ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் சிக்கிய சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் என்ன ஆனது?

காணொளிக் குறிப்பு, ஆந்திரா, தெலங்கானா வெள்ளம்: 25 பேர் உயிரிழப்பு; மின்சாரம் துண்டிப்பு
ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் சிக்கிய சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் என்ன ஆனது?

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் விஜயவாடா மற்றும் குண்டூர் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

ஆந்திராவின் இரண்டாவது பெயர நகரமாக விஜயவாடா உள்ளது. விஜயவாடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அரசு படகுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்து வருகிறது. ஆந்திராவின் பிற மாவட்டங்களான குண்டூர், பல்நாடு, பிரகாசம், நண்ட்யால், கோதாவரி மற்றும் அந்திராவின் வடக்கு கடற்கரை பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

விஜயவாடாவில் கிருஷ்ணா நதி மற்றும் புடமேரு நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கனமழைக்கு இரு மாநிலங்களில் இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் மஹபுபாபாத் மற்றும் கம்மம் பகுதிளை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நல்கோண்டா, சூர்யபெட், மஹபூப்நகர் மற்றும் கோத்தகுடம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் பல்வேறு அரசு அலுவலகங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார். கனமழை காரணமாக சுமார் 2 லட்சத்து எழுபதாயிரம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விஜயவாடாவில் மழை காரணமாக பல்வேறு இடங்களில் 24 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக 26 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இரு மாநிலங்களிலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ரயில்வே ட்ராக்குகள் பல அடித்துச் செல்லப்பட்டன.

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் ஜேசிபி மற்றும் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டனர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் சூழல் குறித்து கேட்டறிந்தனர். மேலும், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறன்று விஜயவாடா பிரிவை உள்ளடக்கிய தெற்கு மத்திய ரயில்வேயின் செகந்திராபாத் மண்டலம், 140 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் 97 ரயில்கள் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)