You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வரலாறை திரிக்கும் கதைகளை நம்பாதீர்கள்" - வரலாற்றுக் காங்கிரஸ் அமர்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?
வரலாறை திரித்து கூறும் போக்கு "ஆபத்தானது" என்றும், "கற்பனை கதைகளை" வரலாறு எனக் கூறி சிலர் பரப்பும் போக்குக்கு செவி சாய்க்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாறு காங்கிரஸ் (ஐஹெச்சி) மாநாட்டின் 81வது ஆண்டு அமர்வில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மதசார்பற்ற அரசாங்கம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வரலாற்றைப் படிப்பது பயனுள்ள வாழ்க்கையை உறுதி செய்யுமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் வரலாறை அறிவது வெறும் பட்டம் மற்றும் சம்பளத்தைப் பெறுவது மட்டுமல்ல என்று முதல்வர் விளக்கினார்.
"ஒருவர் தன்னை சுயமாக அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் வரலாறைப் படிக்க வேண்டும். கடந்த கால வரலாறைப் படித்த ஒருவரால் நிகழ்காலத்தில் வரலாற்றை உருவாக்க முடியும், எதிர்காலத்தை கணிக்க முடியும். எனவே வரலாறு அறிவியல் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் கற்பனைக் கதைகளை வரலாறாக பேசுகிறார்கள். அவர்களை நம்பி எவரும் ஏமாந்து விடக் கூடாது. அந்தக் கூற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது," என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் அவர், ஒரு அறிவார்ந்த சமூகம் அத்தகைய கோட்பாடுகளை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
வரலாறை திரிப்பது ஏன் ஆபத்தானது?
இது குறித்து அந்த கூட்டத்தில் விவரித்த முதல்வர் ஸ்டாலின், "வரலாறைத் திரிப்பது நாட்டையே மூழ்கடிக்கும் அபாயம் கொண்டது," என்று தெரிவித்தார்.
"இன்று நாட்டை ஆக்கிரமித்துள்ள ஆபத்து வரலாறைத் திரித்துப் பேசுவதாகவும். கல்வி, மொழி, கலாசாரம், அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் அரசியலமைப்பின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்," என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
1994 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், மதசார்பற்றதாக இருப்பதற்கும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு அரசாங்கம் தேவை என்று குறிப்பிட்டார்.
இந்திய நிலப்பரப்பு ஒரு காலத்தில் (மதசார்பற்றதாக இருந்தது போல) நன்றாக இருந்தது. ஆனால், பின்னர் வந்த சில நபர்களால் வேறுபாடுகள் உருவாக்கப்பட்டன என்று முதல்வர் கூறினார்.
கீழடி, கொடுமணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை சுட்டிக்காட்டிப் பேசிய ஸ்டாலின், "அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே நமது வரலாற்று சிறப்புகளை பெருமையுடன் பேசுகிறோம்" என்று தெரிவித்தார்.
"உதாரணமாக, கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் நிலப்பரப்பில் நகரமயமாக்கலும் எழுத்தறிவும் நிலவியதாக கீழடி ஆய்வுகள் காட்டுகின்றன.
"அறிவியல் அடிப்படை வரலாறை மட்டுமே நம்புங்கள்"
2021 ஆம் ஆண்டு முதல் திமுக அரசால் மாநிலத்தில் ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய ஆய்வுகள், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.
இதுபோன்ற இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, அருங்காட்சியகங்கள் அமைப்பது போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
"வரலாறு என்பது மன்னர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வெற்றிகள் பற்றி மட்டுமே பேசும் ஆவணமாக இருக்கக்கூடாது. வரலாறு என்பது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிக்க வேண்டும். இதுவே எங்கள் கருத்து" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஆளுநர் பேச்சுக்கு எதிர்வினையா?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த சில மாதங்களாக இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, திருக்குறள் தொடர்பாக பல்வேறு தளங்களில் பங்கேற்கும்போது பேசி வருகிறார்.
குறிப்பாக திருக்குறள் பற்றியும் அதன் மொழி பெயர்ப்பு குறித்தும் பேசும்போது அவர் ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை சாடி வருகிறார்.
ஆங்கிலேயர்களால் கிறிஸ்துவத்தைப் பரப்ப இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட ஜி.யு. போப், திருக்குறளின் உள் அர்த்தத்தத்தை தமது வசதிக்கு ஏற்ப மொழிபெயர்த்து அதன் உண்மையான அர்த்தத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டதாக ஆளுநர் ரவி பேசினார்.
அவரது இந்த கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலரும் ஆளுநரின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆளுநரின் கருத்துக்கு ஆளும் முதல்வர் தரப்பில் எந்த பதிலும் வழங்கப்படாத நிலையில், வரலாற்று அறிஞர்கள் அங்கம் வகிக்கும் இந்திய வரலாற்று மாநாட்டில் வரலாற்றுத்திரிப்பை நம்ப வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது, ஆளுநருக்கு முதல்வர் கொடுத்த பதில் கருத்தாகவே கருதப்படுகிறது.
ஐஹெச்சி அமைப்பு ஏன் முக்கியமானது?
இந்திய வரலாற்று காங்கிரஸ் (ஐஹெச்சி) என்பது இந்தியாவில் உள்ள வரலாற்றாசிரியர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க தொழில்முறை அமைப்பாகும்.
இது கடந்த கால அறிவியல் ஆய்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன் புனேயில் 1935இல் நிறுவப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அதன் வருடாந்திர அமர்வுகளை ஐஹெச்சி நடத்துகிறது.
இந்த தளமானது, வரலாற்று ஒழுங்குமுறையின் சமீபத்திய போக்குகள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்ப்பதற்கும் விவாதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அமைப்பின் மாநாட்டை தமிழ்நாடு 25 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது நடத்துகிறது. இதற்கு முன்பு இந்த அமைப்பின் மாநாடு தமிழ்நாட்டில் 1996ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி இருந்தார்.
தமிழ்நாட்டில் ஐஹெச்சி மாநாடு இதற்கு முன்பு 1944, 1945, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பின் 81வது அமர்வு சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் டிசம்பர் 27 முதல் 29வரை நடத்தப்படுகிறது.
வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மூன்று நாட்கள் அமர்வில் கலந்துகொள்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்