You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை - என்ன காரணம்?
நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார்.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசியது என்ன?
மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார்.
மார்ச் 2022-ல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப்பையில் இருந்து ஒரு காகித் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார்.
இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்கு பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாக சொல்லவில்லை.
அதேசமயம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.
தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது.
பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார்.
இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை
இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023-ல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-ன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் எக்ஸ் பக்கத்திலும் இந்த தீர்ப்பு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து
"சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டு முறையும் இந்த வழக்கு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பபப்ட்டிருக்கிறது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது.
இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர். மேலும் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட எண்ணுகிறார்கள்" என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியுமா?
முன்னதாக, 2023 ஆகஸ்டில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)