You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறையா? - இன்றைய முக்கியச் செய்திகள்
இன்று (19/02/2025) இந்தியா மற்றும் இலங்கையின் நாளிதழ், இணையதளங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
2026-ம் ஆண்டு முதல், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரு முறை நடத்தவுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது என தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளின் தலைவர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் தலைவர் பங்கேற்றனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.
அப்போது, ஆண்டுதோறும் ஒரே ஒரு பொதுத் தேர்வு என்ற முறையை மாற்றவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. ஒரே தேர்வில் தாங்கள் சிறப்பாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்து, அதில் சிறந்த மதிப்பெண்கள் எந்த தேர்வில் பெற முடிகிறதோ, அந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையிலான நடைமுறை மாணவர்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தப்படுவதாக பேசப்பட்டது.
தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மனப்பாடம் செய்தலை தவிர்த்து, பாடங்களை புரிந்துக் கொண்டு படிப்பதற்கான சூழலை இது ஏற்படுத்தும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர். மன அழுத்தம் இல்லாத கற்றலுக்கு இந்த புதிய நடைமுறை பெரிதும் உதவும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறினார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 29 ஆயிரம் பேர் பதிவு
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெற 29 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கடந்த 2023-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி 2023-ம் ஆண்டுக்கு 1560 பேர் மட்டுமே உரிமம் பெற்றனர். அதனை தொடர்ந்து செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்து பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், சென்னையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்றது. இதனால் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்தது.
இந்நிலையில், இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநாகராட்சி தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி
மாநாகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 ஆயிரத்து 898 பேர் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 15 ஆயிரத்து 523 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதுவரை 8 ஆயிரத்து 725 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரத்து 650 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்கிறது அந்த செய்தி.
மாணவிகளுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் - அரசுப் பள்ளி உதவி தலைமையாசிரியர் கைது
மாணவிகளுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 58 வயதாகும் அரசுப் பள்ளி உதவி தலைமையாசிரியர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில், உதவி தலைமையாசிரியராக பணியாற்றிய 58 வயதான நபர், மாணவிகளிடம் தொடர்ந்து தவறான முறையில் நடந்து வந்துள்ளார். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து விரிவான விசாரணையை அதிகாரி மேற்கொண்டார். பெற்றோர் அளித்த புகார் உண்மையென்று தெரியவந்தது.
இதையடுத்து அரிமளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் அவரை செவ்வாய்கிழமை கைது செய்தனர் என்கிறது அந்த செய்தி.
பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கை வந்தடைந்தது விஜயபாகு கப்பல்
பாகிஸ்தான் கடற்படை நடத்திய பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் கப்பல் விஜயபாகு நாடு திரும்பியது என இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பலானது, குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுப்படி விஜயபாகு கப்பலை வரவேற்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பு, ஸ்தீரத்தன்மை மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பயங்கரவாதம் மற்றும் கடற்கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட்டாக பதிலளிக்கும் நோக்கத்துடன் "அமான்" பலதரப்பு பயிற்சி பாகிஸ்தான் கடற்படையால் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, 2025 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான கராச்சி மற்றும் அரபிக்கடலை மையமாக கொண்டு அமான்-2025 பலதரப்பு பயிற்சி நடைபெற்றது.
AMAN-2025 பலதரப்பு பயிற்சியானது Harbour phase மற்றும் Sea phase என இரண்டு கட்டங்களாக நடைபெற்றதுடன், இதில் கடல் பாதுகாப்பு பயிற்சிகள், மனிதாபிமான நிவாரணப் பயிற்சிகள், கடற்கொள்ளைகளுக்கு எதிராக பதிலளித்தல், போர் அமைப்புகளில் நகர்தல், துப்பாக்கி சூட்டு பயிற்சிகள் மற்றும் பல கடற்படை பயிற்சிகளுக்கு விஜயபாகு கப்பல் பங்கேற்றது என்கிறது அந்த செய்தி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)