You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவமனையில் இருந்த 4 மாதங்களில் படித்தது எப்படி? நாங்குநேரி மாணவர் சின்னத்துரை பேட்டி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னதுரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, "அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் சின்னதுரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர்."
இதைப் பார்த்த சின்னதுரையின் தங்கை, அதைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர் தற்போது அத்தனை தடைகளையும் கடந்து பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
அதுகுறித்துப் பேசியபோது, “உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு நான் மருத்துவமனையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோதும்கூட, எது நடந்தாலும் கல்வி கற்பதை மட்டும் எந்த நிலையிலும் விட்டுவிடக்கூடாது என்று நினைத்தேன். அந்த மன உறுதிதான் இன்று பனிரெண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண்களைக் கொடுத்திருக்கிறது," என நெகிழ்கிறார் சின்னதுரை.
“எனக்கு சிறு வயதில் இருந்தே நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அம்மாவும், உறவினர்களும் நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டே இருப்பார்கள். எனது குடும்பத்தில் நான்தான் முதல் ஆண் பிள்ளை என்பதால் எனக்கு குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
என் அம்மா சத்துணவு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். தங்கை பள்ளியில் படித்து வருகிறார். நான் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் போது ஆண்கள் பிரிவில் தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்று வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிஏ படித்து ஆடிட்டர் ஆவதுதான் என் கனவாக இருந்தது. அதற்காக கடும் முயற்சிகளை நான் மேற்கொண்டு வந்திருந்தேன். அப்போதுதான் அந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது," என்று கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவம் குறித்து நினைவுகூர்ந்தார்.
இந்த நான்கு மாதங்களும் தினமும் ஆசிரியர் மூலம் அவருக்கு இரண்டு மணிநேரம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும்கூட கல்வியைக் கைவிட வேண்டும் என்கின்ற எண்ணம் தனக்குத் துளியும் இல்லையென்று என்று அவர் கூறுகிறார்.
“சாதிரீதியாக என்மீது தாக்குதல் நடத்தப்பட்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும் என் பள்ளி ஆசிரியர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்," என்கிறார் அவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும்கூட தினமும் அங்கு வந்த ஆசிரியர்கள் தனக்குப் பாடங்களைக் கற்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் இருந்து மீண்டு வரவேண்டுமென்ற நம்பிக்கையை நல்கியதாகவும் சின்னதுரை நினைவுகூர்கிறார்.
"உடலில் எத்தனை வலிகள் ஏற்பட்டாலும் படிக்கின்ற படிப்பை மட்டும் கைவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலங்களில் நான் மருத்துவமனையில் இருந்து உதவியாளர் மூலம் தேர்வெழுதினேன்."
சிறு வயதிலிருந்தே சின்னதுரைக்கு கம்ப்யூட்டர் படிப்பின்மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்துள்ளது. இப்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் 94 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் சின்னதுரை. இவருக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. அதற்காகத் தன்னைத் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)