You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா அணுசக்தி நாடாக, சுதந்திரம் அடைந்த இரண்டே வாரங்களில் நேரு எடுத்த முக்கிய முடிவு
- எழுதியவர், ரேஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையான ஹோமி ஜஹாங்கீர் பாபாவுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் இடையிலான முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், இந்திரா காந்தி பம்பாயில் உள்ள ஹோமி பாபா அரங்கத்தின் திறப்பு விழாவில் ஆற்றிய உரையில், தனது தந்தையுடன் கப்பலில் பிரான்சின் மார்சே நகருக்குச் சென்றபோது 1938ஆம் ஆண்டில் பாபாவை சந்தித்ததாக நினைவுகூர்ந்தார்.
விஞ்ஞான அணுகுமுறையை ஆதரித்த உலகத் தலைவர்களில் நேருவும் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டே வாரங்களில், பாபா தலைமையில் அணுசக்தி ஆராய்ச்சிக் கழகத்தை (Board of Research on Atomic Energy) நேரு நிறுவினார் என்பது இதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
நேரு, பாபா இருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். "இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. காந்தி, இந்திரா காந்தி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிருஷ்ண மேனனுக்குப் பிறகு, நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் பாபாவை தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்," என அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் எழுதியிருக்கிறார்.
"பாபா எப்போதும் நேருவை 'பாய்' (சகோதரர்) என்று அழைப்பார். இந்திரா காந்தியும், தனது தந்தைக்கு பாபாவுடன் பேசுவதற்கு எப்போதும் நேரம் இருந்தது என்று நம்பினார். ஏனென்றால் பாபா முக்கியமான விஷயங்களை பற்றிப் பேசுவதோடு மட்டுமின்றி, அவருடன் பேசுவது நேருவுக்கு நல்ல உணர்வைக் கொடுத்தது. அரசியல் ஈடுபாட்டால் பூர்த்தி செய்ய முடியாத நேருவின் அறிவுப் பசியை பாபா பூர்த்தி செய்தார்," என சீனிவாசன் மேலும் கூறுகிறார்.
இருவரின் ஆளுமைகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கலாசாரங்களின் அற்புதமான இணக்கம் இருந்தது மற்றொரு காரணம். 1954 வாக்கில் அணுசக்தி ஆணையம் அரசின் ஒரு தனித் துறையாக மாறியது. பாபா அதன் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவரை அவரது பங்கு ஆலோசனை வழங்குவதாக மட்டுமே இருந்தது.
இதனுடன், அணுசக்தி ஆணையம் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் (Tata Institute of Fundamental Research) தலைவராகவும் பாபா பணியாற்றினார்.
நேரு மற்றும் பாபாவின் தலைமையில், 1955ஆம் ஆண்டில் ஆல்வேயில் (Alwaye) தோரியம் ஆலையும், பின்னர் டிராம்பேவில் (Trombay) முதல் அணு உலையும் செயல்படத் தொடங்கின.
புதிய இந்தியாவின் ஆலயங்களாக பார்க்கப்பட்ட பெரிய திட்டங்கள்
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், நேரு அறிவியல் தொடர்பான நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டத் தொடங்கினார். இன்று நாம் காணும் ஐஐடி, ஐஐஎம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), எய்ம்ஸ் (AIIMS) போன்ற நிறுவனங்களை நேரு, இந்தியாவின் பொருளாதார வளங்கள் மிகவும் குறைவாக இருந்தபோது தொடங்கினார்.
முதல் ஐஐடி 1952இல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் நிறுவப்பட்டது. சட்லஜ் ஆற்றில் கட்டப்பட்ட பக்ரா அணைக்கு அவர் 'நவீன இந்தியாவின் புதிய ஆலயம்' என்று பெயரிட்டார். அவர் ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்றார்.
பியூஷ் பபேலே தனது 'நேரு கட்டுக்கதை மற்றும் உண்மை' ('Nehru Myth and Truth') என்ற புத்தகத்தில் "நேருவுக்கு நாட்டின் வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும், கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும், நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், கலை மற்றும் கலாசாரத்தை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும், வெளிநாட்டு விருந்தினர்களுக்காக ஹோட்டல்கள் கட்ட வேண்டும், சண்டிகர் போன்ற நகரங்களை உருவாக்க வேண்டும். அவருக்குச் செய்ய வேண்டிய வேலை எதுதான் இல்லை? அதிகாலை ஐந்து மணி முதல் இரவு ஒரு மணி வரை உழைத்த நேருவுடைய லட்சியங்களின் எல்லை விசாலமாக இருந்தது. அவர் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்தார்," என எழுதியிருக்கிறார்.
ராஜேந்திர பிரசாத் வழங்கிய பாரத ரத்னா
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில், நேரு தனது கடுமையான விமர்சகர்களான பீம்ராவ் அம்பேத்கர், ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கு இடமளித்தார். இது பிந்தைய எந்த பிரதமரும் தைரியத்துடன் செய்ய முயலாத ஓர் அற்புதமான சோதனை.
நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பி.ஆர். அம்பேத்கர், "அவர் காங்கிரஸை ஒருவித தர்மசாலையாக மாற்றிவிட்டார், அதில் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அதில் முட்டாள்களுக்கும் இடமுண்டு, தந்திரசாலிகளுக்கும் இடமுண்டு. எதிரிகளும் வரலாம், நண்பர்களும் வரலாம். கம்யூனிஸ்டுகளுக்கும் அதன் கதவுகள் திறந்தே உள்ளன. மதச்சார்பற்றவர்களுக்கும் திறந்தே உள்ளன. முதலாளிகளுக்கும் காங்கிரஸில் இடமுண்டு, அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடமுண்டு" என்று விமர்சித்தார்.
1955இல் ஜவஹர்லால் நேரு ஐரோப்பா பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்த கௌரவத்தை அவரது அரசாங்கமே அவருக்கு வழங்கியது என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.
ராஷித் கித்வாய் தனது பிரைம் மினிஸ்டர் ஆஃப் இண்டியா, ஸ்டேட் ஆஃப் தி நேஷன் ('Prime Minister of India, State of the Nation') என்ற நூலில், "அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு பிரதமர் நேருவுடன் பல பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், பிரசாத் நேருவுக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
அவர் 'நான் எனது பிரதமரின் பரிந்துரை இல்லாமலும், அவரிடம் எந்த ஆலோசனையும் இல்லாமலும் இந்த முடிவை எனது சொந்த விவேகத்துடன் எடுத்துள்ளேன். அதனால், இது அரசியலமைப்பிற்கு முரணானது என்று விமர்சிக்கப்படலாம். ஆனால் எனது இந்த முடிவு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்படும் என்று எனக்குத் தெரியும்' என்று கூறினார்," எனக் குறிப்பிடுகிறார்.
நேருவின் கடின உழைப்பு மற்றும் ஆளுமை
நேரு மிகவும் கடின உழைப்பாளி. அவர் விடியற்காலையில் எழுந்திருப்பார், ஒரு நாளைக்கு 16-17 மணிநேரம் வேலை செய்வார். இந்த நேரத்தில், அவர் நேர்காணல்கள் வழங்குவது, கூட்டங்களில் பங்கேற்பது, அதிகாரிகளை, வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பது மற்றும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பது போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்குவார். தினமும் காலையில் யோகா செய்வது மற்றும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை சிரசாசனா (தலைகீழாக நிற்பது) செய்வது அவரது தினசரி வழக்கத்தில் இருந்தது. அவருக்கு நீச்சல் மற்றும் குதிரை சவாரியும் மிகப் பிடிக்கும்.
அவரது முதல் தலைமைத் தனிச் செயலாளர் எச்.வி.ஆர். ஐயங்கார் எழுதியதாவது, "ஆகஸ்ட் 1947இல் பஞ்சாபின் கலவரப் பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் நள்ளிரவில் டெல்லி திரும்பினோம். எங்கள் அடுத்த நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 6 மணிக்கு இருந்தது. உடல் சோர்வு காரணமாக நான் உடனடியாக தூங்கச் சென்றுவிட்டேன்.
விமான நிலையம் செல்வதற்காக, நான் பிரதமரின் இல்லத்திற்கு வந்தபோது, அவரது பி.ஏ. (தனிச் செயலாளர்), அனைவரும் தூங்கச் சென்ற நேரத்தில் நேரு எழுதி வைத்த கடிதங்கள், தந்திகள் மற்றும் அறிக்கைகளைக் காட்டினார். பிரதமர் அன்றிரவு இரண்டு மணிக்கு தூங்கச் சென்று, அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பத் தயாராக இருந்தார்."
நேருவின் நெருங்கிய நண்பர் சையத் மஹ்மூத் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, அவரது 'உயர் வகுப்பு ஆங்கிலேயர்' போன்ற நடத்தை அவரைக் கவர்ந்தது. ஆனால் அவரது அன்பும் விருந்தோம்பலும் அவரை முற்றிலும் இந்தியராக மாற்றியது.
"நான் ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம் என்னுடன் ஒரு பணியாளரை அழைத்துச் செல்வேன். ஏனென்றால் ரயிலின் படுக்கையில் என் படுக்கையை விரிக்கவும் மூடவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஜவஹர்லாலுடன் ரயிலில் பயணம் செய்த போதெல்லாம், எனது மூட்டை முடிச்சுகளைத் திறக்கும் மற்றும் மூடும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்," என சையத் மஹ்மூத் எழுதினார்.
அதிகாரிகளின் வேலைகளைச் செய்த நேரு
"தூங்குவதற்கு முன் 15-20 நிமிடங்களை அவர் புத்தகங்கள் படிப்பதில் செலவிடுவார். அவருக்குப் பிடித்த புத்தகங்கள் அரசியல், கவிதை, தத்துவம் மற்றும் நவீன அறிவியல் பற்றியவையாகும். பிரதமராக, கோப்புகளில் அவரது குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன. அவர் விரைவில் கோப்புகளை முடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது மேசையில் கோப்புகள் அதிக நாட்கள் இருக்காது.
நேரு மிகவும் ஒழுங்கமைந்த மற்றும் சுத்தமான நபராக இருந்தார். சாய்ந்திருக்கும் படத்தை நேராக்குவது, நண்பரின் வீட்டில் மேசையில் படிந்த தூசியைத் தனது கைகளால் சுத்தம் செய்வது மற்றும் காகிதங்கள், புத்தகங்களை நேர்த்தியாக வைப்பது அவரது பழக்கங்களில் அடங்கும்," என நேருவின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல பத்திரிகையாளர் ஃபிராங்க் மோரேஸ் எழுதியுள்ளார்.
நேருவுடைய ஆளுமையின் மிக மோசமான எதிர்மறையான அம்சம் என்னவென்றால், அவர் நாட்டின் நிர்வாகத்தை நுண் மேலாண்மை செய்ய முயன்றார். ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையற்ற வேலைகளில் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
சசி தரூர் தனது 'நேரு, இந்தியாவின் கண்டுபிடிப்பு' என்ற வாழ்க்கை வரலாற்றில், "நேரு தனது குடிமைப் பணியாளர்களின் வேலையைத் தானே செய்ய விரும்பினார். ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு நாட்டின் தலைவர் தானே பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நேரு அவ்வாறு செய்வதில் திருப்தி அடைந்தார். அவர் தனது அதிகாரிகளுடன் உலகின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பேசுவதை விரும்பினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு ஆங்கில அதிகாரி, 'நான் நேருவை சந்திக்கும் போதெல்லாம், அவர் என்னுடன் உலக பிரச்னைகள் பற்றிப் பேசுவார்' என்று கூறினார். இவற்றுக்கெல்லாம் அவரிடம் நேரம் இருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது" என எழுதியுள்ளார்.
நேருவின் தாராள மனப்பான்மை மற்றும் கண்ணியம்
கானாவை சேர்ந்த தலைவர் க்வாமே என் குரூமா குளிர்காலத்தில் இந்தியாவுக்கு பயணம் வந்தபோது, வட இந்தியாவில் ரயிலில் பயணிக்க முடிவு செய்தார். க்வாமே செல்லவிருந்த ரயில் புறப்பட இருந்தபோது, சற்று தளர்வான ஓவர்கோட் அணிந்த நேரு திடீரென டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தார்.
"இந்த கோட் எனக்குப் பெரியதாக உள்ளது. ஆனால் இது உங்களுக்குச் சரியாகப் பொருந்தும். நீங்கள் அதைப் போட்டுக் கொள்ளுங்கள். இது உங்களை குளிரில் இருந்து காப்பாற்றும்" என்று நேரு என் குரூமாவிடம் கூறினார். க்வாமே கோட்டை போடும்போதே ரயில் புறப்பட்டது.
"நான் ஓவர்கோட் பைகளில் கையை வைத்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கோட்டின் ஒரு பையில் கம்பளி மஃப்லரும் மற்றொன்றில் வெப்பமான கையுறைகளும் வைக்கப்பட்டிருந்தன," என்று பின்னர் என் குரூமா எழுதினார்.
நேருவின் இந்த வகையான கண்ணியம் முக்கியஸ்தர்களுடன் நின்றுவிடவில்லை.
"ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது அவரது சுருக்கெழுத்தாளரின் சூட்கேஸ் விமானத்துடன் ஸ்ரீநகரை அடையவில்லை. அவர் ஒரு பருத்தி சட்டையை மட்டுமே அணிந்திருந்தார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். நேரு உடனடியாக அவருக்கு ஒரு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட் வழங்கப்படுவதை உறுதி செய்தார். அவர் சிறையில் இருந்தபோது கூட தனது சகாக்களின் பிறந்தநாளை மறக்கவில்லை. அங்கிருந்து அவர்களுக்கு வாழ்த்துக் கடிதங்களை அனுப்பினார்," என சசி தரூர் கூறுகிறார்.
"மக்களை அடையாளம் காண்பதில் தவறு"
மக்களைச் சரியாக அடையாளம் காண்பதில் நேரு தவறு செய்தார் என்று அவரது விமர்சகர்கள் கூறுவார்கள். விமர்சகர்கள் மட்டுமல்ல, அவரது நண்பர் ராஜ்குமாரி அம்ரித் கௌர், "மக்களின் குணாதிசயங்களை அடையாளம் காணும் அவரது திறன் துல்லியமாக இல்லை. அவர் முகஸ்துதிக்கு இடமளித்தார், இதன் காரணமாக அவரால் கடுமையான விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது மக்களை அடையாளம் காணும் அவரது திறனைப் பாதித்தது. நண்பர்கள் மீதான விசுவாசத்தின் காரணமாக அவர்களின் குறைகளை அவர் புறக்கணிக்கிறார். ஒரு தலைவராக அவரால் இரக்கமற்றவராக இருக்க முடியவில்லை. இது அவரது தலைமைப் பண்பை பலவீனப்படுத்துகிறது" என எழுதியுள்ளார்.
உடல் ரீதியான வலி மற்றும் துன்பத்தைத் தாங்கும் துணிச்சலும் வலிமையும் உள்ளவர்களை நேரு விரும்பினார். செப்டம்பர் 12, 1955 அன்று, கஜுராஹோவில் காரில் இருந்து இறங்கும்போது அவரது இரண்டு விரல்கள் கார் கதவில் மாட்டிக் கொண்டன. அவர் காயமடைந்த விரல்களுக்கு கட்டுப் போட்டுக்கொண்டு, தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அலகாபாத் திரும்பினார்.
பி.டி. டாண்டன் தனது 'மறக்க முடியாத நேரு' என்ற புத்தகத்தில் எழுதுகையில், "அன்று நேரு எல்லோரையும் வாழ்த்த தனது இடது கையைப் பயன்படுத்தினார். அவரது விரல்களில் அதிக வலி இருந்தது. ஆடை அணிவது, சவரம் செய்வது, சாப்பிடுவது என பல வேலைகளைச் செய்வதில் அவருக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனால் அவர் அதைப் பற்றி எந்த புகாரும் கூறவில்லை. அவர் இடது கையால் தேநீர் கோப்பையைப் பிடித்திருந்த போது யாரோ ஒருவர், 'உங்கள் விரல்கள் இப்போது எப்படி இருக்கின்றன?' என்று கேட்டார். அதற்கு நேரு, 'கவலைப்பட ஒன்றுமில்லை. விரைவில் சரியாகிவிடும்," என பதிலளித்தார்.
நேருவின் கோபம்
நேருவின் நடத்தை உயர்ந்த கண்ணியத்துடன் இருந்தது. அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் தனது எதிரிகளுடன் கண்ணியத்துடன் நடந்துகொள்வதை மறக்கவில்லை.
கடந்த 1942ஆம் ஆண்டில், ராஜாஜியால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நேருவுக்கு அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் நாட்டில் ஒரு பெரிய பிரிவினரிடையே செல்வாக்கை இழந்தார்.
ஏப்ரல் 1942இல், அலகாபாத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க ராஜாஜி அங்கு சென்றார். இந்து மகாசபையின் சில ஆதரவாளர்கள் கருப்புக் கொடிகளுடன் ரயில் நிலையத்தில் கூடினர்.
"மிகவும் பிஸியாக இருந்த போதிலும், ராஜாஜியை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் காரில் நேரு ஏறினார். அவர், 'அலகாபாத்தில் ராஜாஜிக்கு யார் கருப்புக் கொடி காட்டுகிறார்கள் என்று பார்ப்போம்' எனக் கூறினார். கருப்புக் கொடிகளை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நேரு பார்த்தவுடன், அவர் விரைந்து சென்று அவர்களின் கைகளில் இருந்து கருப்புக் கொடிகளைப் பிடுங்கினார். பின்னர் அதே கம்புகளைக் கொண்டு சிலரை விரட்டினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர் நேருவின் முன் வந்தபோது, அவரிடம் கோபமாக, 'அலகாபாத்தில் என் விருந்தினரை அவமதிக்கும் தைரியம் உனக்கு எப்படி வந்தது?' என்று கத்தினார். பதிலுக்கு இந்து மகாசபைத் தலைவர் ஏதோ பேசியபோது, அங்கிருந்த கூலித் தொழிலாளர்கள், நேருவை அவர்கள் அவமதிப்பதாக நினைத்தார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் நேரு மிகவும் வருத்தமடைந்தார், அவர் தன் கைகளால் ஒரு கேடயம் போல எதிரணித் தலைவரைக் காப்பாற்ற முயன்றார்," என்று பி.டி. டாண்டன் எழுதியுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பில் நம்பிக்கை இல்லை
நேருவுக்கு சாதாரண உணவு பிடிக்கும். ஜூன் 18, 1956 அன்று அவரது உணவு குறித்து ஒரு அரசுக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், 'பிரதமர் தனது உணவுக்கு எந்தவொரு சிறப்பு அல்லது தனி ஏற்பாடும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துகிறார். அவர் எங்கு இருந்தாலும் அங்குள்ள சாதாரண உணவை எடுத்துக்கொள்ள விரும்புகிறார். அவருக்கு மசாலா மற்றும் காரம் சாப்பிடும் பழக்கம் இல்லை. அவர் அசைவம் சாப்பிடுகிறார், ஆனால் பொதுவாக அவருக்கு சைவ உணவுதான் பிடிக்கும். காலையில் அவர் காபி மற்றும் பிற்பகலில் சர்க்கரை இல்லாத ஒரு கப் தேநீர் எடுத்துக் கொள்கிறார்' என்று எழுதப்பட்டிருந்தது.
காந்திஜி கொல்லப்பட்ட பிறகும், நேரு தனது பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. அவரது காருக்கு முன்னால் பாதுகாவலர்களின் கார்கள் அணிவகுத்துச் செல்லாமல், ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்வது வழக்கம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு