You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்ரீநிவாச பத்ரிநாத்: சங்கர நேத்ராலயா நிறுவனர் மறைந்தாலும் தடைபடாத மருத்துவ சேவை
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனரும் மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் செங்கமேடு ஸ்ரீநிவாச பத்ரிநாத் (83), செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
தனது 79வது வயது வரை மருத்துவ பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். வயது மூப்பின் காரணமாக உடல்நல சிரமங்களை எதிர்கொண்டு வந்தவர், செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு, சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய கண் சிகிச்சை மையங்களில் ஒன்றாக உள்ள சங்கர நேத்ராலயா, ஒவ்வொரு நாளும் 1,200 நோயாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்குகிறது. சராசரியாக 100 அறுவை சிகிச்சைகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. 80 சதவீதம் இலவச சிகிச்சை, 20 சதவீதம் கட்டண சிகிச்சை என்ற விகிதத்தில் இயங்கும் இந்த மருத்துவமனைகளில் இதுவரை 18 லட்சம் கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டு முதல் ஊரக பகுதிகளிலும் தனது சேவையை விரிவாக்கிய சங்கர் நேத்ராலயா இந்தியாவின் 7 மாநிலங்களில் (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், அசாம், மேற்கு வங்கம், மராட்டியம், கேரளா) 92 மாவட்டங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கான கண் சிகிச்சை முகாம்களையும் சங்கர நேத்ராலயா முன்னெடுக்கிறது.
காஞ்சி சங்கரருடன் சந்திப்பு
1974ம் ஆண்டு, காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கண் சிகிச்சை வழங்கினார் மருத்துவர் பத்ரிநாத். அந்த சந்திப்புக்கு பின் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்ற உந்துதல் கிடைத்ததாக பலமுறை கூறியுள்ளார். அந்த நோக்கத்திலேயே 1978ம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் சங்கர நேத்ராலயா மருத்துவமனை இயங்கி வருகிறது. லாப நோக்கற்ற அமைப்பாகவே சங்கர நேத்ராலயா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கர நேத்ராலயா, மூன்று நோக்கங்களை வகுத்துக் கொண்டுள்ளது. அதன்படி குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை வழங்குதல், இந்தியாவில் கண் பார்வை இழப்பை எதிர்த்து போராட தேவையான கண் மருத்துவர்களை உருவாக்குவது, பயிற்றுவிப்பது மற்றும் இந்தியாவுக்கு பிரத்யேகமாக உள்ள கண் மருத்துவ சிக்கல்களை தீர்க்கும் வகையிலான ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது ஆகியவையே அந்த நோக்கங்களாகும்.
தனது நோக்கத்தை எட்டுவதற்காக தொடக்கத்தில் பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். குறிப்பாக, பாடகர் எம் எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவிற்காக இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகையில், மூன்று ஆயிரம் இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்தார்.
தரமான நவீன கண் அறுவை சிகிச்சை ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மறைந்த மூத்த வழக்கறிஞர் நானி அ பல்கிவாலா, தனது சொத்துகளை சங்கர நேத்ராலயாவுக்கு தானமாக வழங்கியுள்ளார். இவ்வாறு சங்கர நேத்ராலயாவின் சேவைகளுக்கு ஆதரவு அளித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக 2013ம் ஆண்டு எம் எஸ் சுப்புலட்சுமி விருதை நிறுவினார் மருத்துவர் பத்ரிநாத்.
ஆயுள் காப்பீட்டில் கல்வி
1940ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார் பத்ரிநாத். ஏழு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளை அவர் தான். அவரது தந்தை எஸ்.வி. ஸ்ரீநிவாச ராவ் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். அவர் மெட்ராஸ் மாகாண அரசின் பொது பணித்துறையில் பொறியியாளராக பணியாற்றினார். அவரது தாய் லட்சுமி தேவி ஆவார்.
சிறு வயதிலேயே உடல் நல சிக்கலை எதிர்கொண்ட பத்ரிநாத் ஏழு வயதில் தான் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளி மற்றும் மயிலாப்பூரில் உள்ள பி எஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 1955 மற்றும் 1957ம் ஆண்டுகளுக்கு இடையில், இண்டிர்மீடியேட் எனப்பட்ட படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தார்.
பதின்பருவத்திலேயே தனது பெற்றோர்களை இழந்த அவர், தந்தையின் மறைவால் கிடைத்த காப்பீட்டு நிதியைக் கொண்டே மருத்துவக் கல்வியை நிறைவு செய்தார். மருத்துவப் படிப்பை 1957ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று, கண் மருத்துவத்தில் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மாணவராக விளங்கினார்.
நாட்டுக்கு சேவையாற்றும் விருப்பம்
அமெரிக்காவில் உள்ள கிராஸ்லாண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் ப்ரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனை கல்லூரியில் தனது கண் மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். அவர் அமெரிக்காவில் இருந்த போது, குழந்தைகள் நலன் மற்றும் குருதியியல் மருத்துவரான வசந்தி அவர்களை 1976-ம் ஆண்டு அவரை மணம் முடித்தார்.
வெளிநாட்டில் படித்து அங்கேயே தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், 1970ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினார். முதலில் அவர் சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் (வி எச் எஸ்) மருத்துவமனையில் ஆலோசகராக பணியாற்றினார்.
அதன் பிறகு, எச்.எம். மருத்துவமனை மற்றும் விஜயா மருத்துவமனை ஆகியவற்றில் கண் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.
மருத்துவர் பத்ரிநாத்துக்கு இந்திய அரசு 1983ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. 1999ம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர் பி சி ராய் தேசிய விருதை 1991ம் ஆண்டு பெற்றார். 2004ம் ஆண்டு தாதாபாய் நௌரோஜி விருது பெற்றார். மேலும் இந்திய ஆயுதப் படைகளுக்கான கண் மருத்துவ ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
‘மறைவினால் பணிகள் நிற்கக் கூடாது’
தான் இறக்கும் போது, அந்த நாளில் தன் மருத்துவமனையில் யாரும் தனக்காக மருத்துவ சேவைகளை நிறுத்தக் கூடாது என்பது மருத்துவர் பத்ரிநாத்தின் விருப்பமாக இருந்தது. கைகளில் கருப்புப் பட்டை மட்டும் அணிந்து துக்கம் அனுசரிக்கலாம், ஆனால் மருத்துவமனை தொடர்ந்து இயங்க வேண்டும் என விரும்பினார்.
இந்த விருப்பத்தை அவரது குடும்பம் வலியுறுத்த, அவரது இறுதி சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்று முடிய, சங்கர நேத்ராலயாவில் மருத்துவ சேவை தடைபடாமல் வழக்கம் போல் தொடர்ந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)