2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள்

    • எழுதியவர், கெல்லி குரோவியர்
    • பதவி, பிபிசிக்காக

2022ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்தாண்டு உலகையே உலுக்கிய 14 புகைப்படங்களை கெல்லி குரோவியர் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளார். பெட்ரோல் குண்டுகளை வைத்து யுக்ரேன் படையினர் சதுரங்கம் விளையாடுவது, ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான இரான் பெண்களின் போராட்டம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

சிலியின் இகிகேவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம், ஜனவரி 2022

நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நாற்காலியில் வண்ணக் குடை ஒன்றை பிடித்துக்கொண்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது அருகில் எரிந்துகொண்டிருக்கும் டயர்களிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. பொலிவியா எல்லைக்கு அருகில் வடக்கு சிலியில் அமைந்துள்ள இகிகேயில் சட்ட விரோத குடியேற்றத்திற்கு எதிராக ஒரு குழுவினரின் போராட்டங்களுக்கு மத்தியில், அசைக்க முடியாத அமைதியின் உதாரணமாக இவர் இருக்கிறார். 

துருக்கியின் இஸ்தான்புல்லில் இரான் பெண்களுக்கு ஆதரவாக போராட்டம், செப்டம்பர் 2022

இரானில் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாசா அமினி என்ற 22 வயது பெண் செப்டம்பர் 16 அன்று போலீஸ் காவலில் உயிரிழந்தார். போலீஸ் காவலில் இருந்தபோது மாசா அமினி உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதால் கோமா நிலைக்கு சென்றதாக நேரடி சாட்சியங்கள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து இரானில் பெரும்பாலான பெண்கள் தங்கள் முடியை வெட்டி இரான் அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். படத்தில் இருப்பவர் துருக்கியில் வாழ்ந்துவரும் இரான் பெண் நசிபே சம்சேய். இரானில் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இஸ்தான்புல்லில் உள்ள இரான் தூதரகம் முன்பு தன் முடியை வெட்டி எதிர்ப்பைப் பதிவு செய்த இந்த புகைப்படம் அச்சமயத்தில் வைரலானது. 

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த கரீனா நெபுலா புகைப்படம், ஜூலை 2022

ஜூலை 2022 அன்று ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த கரீனா நெபுலாவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. கரீனா நெபுலா என்று அழைக்கப்படும் விண்முகில்கள், தூசியும், வாயுக்களும் அடங்கிய மேகக்கூட்டம் போன்ற பகுதி ஆகும். இந்த புகைப்படம் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அழிந்த வீடு, ஜூலை 2022

கலிஃபோர்னியாவில் கோடைக்காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல வீடுகள் தீக்கிரையாகின. ஜூலை மாத இறுதியில் மரிபோசா கவுண்டி மாகாணத்தில் ஓக் மரக்காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 200 கட்டிடங்கள் தீக்கிரையாகின. இந்த படம், காட்டுத்தீயால் அழிந்துபோன ஓர் வீட்டின் உட்பகுதியை காண்பிக்கிறது. அந்த வீட்டில் சாப்பாட்டு மேசை, நாற்காலிகள் தீயில் எரிந்த நிலையில் சில்ஹவுட்டாக காட்சியளிக்கிறது. 

யுக்ரேன் தலைநகர் கீயவ்வில் பெட்ரோல் குண்டுகளை வைத்து சதுரங்கம் விளையாடும் படையினர், மார்ச் 2022

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய இரண்டு வாரங்களில், கிழக்கு கீயவின் புறநகர் பகுதியில் யுக்ரேன் பிராந்திய பாதுகாப்புப் பிரிவினர் பெட்ரோல் குண்டுகளை வைத்து சதுரங்கம் விளையாடும் புகைப்படம் வைரலானது. உறைய வைக்கும் குளிரில் அவர்கள் சதுரங்கம் விளையாடுகின்றனர். 

சீனாவின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம், நவம்பர் 2022

சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து, வெற்றுத் தாள்களை முகத்திற்கு முன் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷின்ஜியாங் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும் எனக்கூறி இப்போராட்டம் நடத்தப்பட்டது. தங்கள் எதிர்ப்பை பொதுவெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படாததை வெளிப்படுத்தும் வகையில் வெற்றுத் தாள்கள் போராட்ட வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 

நேபாளின் காத்மண்டுவில் நடைபாதையை சுத்தம் செய்யும் பௌத்த துறவிகள், பிப்ரவரி 2022

இளம் பௌத்த துறவிகள் காத்மண்டுவின் தென்கிழக்கில் உள்ள கோதாவரியில் அமைந்துள்ள பௌத்த மடாலயம் முன்பு நடைபாதை ஒன்றை சுத்தம் செய்கின்றனர். 

நள்ளிரவில் அமெரிக்காவுக்கு செல்லும் தஞ்சம்கோரிகள், சுடேட் மிகுல் ஆலேமான், மெக்ஸிகோ, ஜூன் 2022

மத்திய அமெரிக்காவிலிருந்து தஞ்சம் கோரிகள், நள்ளிரவில் டார்ச்லைட் வெளிச்சத்தில் அமெரிக்காவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட புகைப்படம் இது. 

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு, லண்டன், பிரிட்டன், ஜூலை 2022

புதைபடிம எரிபொருள் உற்பத்திக்கு புதிய உரிமங்களை அளிக்கக் கூடாது, அதன் உற்பத்தியை நிறுத்த வேண்டும் எனக்கோரி, பிரிட்டன் அரசாங்கத்தை வலியுறுத்திவரும் ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ (Just Stop Oil) எனப்படும் சூழலியல் அமைப்பைச் சேர்ந்த இரு ஆதரவாளர்கள், நேஷனல் கேலரியில் உள்ள புகழ்பெற்ற ஓவியர் ஜான் கான்ஸ்டபிளின் ஓவியத்தைப் பிடித்திருக்கும் புகைப்படம். கிழக்கு ஆங்லியாவில் தாழ்வாக பறக்கும் விமானங்கள், கைவிடப்பட்ட கார்கள் மற்றும் பரந்து விரிந்த தார்ச்சாலை ஆகிய ஆக்கிரமிப்புகள், கான்ஸ்டபிளின் கனவை அழிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

ட்விட்டர் அலுவலகத்தில் கைகழுவும் தொட்டி ஈலோன் மஸ்க், கலிஃபோர்னியா, அமெரிக்கா, அக்டோபர் 2022

உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான ஈலோன் மஸ்க், ட்விட்டர் அலுவலகத்திற்காக வாங்கிய புதிய கைகழுவும் தொட்டியை ஏந்திச் செல்லும் வீடியோவை பகிர்ந்திருந்தார். 

அமெரிக்க உச்ச நீதிமன்றம் முன்பு கருக்கலைப்பு உரிமைக்கான போராட்டம், வாஷிங்டன் டிசி, அமெரிக்கா, ஜூலை 2022

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜூலை மாதம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, சுதந்திர தினத்தன்று உச்ச நீதிமன்றம் முன்பு சாம் ஸ்கார்செல்லோ எனும் செயற்பாட்டாளர், ரத்தம் போன்று சிகப்பு நிற வண்ணப்பூச்சை தன் உடலில் ஊற்றிக்கொண்டு போராடிய புகைப்படம் நம்மை உலுக்குவதாக உள்ளது. 

ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும் இளவரசர் ஜார்ஜ், பிரிட்டன், செப்டம்பர் 2022

ராணி எலிசபெத் செப்டம்பர் 8 அன்று மறைந்த நிலையில், அந்த துயரத்தை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் வெளியாகின. தனது கொள்ளுப்பாட்டியான ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும் இளவரசர் ஜார்ஜின் புகைப்படம் இது. விண்ட்சரை நோக்கி இறுதி ஊர்வலம் செல்லும்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 

ஸ்பெயினின் கனிசாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஆகஸ்ட் 2022

ஸ்பெயினின் கனிசாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ள புகைப்படம். கடந்த மூன்று தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீயாக இது கருதப்படுகிறது. புகைப்படத்தில் உள்ள காட்டுத்தீ ஒரு டிராகனை பிரதிபலிப்பதாக உள்ளது. 

உலகக்கோப்பையை வென்றதை கொண்டாடும் லியோனெல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினர், கத்தார், டிசம்பர் 2022

கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பின்னர் லியோனெல் மெஸ்ஸியை அர்ஜென்டினா அணியினர் தங்களின் தோள்களில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படம். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: