இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுத கொள்கையில் என்ன வேறுபாடு? - ஓர் வரலாற்றுப் பார்வை

காணொளிக் குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுத கொள்கையில் என்ன வேறுபாடு?
இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுத கொள்கையில் என்ன வேறுபாடு? - ஓர் வரலாற்றுப் பார்வை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் அல்லது அதன் சாத்தியக்கூறு ஏற்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது இரு நாடுகளின் அணு ஆயுதங்கள்தான்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இந்த ஆயுதங்கள் தொடர்பாக இரு நாடுகளின் கொள்கைகளும் வேறுபட்டவை.

பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

மறுபுறம், பதிலடி நடவடிக்கையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா எப்போதும் பேசி வருகிறது. இது இந்தியாவின் நிலையான கொள்கையாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையை 'அணு ஆயுத மிரட்டல்' என்று இந்தியா கூறுகிறது.

அணு ஆயுதங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ 1965-ம் ஆண்டில், "இந்தியா அணுகுண்டைத் தயாரித்தால், நாங்கள் புல் அல்லது இலைகளைத் தின்றாலும் அல்லது பசியுடன் இருந்தாலும் கூட எங்கள் சொந்த அணுகுண்டைத் தயாரிப்போம்" என்று கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1950களில், "நாங்கள் அணு ஆயுதங்களைக் கண்டித்தோம், அவற்றைத் தயாரிக்க மறுத்துவிட்டோம். ஆனால் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், எங்களை தற்காத்துக் கொள்ள எங்கள் அறிவியல் அறிவைப் பயன்படுத்துவோம்." என்று பேசினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 1970களில் இருந்து அணுசக்தியைப் பெற முயன்று வருகின்றன. இந்தியா 1974 இல் 'சிரிக்கும் புத்தர்' சோதனையை நடத்தி தன்னால் அணு ஆயுதங்களை பெற முடியும் என்று காட்டியது.

பின்னர், இந்தியா 1998 மே 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் 'ஆபரேஷன் சக்தி' மூலம் அணுகுண்டுகளை சோதித்தது.

சில நாட்களுக்குப் பிறகு, மே 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில், பாகிஸ்தான் 'சாகாய் -1' மற்றும் 'சாகாய் -2' சோதனைகளை நடத்தி தன்னிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை தெரிவித்தது.

அதாவது, இரு நாடுகளும் கடந்த 27 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்த காலக்கட்டத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இந்தியா தனது முதல் அணு ஆயுதக் கொள்கையை 1999 இல் உருவாக்கியது. இது முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

2011 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதை மீண்டும் வலியுறுத்தி, "இந்தியாவின் அணுசக்தி கொள்கை முதலில் பயன்படுத்தக்கூடாது மற்றும் அணுசக்தி தாக்குதல் ஏற்பட்டால் முழு சக்தியுடன் பதிலடி கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது."

அதே நேரத்தில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி 2019 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையில், "இந்தியாவின் அணுசக்தி கொள்கை தெளிவாக உள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவது இல்லை. ஆனால் அணு ஆயுதங்களால் நம்மைத் தாக்குபவர்கள் தப்ப முடியாது. நமது அணுசக்தி திறன் நமது இறையாண்மையை உறுதி செய்கிறது" என்றார்.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமைக்கு ஏற்ப இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார், "முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதிபூண்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது" என்று கூறினார்.

மறுபுறம், பாகிஸ்தானிடம் எழுத்துப்பூர்வமான, தெளிவான அணுசக்தி கொள்கை எதுவும் இல்லை. இந்தியாவின் 'பாரம்பரிய ராணுவ மேலாதிக்கத்தை' அல்லது வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்த விரும்புவதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்களில் நிபுணரும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான ராஜீவ் நயன், பாகிஸ்தானின் கொள்கையில் நிறைய தெளிவின்மை உள்ளது என்று கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு