இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள்

வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.

இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார்.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு