உலகக்கோப்பை: இலங்கையை கலங்கடித்த தென் ஆப்ரிக்காவின் 'பேஸ் பால்' ஆட்டமுறை - புதிய சாதனை என்ன?

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகக் கோப்பைத் தொடரில் பல சாதனைகளுடன் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்திலேயே பிரமாண்ட வெற்றியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்க அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் சேர்த்தது. 429 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்கள் சேர்த்து 102ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.

டீ காக் முதல் சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னில் ஆட்டமிழந்தபின் 2வது விக்கெட்டுக்கு குயின்டன் டீ காக், டூசென் ஜோடி மிகப்பெரிய அடித்தளம் அமைத்தனர். இருவரையும் பிரிக்க இலங்கை அணி கேப்டன் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பயனில்லை.

டீ காக்கிற்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை ஒரு சதம்கூட உலகக் கோப்பையில் அடிக்காமல் இருந்தநிலையில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 100 ரன்னில் டீ காக் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 204 ரன்கள் சேர்த்தனர்.

“மாமனிதர்” மார்க்ரம்

அடுத்து வந்த மார்க்ரம், டூசென்னுடன் சேர்ந்தார். தொடக்கத்தில் மார்க்ரம் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கி பின்னர் தனது பேட்டிங்கை டாப் கியருக்கு மாற்றினார். டூசென்னும் சதம் அடித்த நிலையில்(108) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

34 பந்துகளில் மார்க்ரம் அரைசதம் அடித்திருந்தார். ஆனால், அடுத்த 15 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்து மார்க்ரம் வரலாறு படைத்தார். பதீரணா வீசிய ஒவரில் மட்டும் 26 ரன்களை மார்க்ரம் சேர்த்ததுதான் திருப்புமுனையாக மாறியது.

சாதனை நாயகன் மார்க்ரம்

2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து பேட்டர் ஓபிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே குறைந்தபந்தில் சதம் அடித்த சாதனையாக 12 ஆண்டுகள் இருந்தது. ஆனால், அந்த சாதனையை மார்க்ரம் தகர்த்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடரில் குறைந்தபந்துகளில் சதம் அடித்த 3வது தென் ஆப்பிரிக்க பேட்டர் என்ற பெருமையையும் மார்க்ரம் பெற்றார். அதன்பின் களமிறங்கிய கிளாசன்(32), மில்லர்(39), ஜான்சன்(12) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பந்துவீச்சாளர்கள் பாவம்

இலங்கை அணித் தரப்பில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் பந்துகளும் வெளுத்து எறியப்பட்டன. பதிரணா 10 ஓவர்களில் 95 ரன்கள், ரஜிதா 90 ரன்கள், மதுசங்கா 85, வெல்லகலே 81 ரன்களை வாரி வழங்கினர். ஒருநாள் போட்டியில் ஒரு அணியில் 4 பந்துவீச்சாளர்கள் சராசரியாக 80 ரன்களுக்கு மேல் வாரிக்கொடுப்பது 2வது முறையாகும்.

அதிலும் குறிப்பாக அனுபவம் இல்லாத, இளம் வீரர்களை வைத்துக்கொண்டு களமிறங்கிய இலங்கை அணிக்கு இதுபோன்ற மோசமான பந்துவீச்சு என்பது பந்துவீச்சாளர்களின் மனவலிமையைக் குலைத்துவிடும். குறிப்பாக பதீரணா போன்ற இளம் பந்துவீச்சாளர்கள் நிலைமை பரிதாபமாகும்.

பேட்டிங்கில் இலங்கை பதிலடி

429 ரன்களை சேஸிங் செய்யும் நோக்கில் இலங்கை அணி களமிறங்கியது. நிசாங்கா, பெரேரா விரைவாகவே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு, மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளேயில் இலங்கை 94 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது.

தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சை மெண்டிஸ் வெளுத்து வாங்கி, சிக்ஸர்களாகவும், பவுண்டரிககளாகவும் பறக்கவிட்டார். 11.4 ஓவர்களில் இலங்கை 100 ரன்களை எட்டியது. 25 பந்துகளில் அரைசதம் அடித்த மெண்டிஸ், சிறந்த கேமியோ ஆடி, 42 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும்.

சரியான ஒத்துழைப்பு இல்லை

இலங்கை அணியும் தங்களால் முடிந்த அளவு சளைக்காமல் ரன்களைச் சேர்த்தது, 200 ரன்களை 28.4 ஓவர்களில் எட்டியது. 40.6 ஓவர்களில் 300 ரன்களைத் தொட்டது. இடைப்பட்ட ஓவர்களில் இலங்கை அணியின் ரன்குவிப்பு வேகம் குறைந்ததுவிட்டது.

அசலங்கா 79 ரன்களில் ஆட்டமிழந்தபின் ரன்குவிப்பு வேகம் இலங்கையிடம் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் டி சில்வா, வெல்லகலே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இலங்கைக்கு நெருக்கடி அளி்த்தது. கேப்டன் ஷனகா 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரஜிதா 33 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இலங்கை அணி 326 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஜான்சன், ரபாடா,மகராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், கோட்ஸீ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இது சரியான கிரிக்கெட்ஆட்டம் என்று கூற இயலாது, ஆனால் , சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது, இலங்கை அண பதிலடிகொடுக்க வாய்ப்புக்கிடைத்தாலும், அதற்கான தருணத்தை உருவாக்கத் தவறியது, முக்கிய வீரர்கள் ஒத்துழைக்கவில்லை.

பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளை அமைத்து, ஐசிசி விதிகளிலும் கட்டுப்பாடுகளைப் புகுத்தி, பந்துவீச்சாளர்களை நிராயுதபாணிகளாக விளையாட வைப்பது சமநிலையான ஆட்டம் அல்ல. இது முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் கொண்ட போட்டியாகவே இருந்தது.

754 ரன்கள், 74 பவுண்டரி, 31 சிக்ஸர்

ஒட்டுமொத்தமாக 94.5 ஓவர்கள் இன்று வீசப்பட்டநிலையில் 754 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இரு அணிகளும் சேர்த்து 74 பவுண்டரிகள், 31 சிக்ஸர்கள் அடங்கும்.

இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சேர்த்த 428 ரன்கள்தான் உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஓர் அணியின் ஸ்கோராகும். இதற்கு முன் 2015ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் சேர்த்திருந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

இதுவரை 8 முறை தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டிகளி்ல் 400 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. இதில் 3 முறை உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் தென் ஆப்பிரிக்கா குவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்கள் குயின்டன் டீ காக்(100), வேன் டெர் டூசென்(108), மார்க்ரம்(54 பந்துகளில் 106) என 3 பேர் சதம் அடித்து இமாலய ஸ்கோர் உருவாகக் காரணமாகினர். இதுபோன்ற இமாலய ஸ்கோர் சேர்த்ததன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றிப்புள்ளிகளும் கிடைத்து, நிகர ரன்ரேட் நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக 2.040 ஆக உயர்ந்துவிட்டது.

நினைத்தது நடக்கவில்லை..

தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் சேர்த்தும், எதிர்பார்த்த பிரமாண்ட வெற்றியைப் பெறவில்லை. இலங்கை அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற அதன் திட்டம் தோல்வி அடைந்தது. ஷனகா, ரஜிதா, அசலங்கா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் திட்டத்தை உடைத்தெறிந்தனர். இலங்கை அணியின் கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களை விலை கொடுக்க இருந்தது. இலங்கையை வீழ்த்தி மிகப்பெரிய அளவில் நிகர ரன்ரேட்டை உயர்த்த திட்டமிட்ட தென் ஆப்பிரிக்க கனவு கலைந்தது.

இதுதான் உலகக் கோப்பையில் “டிரண்ட்”

பொதுவாக இதுபோன்ற ராட்சதத்தனமான ஸ்கோரை முதலில் பேட் செய்யும் அணி அடித்துவிட்டாலே, சேஸிங் செய்யும் அணியின் மன வலிமையின் ஆனிவேரை அசைத்துப் பார்த்துவிடும். ஒருவேளை எதிரணி பேட்டர்கள் “துணிந்தபின் மனமே” என்ற ரீதியில் சேஸிங் செய்து வென்றால்தான் சாத்தியம் இல்லாவிட்டால், தோல்வி உறுதி என்று முணுமுணுத்துக்கொண்டே களத்தில் இறங்க வேண்டியதுதான்.

50 ஓவர்கள் நிலைத்து பேட் செய்து நிகர ரன்ரேட்டை மட்டும் சேஸிங் செய்யும் அணி சரியவிடாமல் காப்பாற்ற முடியும். அந்த நிலைதான் இலங்கை அணிக்கு இன்றைய ஆட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பல அணிகள் ‘ஆக்ரோஷமான பேட்டிங்’ (Aggressive batting) உத்தியை கையில் எடுக்கும் என்று பிபிசி செய்திகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. கடந்த 1987ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் பேட்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்த, “பேஸ்பால்” ஆட்டமுறை அன்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் இதில் இப்படியா முரட்டுத்தனமாக ஷாட்களை ஆடுவது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

“பேஸ் பால்” ஆட்ட முறை

ஆனால், ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்குப்பின், “பேஸ் பால்” ஆட்ட முறையைத் தான் இன்று அனைத்து அணிகளும் கையில் எடுத்து எதிரணிகளை கலங்கடித்து வருகின்றன. கடந்த 1996ம் ஆண்டு ஜெயசூர்யா, கலுவிதரணாவில் மீள் உருவாக்கம் பெற்ற பேஸ்பால் ஆட்டமுறை அதன்பின் ஒவ்வொரு அணியிலும் சில முக்கிய வீரர்கள் மட்டுமே கையில் எடுத்தனர்.

ஆனால், இன்றைய கிரிக்கெட்டில் ஆடுகளம் பேட்டர்களுக்காக சாதகமாக அமைக்கப்படுவதால், ஒர் அணியில் உள்ள 11 வீரர்களுமே ஏன் பேஸ்பால் ஆட்டமுறையை செயல்படுத்தக்கூடாது என்ற ரீதியில் விளையாடுகிறார்கள்.

இதைத்தான் இந்தக் உலகக்கோப்பையின் தொடக்கத்தில் இருந்து பார்த்து வருகிறோம். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அடித்த 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை 36 ஓவர்களில் நியூசிலாந்து சேஸிங் செய்துமிரட்டல் விடுத்தது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் அணி, விக்கெட்டுகளை இழந்தாலும் கூட 280 ரன்களை தொட்டு வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் அனாசயமாக தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணியான இலங்கை பேட்டர்களை கலங்கடித்து, அவர்களின் மனவலிமையை சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)