You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொளத்தூர் மணி புகார்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்று கூறி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்த புகாரை அளித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு என்ன? நீதிபதியின் தீர்ப்பைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை கோர முடியுமா? இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன? இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றனவா?
என்ன வழக்கு?
கரூர் மாவட்டம், நன்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவர் ஜீவ சமாதி அடைந்த நாளன்று (மே 18) நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானத்திற்குப் பிறகு வரும் எச்சில் இலைகளில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கத்திற்கு 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதன் அடிப்படையில், நெரூர் அக்ரஹாரத்தில் நடக்கும் இத்தகைய வழக்கத்திற்கும் 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக் கோரி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த மே 17ஆம் தேதியன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கினார். அப்போது, இந்த வழக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.
“இது தனக்கு ஆன்மிக பலத்தைத் தரும் என பக்தர்கள் நம்புகிறார்கள்" என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். “அது தனிப்பட்ட ஒருவரின் ஆன்மிகத் தேர்வு. பாலினம், பாலியல் தேர்வு ஆகியவற்றுடன் ஆன்மிகத் தேர்வும் ஒருவரின் தனியுரிமையில் உள்ளடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
“ஆன்மிகத்தை ஒருவர் எந்த வகையில் வெளிப்படுத்துகிறார் என்பது அவரவர் விருப்பம். எனினும், அது மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதிக்கக் கூடாது” எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இதனைத் தொடர்ந்துதான், தற்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்தத் தீர்ப்பின் மூலம் எச்சில் இலைகளில் உருளும் வழக்கத்தை நீதிபதி மீட்டெடுத்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜி.ஆர். சுவாமிநாதனின் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கைகளின் உண்மையான நோக்கத்துக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, "எதிர் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் அவர் வழங்கிய இத்தகைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்தது ஏன் என்பது குறித்து கொளத்தூர் மணி பிபிசி தமிழிடம் பேசியபோது, “அவருடைய தீர்ப்பில் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. தீர்ப்பு தவறாக இருக்கிறது,” என்றார்.
“இத்தகைய பழக்கங்கள் மதம் சார்ந்தவையாக இருந்தாலும் அவை மூட நம்பிக்கைகளில் இருந்து தோன்றியிருக்கலாம்" என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் கொளத்தூர் மணி, அதற்கு முரணான தீர்ப்பை நீதிபதி வழங்கியிருப்பதாக தாம் நம்புவதாக தெரிவித்தார்.
அவருடைய முந்தைய பல தீர்ப்புகளும் இதேபோன்று சர்ச்சைக்குரியதாக இருப்பதாக அவர் கூறுகிறார். “அவருடைய சொந்தக் கருத்துகள் தீர்ப்புகளில் பிரதிபலிக்கிறதோ என்று கூட நாங்கள் நினைக்கிறோம்” என்றார் அவர்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கையாண்ட விதம் ஆட்சேபனைக்குரியது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.
"இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு-25 ஒருவரின் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. அதேநேரம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51ஏ(ஹெச்)படி, ஒவ்வொருவரும் அறிவியல் ரீதியான மனநிலையை வளர்க்க வேண்டும் எனக் கூறுவதை அவர் எடுத்துக்காட்டுகிறார். தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருக்க வேண்டும், அதை தமிழக அரசு செய்யத் தவறி விட்டது. நேரம் கேட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் மேல்முறையீடு செய்திருக்கலாம்." என்று அவர் கூறினார்.
நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
நீதிபதிக்கு எதிரான புகாரின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, கொலீஜியத்திற்கு பரிந்துரைத்து பணியிட மாற்றம் செய்யலாமே தவிர, வேறு நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார் ஹரிபரந்தாமன்.
இதே கருத்தை மற்ற சட்ட நிபுணர்களும் எதிரொலித்தனர். இதுபோன்று நீதிபதி மீதே முன்பு புகார் எழுந்துள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் கேட்டோம். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.பி. பர்டிவாலா மீது எழுந்த குற்றச்சாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.பி. பர்டிவாலா, ஒரு வழக்கில், “இந்த நாட்டைச் சரியான திசையில் பயணிப்பதை அனுமதிக்காதது, ஒன்று இட ஒதுக்கீடு, மற்றொன்று ஊழல்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்று கூறி அவர் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாநிலங்களவை எம்.பி.க்கள் 50க்கும் மேற்பட்டோர் அப்போதைய குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியிடம் மனு அளித்தனர்.
அடுத்த சில நாட்களில் மாநில அரசாங்க விண்ணப்பத்தின் பேரில், நீதிபதி பர்டிவாலா தனது தீர்ப்பில் இருந்த குறிப்பிட்ட அந்த கருத்துகளை நீக்கினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2022ம் ஆண்டு மே மாதம் நீதிபதி பர்டிவாலா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், "ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரத்திலும் அதிகபட்சமாக இத்தகைய அரசியல் ரீதியான நடவடிக்கையை எம்.பிக்கள் மூலமாகக் கோரலாம்" என்றார்.
யார் இந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்?
கடந்த 1968ஆம் ஆண்டு பிறந்த ஜி.ஆர். சுவாமிநாதன், சென்னை திருவான்மியூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1990ஆம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்த அவர், 13 ஆண்டுகளாக சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிறுவப்பட்ட பின் அங்கு வழக்கறிஞர் பணி செய்தார்.
2014ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான இந்தியாவின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
ஜூன் 2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பேச்சுரிமை, சிறைவாசிகளின் உரிமைகள், விலங்கு நலம், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார். ஆறு ஆண்டுகளில் 52,094 தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)