன. இதனால் யானைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. இது தொடர்பாக ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில் முதன்மையானது யானைகள் கடந்து செல்ல பி வழித்தடத்தில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்பது தான். இதற்கான பரிந்துரை கடந்த 2010 ஆம் ஆண்டே வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
எங்கு அமைகிறது சுரங்கப் பாதை?
இந்த நிலையில் சுரங்கப் பாதை அமையவிருக்கும் இடத்திற்கு சென்றோம். தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை என்பதால் ரயில் பாதையில் நடந்து தான் செல்ல முடியும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கேரள எல்லைக்குள் அமைந்திருக்கும் வாளையாறு ரயில் நிலையத்திற்கும் தமிழ்நாடு எல்லைக்குள் அமைந்திருக்கும் எட்டிமடை ரயில் நிலையத்திற்கும் இடையே தான் இந்த சுரங்கப் பாதைகள் அமையவிருக்கின்றன. இரண்டு சுரங்கப் பாதைகளில் முதல் சுரங்கப் பாதைக்கான பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
பி வழித்தடத்தில் தமிழ்நாடு எல்லை தொடங்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் ரயில்பாதையில் நடந்து சென்றால் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வரும் இடத்தை அடையலாம். அப்லைன் (upline) எனப்படும் உயர்மட்டத்தில் இந்த பாதை அமைந்துள்ளது. வழித்தடத்தில் ஒழுங்கான இடைவெளிகளில் யானைகள் கடந்து செல்லும் பாதை என்பதை குறிக்கும் அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையில் இரு புறமும் யானைகள் கடந்து செல்லும் தடங்கள் இருப்பதை காண முடிகிறது.
இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்த பிறகு சுரங்கப் பாதை பணிகள் நடைபெறும் இடத்தை அடைய முடிந்தது. 18.3 மீட்டர் அகலம், 6.06 மீட்டர் உயரத்தில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பி வழித்தடத்தில் ஒன்பது மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுரங்கப் பாதை தோண்டப்பட்டு இரண்டு தற்காலிக தூண்கள் எழுப்பட்டுள்ளன. கான்க்ரீட் தளம் அமைப்பதற்கான குழி தோண்டப்பட்டுள்ளது.
முதல் சுரங்கப் பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுரங்கப் பாதைக்கான பணிகளும் விரைந்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏன் 12 ஆண்டுகள் தாமதமானது?
வனத்துறையும் ரயில்வே துறையும் அலட்சியமாக இருந்தது தான் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு காரணம் என்கிறார் வன ஆர்வலர் பாண்டியராஜா. அதற்கான காரணங்களை பிபிசி தமிழ் கேட்டபோது, “சுரங்கப் பாதைகளுக்கான பரிந்துரை பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும் யார் அதற்கான செலவுகளை ஏற்பது என வனத்துறைக்கும் ரயில்வே துறைக்கும் இடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால் எந்த துறையும் நிதி ஒதுக்க முன்வரவில்லை.
இதனாலே 12 ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரயிலில் அடிபட்டு ஒரே சமயத்தில் மூன்று யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டது. சுரங்கப் பாதை பணிகள் தாமதமாவதை கண்டித்த நீதிபதிகள் அதற்கான நிதியை ரயில்வே துறை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அதோடு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வந்தும் ஆய்வு செய்திருந்தனர். அதனால் தான் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது கட்டுமான பணிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
யானைகளுக்கு சுரங்கப் பாதை அமைக்க இந்த இடம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது, “பி வழித்தடம் யானை அதிகம் கடந்து செல்கின்ற பகுதி. சுரங்கப் பாதை அமைகின்ற இடத்தில் யானைகள் அதிகம் கடந்து செல்வது வனத்துறை மற்றும் ரயில்வேயால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு துறைகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு ஆய்வின் அடிப்படையில் தான் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
அந்தப் பகுதி தரைமட்டத்திலிருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும். இதனால் யானைகள் மேட்டில் ஏறி ரயில்பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. தற்போது சுரங்கப் பாதை அமைந்தால் அதன் வழியே ரயில்பாதையை கடக்க வேண்டிய தேவையில்லாமல் இரு புறமும் யானைகள் வந்து செல்ல முடியும். இதன் மூலம் விபத்துக்கள் குறையும்.
சுரங்கப் பாதை அமைகின்ற இடத்தில் இறப்புகள் நிகழ்ந்ததில்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யவில்லையென்றால் விபத்துக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏ வழித்தடத்தில் யானை விபத்து நடந்த இடங்களில் யானை கடந்து செல்ல சாய்தளம் அமைத்து தரப்பட்டுள்ளது. யானைகள் அவற்றை பயன்படுத்தி கடந்து செல்கின்றன” என்றார்.
தென்னக ரயில்வேயில் முதல் யானை சுரங்கப் பாதை
தெற்கு ரயில்வேயில் யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படும் முதல் சுரங்கப் பாதை இது தான் என்கிறார் தெற்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் குகநேசன். அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “சுரங்கப் பாதை பணிகளுக்காக ரூ.7.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடம் இங்கு அமைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு தான் அவ்விடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழித்தடங்களில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்க வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அவை முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. யானைகள் உயிரிழப்பை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்கு இந்த சுரங்கப் பாதையும் உதவும்” என்றார்.
யானைகளுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக வன ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வல்லுனர்களிடம் பேசியபோது நம்மி்டம் வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.
சுரங்கப் பாதை பலனளிக்குமா?
சுரங்கப் பாதை பலனளிப்பது சந்தேகம் தான் என்கிறார் வன ஆர்வலர் பாண்டியராஜா. மேலும் அவர், “விதிகள் எல்லாம் மனிதர்களுக்கு தான் தெரியும். யானைகளிடம் இது தான் உங்களுக்கான வழி இதில் செல்லுங்கள் எனக்கூறி யானைகளைப் பின்பற்ற வைக்க முடியுமா. கடினமான, அவசியமான வேலைகளுக்கு மாற்றாக எளிமையான வேலைகளை செய்வது தான் இது. சுரங்கப் பாதைகள் யானைகள் விபத்தை தடுக்கும் என எதிர்பார்ப்பது பேராசை தான்” என்றார்.
உயர்மட்ட ரயில் பாலம் அமைக்க வேண்டும்
சுரங்கப் பாதை திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் பாண்டியராஜாவிடம் மாற்று பரிந்துரைகள் தொடர்பான கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்தவர், “இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் தான் அனைத்து விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. எனவே இரவு நேரங்களில் ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும். அது சாத்தியமில்லையென்றால் இரவு நேரத்தில் ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும். கேரளா செல்லும் நீண்ட தூர ரயில்களை பொள்ளாச்சி வழியில் இயக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பரிந்துரைத்திருந்தனர்.
தெர்மல் கண்காணிப்பு கேமராக்களை வைத்து 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து லோகோ பைலட்டிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இறுதி தீர்வாக வனப்பகுதிக்குள் ரயில் செல்லும் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கலாம். வன விலங்குகள் தடையில்லாமல் கடந்து செல்வதற்கு அது உதவியாக இருக்கும். பல மாநிலங்களில் சாலைகள் இவ்வாறு அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன” என்றார்.
சுரங்கப் பாதை அமைப்பது மட்டும் போதாது என்கிறார் நீலகிரியைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் ராஜ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சுரங்கப் பாதை அமைத்துவிட்டால் யானை பயன்படுத்திவிடும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. இரு புறமும் வேலிகள் மற்றும் முறையான பாதுகாப்பு அமைத்து சுரங்கப் பாதை இணைப்பதற்கான வழித்தடத்தையும் அமைக்க வேண்டும். யானைகளை அதில் வழிநடத்தி பழக்கப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் இத்திட்டம் முழுமையான பலன் தரும்” என்றார்.
ஆனால் இந்தத் திட்டமே கண் துடைப்பு நடவடிக்கை என்கிறார் கோவையைச் சேர்ந்த வன ஆர்வலர் மேக் மோகன், “யானைகளின் வாழ்விடங்களை இடைமறித்து தான் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணர முடியும். யானைகள் இங்கு தான் கடக்க வேண்டும் என வரையறுக்க முடியாது. ஏ வழித்தடத்தில் மூன்று இடங்களில் யானைகளுக்காக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் அவற்றை பயன்படுத்தினாலும், அதை மட்டுமே பயன்படுத்துவதில்லை. யானைகள் மற்ற இடங்களிலும் ரயில் பாதையை கடக்கத் தான் செய்கின்றன.
ரயில்களுக்கு வேகம் நிர்ணயித்தாலும் அதை தொடர்ந்து கண்காணிப்பதற்கான வழிமுறை இல்லை. எனவே பொள்ளாச்சி வழியாக ரயில்களை இயக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இது வளர்ச்சிக்கும் உதவும். அதற்கான திட்டங்களை வகுத்து மேம்படுத்தலாம். எட்டிமடை - வாளையாறு இடையே உயர்மட்ட பாலமும் அமைக்கலாம். ஆனால் அதற்காக பல நூறு கோடிகள் செலவாகும். அதை செய்வதற்கான நிலையில் யாரும் இல்லை. நமக்கு மாற்று வழிகள் இல்லாமல் இல்லை. பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் ரயில்கள் இயக்குவதை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
ரயில்களின் வேக கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை
தமிழ்நாடு - கேரளா எல்லையில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க மதுக்கரை - கஞ்சிக்கோடு ரயில் நிலையம் இடையே இரவு நேரத்தில் ரயில்களை 30 கி.மீ வேகத்தில்தான் இயக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தென்னக ரயில்வே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் வேக கட்டுப்பாட்டு உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணிகள் ரயில்கள் இரு வழித்தடங்களிலும் பகல் நேரத்தில் 65 கி.மீ வேகத்திலும் இரவு நேரத்தில் 45 கி.மீ வேகத்திலும் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில்கள் ஏ வழித்தடத்தில் 25 கி.மீ வேகத்திலும் பி வழித்தடத்தில் 35 கி.மீ வேகத்திலும் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வன ஆர்வலர் மேக் மோகன், "வேக கட்டுப்பாடு என்பதே தற்காலிகத் தீர்வாகத்தான் அமையும். எட்டிமடை - வாளையார் ரயில் நிலையம் இடையே ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க முடியாது என ரயில்வே துறையினர் சொல்கிறார்கள்.
கடந்த காலத்தை விட ரயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் வேக கட்டுப்பாடு என்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சாத்தியம் இல்லாத தீர்வாகத்தான் முடியும்.
இதனால்தான் பொள்ளாச்சி வழியாக மாற்று வழித்தடத்தில் ரயில்களை இயக்க வேண்டும். பயண நேரம் அதிகரிக்கும் என்றால் நீண்ட தூர ரயில்களை முதலில் பொள்ளாச்சி வழியாக இயக்கலாம்.
மாறாக வாளையார் வழியாக உயர்மட்ட பாலம் அமைக்கலாம். ஆனால் அதற்கு ஆகும் செலவை முதலீடு செய்வது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. உச்சநீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இங்கு உள்ள நிலைமைகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது" என்றார்.
இது தொடர்பாக பாலக்காடு மண்டல ரயில்வே மேலாளர் த்ரிலோக் கோத்தாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "யானை விபத்துக்களை தடுக்கதான் தனி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி வழியாக ரயில்களை இயக்குவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. அந்த வழித்தடத்தில் 54 கி.மீ பயண தூரம் அதிகமாகும். மேலும் பொள்ளாச்சி வந்த பிறகு ரயில்கள் எதிர் திசையில் பயணிக்க எஞ்சினை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. இதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை வரும். இதனால் ஒட்டுமொத்தமாக ரயில்களின் பயண நேரம் இரண்டு மணி நேரம் வரை அதிகரிக்கும்.
அதே போல் உயர்மட்ட பாலம் அமைக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. தற்போது சாத்தியம் இல்லையென்றாலும் இந்த இரண்டு பரிந்துரைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்